எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம். ரிஷான் ஷெரீப் உடனான நேர்காணல் - ஊடகவியலாளர் நஸார் இஜாஸ் -
- எம். ரிஷான் ஷெரீப் -
1. மொழிபெயர்ப்புத் துறை என்பது தனித்துவமானதாகும். நீங்கள் எழுத்துப் பணியோடு மொழிபெயர்ப்பையும் சுமக்கிறீர்கள். அந்த வகையில் ஒரு எழுத்தாளனுக்கும், மொழிபெயர்ப்பாளனுக்கும் இடையிலான புரிந்துணர்வை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ஒரு படைப்பை மொழிபெயர்ப்பதற்கு முன்பே அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளருடனான புரிந்துணர்வு சிறப்பாக இருந்தால் மாத்திரம்தான் அந்த மொழிபெயர்ப்புப் படைப்பும் சிறப்பாக அமையும் என்றே நான் கருதுகிறேன். எனது அனுபவங்களை வைத்துக் கூறும்போது என்னால் இதை உறுதியாகக் கூற முடியும். நான் மொழிபெயர்க்கும் படைப்புகளை எப்போதும் நானேதான் தெரிவு செய்வேன். நூல்களையும், படைப்புகளையும் வாசிக்கும்போதே அவை தமிழில் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் மாத்திரமே அதை மொழிபெயர்க்கத் துணிவேன்.
ஆனால் மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கும் முன்பு அந்தப் படைப்பை எழுதிய மூல எழுத்தாளரிடமிருந்தோ, கவிஞரிடமிருந்தோ மொழிபெயர்ப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களை அணுகுவேன். என்னுடனான அவர்களது உரையாடல் தொனியையும், அவர்களது மனோபாவம் மற்றும் சுபாவங்களையும் கொண்டு அவர்களை என்னால் புரிந்து கொள்ளவும், நட்பு ரீதியாக அணுகவும் முடியுமாயின் மாத்திரமே மொழிபெயர்ப்பைத் தொடங்குவேன். அவர்களது உரையாடல் தொனியோ, மனோபாவமோ, சுபாவங்களோ எனக்கு அணுக்கமாக இல்லாவிட்டால் அவர்களது படைப்பை மொழிபெயர்ப்பதைத் தவிர்த்து விடுவேன்.
அதற்குக் காரணம் இருக்கிறது. பிற மொழியில் எழுதுபவர்கள் எப்போதும் எனக்கு அந்நியமானவர்களாக, மாற்றுச் சமூக மக்களாக இருப்பார்கள். அவர்களது படைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், மொழிபெயர்ப்பின் போது கதைக்களன்கள் மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களைக் கேட்பதற்கும் அவர்களை அடிக்கடி நான் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும். அப்போது அவர்கள் அதையிட்டு சலித்துக் கொள்வார்களானால், எனக்கும் அதே சலிப்பு தோன்றி விடும். மாறாக, அவர்கள் நான் கேட்கும் சந்தேகங்கள் குறித்து உற்சாகமாக பல விடயங்களை தெளிவாக எடுத்துச் சொல்வார்களானால், எனக்குள்ளும் அதே உற்சாகம் தோன்றி மொழிபெயர்ப்பை எந்தப் பிழையுமின்றி சிறப்பாகக் கொண்டு வர என்னால் இயலுமாக இருக்கும்.