அ.ந.க.வின் மலையக இலக்கிய மற்றும் அரசியல் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -
அ.ந.கந்தசாமியின் 'நாயினும் கடையர்', 'காளிமுத்து வந்த கதை' ஆகிய கதைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். கிடைக்கவில்லை. 'நாயினும் கடையர்' வீரகேசரியிலும், 'காளிமுத்து வந்த கதை' தேசாபிமானியிலும் வெளிவந்ததாக அறிகின்றேன். உங்களுக்கு அவை பற்றிய தகவல்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள். இவற்றை வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இக்கதைகளை வாசித்தவர்கள் அவை பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இவை மலையகத்தமிழ் மக்களைப் பற்றியவை
அ.ந.கந்தசாமி மறைவதற்கு முன்னர் 'கழனி வெள்ளம்' என்னுமொரு நாவலையும் எழுதி வைத்திருந்தார். அதுவும் மலையகத் தமிழ் மக்களைப் பற்றியது. அது எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது. அதனை அவர் 83 இனக்கலவரத்தில் இழந்து விட்டார். அவரும் அந்நாவல் பற்றிய கருத்துகள் எதனையும் பதிவு செய்திருக்காததால் அதன் கதைச்சுருக்கம் பற்றியும் அறிய முடியவில்லை. அது பற்றியும் அறிந்தவர்கள் தமது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அ.ந.க வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் ஸ்தாபித்து தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர்’ என்று தனது ”ஈழத்துச் சிறுகதை மணிகள்’ நூலில் குறிப்பிடுவார் எழுத்தாளர் செம்பியன் செல்வன்.
இது பற்றிய அந்தனி ஜீவாவின் ‘சாகாத இலக்கியத்தின் சரித்திரன் நாயகன்’ ”வீரகேசரி’ ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்.” என்று பதிவு செய்யும்.