பத்தினாதனின் ‘அந்தரம் நாவல் குறித்த எனது பார்வை. - நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -
நூல்களை வாசிப்பது என்பது எம்மை மேம்படுத்திக் கொள்வதற்கும் அறிவாந்தவர்களாக எம்மை ஆக்கிக் கொள்வதற்கும் மிக முக்கியமானது என்று கருதுகின்றேன். முன்பெல்லாம் சாமானிய மனிதர்கள்தாம் இலக்கியங்களைப் படைத்தார்கள் என்று அறிகிறோம். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களை படைத்திருக்கிறார்கள். அத்தகைய இலக்கிய வகைகளைப் பார்த்தாலும் நாவல் என்ற இலக்கிய வாகனம் மிகப் பிரதானமாகக் கொண்டாடப்பட்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகின்றது. 100 ஆண்டுகள் கால வரலாற்றைக் கொண்டது எமது தமிழ் நாவல் என அறியமுகின்றது. தனி மனித வாழ்க்கையையும் அவனின் அனுபவங்களையும் - வரலாற்றையும் இணைக்கின்ற ஒரு பாலமாக நாவல்கள் அமைவதை நான் பார்த்திருக்கின்றேன்.
அந்த வகையில் இலங்கை மன்னார் மாவட்டம் வட்டக் கண்டல் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட தொ. பத்தினாதன் அவர்களின் ‘அந்தரம்’ என்ற நாவல் குறித்து எனது கருத்துக்களை முன் வைக்கலாம் என்று எண்ணுகின்றேன். 208 பக்கங்களைக் கொண்டு ‘காலச்சுவடு’ பதிப்பகத்தினால் மிக அழகாக அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பான விடயம். நூலின் அட்டைப்படம் அந்தரத்தை அழகாக, சைகையால் வெளிப்படுத்தி நிறகின்றது.