பதிவுகளில் அன்று: புதியமாதவியின் 'ஹே...ராம்!' கவிதைகளினூடான ஒரு பயணம்! - ரவி(சுவிஸ்) -
- பதிவுகள் இணைய இதழில் 2003இல் எழுத்தாளர் பா.ரவி (சுவிஸ்) எழுதிய புதிய மாதவியின் 'ஹேராம்'கவிதைத்தொகுப்ப்பு பற்றிய விரிவான திறனாய்வு. 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும்பொருட்டு மீள்பிரசுரமாகின்றது. -
பதிவுகள் ஜூலை 2003 இதழ் 43 -மாத இதழ்
என் கவிதையின் முகமே
என் சொந்த முகம்
என் கவிதையின் முகவரியே
என் முகவரி
முகவரி தொலைந்த
மனிதர்களுக்காகவே
என் கவிதை
பிறந்ததுகவிதாயினி புதியமாதவியின் முகவரியைத் தேடி வர நேர்ந்தபோது ஹே ராம் கவிதைத் தோப்பை வந்தடைந்தேன். முகவரி தொலைந்த மனிதர்களுக்காகவே கவிதைகள் முகம்காட்டுகின்றன. ஒடுக்கப்படும் சக்திகளின் குரலாக, உணர்வுகளின் நுனி கரையும் மென்முனைகளாக, நட்புபற்றிய மேலான மதிப்பீடாக, இயற்கையோடு மனிதமொழியில் பேசுபவளாக வரும் புதியமாதவி இந்தத் தோப்பில் -அதாவது கவிதைத் தொகுப்பில்- உலாவருகிறாள். ஆனால்,
எதற்காக எழுதவந்தேன்
தெரியவில்லை -தமிழ்
என்னால்தான் வாழுமென்றும்
சொல்லவில்லை.
.....
தமிழ் இனத்திற்காய் எழுதுகின்றேன்
இதுவே என் எல்லை.
என்று அக் கவிதையை முடிக்கிறார். கவிதைகளோ அவர் புலம்பும் எல்லைக்கும் அப்பால் சிறகசைத்துப் பறந்து திரிகின்றன. அதனால் அவை வலிமையும் பெற்றுவிடுகின்றன.
ஹே...ராம் என்ற கவிதை மனிதநேயம்கொண்ட ஒவ்வொரு மனிதனையையும் உசுப்பிவிடக் கூடிய வீச்சுக் கொண்டது.