மீள்பிரசுரம்: யாழ் பொதுசன நூலக நினைவுகள்.... வ.ந.கிரிதரன் -
ஜூன் 1, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் (தாவீது அடிகள்) மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
பொதுவாக அவ்வப்போது யாழ் பொதுசன நூலகம் பற்றிய நினைவுகள் தோன்றுவதுண்டு. இந்த நூலகத்துடனான எனது உறவு பின்னிப்பிணைந்ததொன்று. என் மாணவப்பருவத்துத் தோழர்களில் முக்கியமான தோழனாக விளங்கிய நூலகம். பன்முகப்பட்ட அறிவினை அள்ளி வழங்கிய சிறந்த நண்பன். எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று அதனை வாரி வழங்கிய நண்பன். யாழ் பொது நூலகத்தை எண்ணியதும் எப்பொழுது முதன் முதல் அதனுடனான எனது தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.
என் பால்யகாலத்தில் நான் என் ஆரம்பக் கல்வியை வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் எட்டாம் வகுப்பிலிருந்து கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பு வரை யாழ் இந்துக்கல்லூரியில் தொடர்ந்தது. வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாடசாலை விடுமுறையின்போது என் அம்மாவின் சகோதரியொருவரின் பிள்ளைகள் வவுனியா வருவார்கள். அல்லது நாம் யாழ்ப்பாணத்துக்கு ஆச்சி வீடு செல்வோம். அவ்விதம் செல்கையில் அக்கா முறையிலான எனது ஒன்று விட்ட சகோதரியொருவர் , என்னைவிட சுமார் ஏழு வயது மூத்தவர், யாழ் நூலகத்துக்கு செல்கையில் என்னைத் துணைக்கழைத்துச் செல்வார். காற்சட்டையும் , சட்டையுமாக நானும் அவருடன் செல்வேன். அக்காலகட்டத்தில் நான் பொதுவாக நடக்கும்போது மிகவும் விரைவாக நடந்து செல்வேன். என்னைத் துணைக்கழைத்துச் செல்லும் அக்காவுக்கோ என் நடை வேகத்துடன் ஈடு கட்டி நடப்பதற்குச் சிரமமாயிருக்கும். இருந்தாலும் அவரும் இயலுமானவரையில் ஈடு செய்தபடி என்னுடன் நடந்து வருவார். ஆயினும் அவ்விதம் நடந்து வருகையில் 'ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே. மெதுவாப் போடா. மூச்சு வாங்குது 'என்னும் அர்த்தப்பட வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டுதான் கூட நடந்து வருவார். அவருடன் யாழ் நூலகத்துச் சென்றதுதான் முதற் தடவை.