தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (22) - அத்தியாயம் இருபத்தியிரண்டு: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் இருபத்தியிரண்டு: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!
"என்ன கண்ணா ஆழ்ந்த சிந்தனை. எல்லாம் என்னைப்பற்றித்தானே?" இவ்விதம் கூறியவாறே வழக்கம்போல் கண்களைச் சிமிட்டியவாறே வந்து தோளணைத்தாள் மனோரஞ்சிதம். அவளுடலின் மென்மையில் ஒருகணம் நெஞ்சிழகியது.
"கண்ணம்மா, உன்னைப்பற்றி நினைப்பதற்கு நானுன்னை மறந்திருக்க வேண்டும்.ஆனால் நீதான் என் சிந்தையெங்கும் எந்நேரமும் வியாபித்து, கவிந்து கிடக்கின்றாயேயடி. எப்படி உன்னை நினைப்பேன்? "
வழக்கமான கேள்விதான். வழக்கமான பதில்தான். இருந்தாலும் இப்பதில் மனோரஞ்சிதத்துக்குத் திருப்தியையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தன என்பதை அவளது முகபாவமே காட்டியது.
"அப்போ, வேறெதைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தாய் கண்ணா? வழக்கம்போல் ஆகாயம் , பிரபஞ்சம், இருப்பு, காலவெளி இப்படி எதைப்பற்றித்தானே நினைத்துக்கொண்டிருப்பாய். அப்படித்தானே கண்ணா?"
"கண்ணம்மா சொன்னால் பிழையாக எதுதானிருக்கும்? இல்லையா கண்ணம்மா?"