ஆய்வு: பாரதியார் கவிதைகளில் மனித உயிர் நேயம்! - - முனைவர் பெ.கி. கோவிந்தராஜ் -
முன்னுரை
‘வற்றிப் போன உடலோடு, வெற்றுக் கனவுகளை விழியோரம் சுமந்து கொண்டு சுற்றித் திரியும் கோடிக்கணக்கான ஏழைகளுக்காகக் குரல் கொடுக்கும் கவிஞனே மக்கள் கவிஞனாக மதிக்கப்படுவான். இவ்வாறு மெலிந்தவர்களுக்காகக் குரல் கொடுப்பதென்பது எல்லாருக்கும் இயலக் கூடியதன்று. திட்டமிட்டுச் செயலாற்றும் ஒருவரால் மட்டுமே செயற்கரிய செயலை செய்ய முடியும். இதைச் செய்பவர்களின் போலிச்சாயம் காலப் போக்கில் கரைந்துவிடும். அருவியிலிருந்து பாயும் நீரைப்போல் அகத்திலிருந்து மனித உயிர் நேயம் தன்னியல்பாகப் பெருக வேண்டும். உதைத்தவனுக்குக் கால் வலிக்குமே என்று கவலைப்படாமல் உதைபட்டவனுக்கு உடம்பிலும் மனதிலும் காயம்பட்டு விட்டதே என்று கவலைப்படுவதே மனித உயிர் நேயம் ஆகும் அத்தகு மனிதநேயம் பாரதியின் ஊனும் உயிரும் கலந்த பாக்களுக்குள் இழையோடுகிறது.
சமூக விடுதலையோடு, அடிமைப்பட்ட இந்தியத் தாய்த்திருநாட்டின் விடுதலையை பாடிப் பறந்த குயில் பாரதியார் ஆவார். அவருடைய கவிதைகளில் மணம்வீசும் மானித உயிர் நேயத்தை காண்பதே இக்கட்டுரையின் நேக்கமாகும்.
மனிதம் - சொல்விளக்கம்
மானுடநேயம், மானுடம், மனிதம் என்று மனிதநேயத்தைக் குறிப்பிடுவார்கள். அன்புதான் மானுட வளர்ச்சியின் ஆணிவேர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டும் பண்பாடு தமிழகத்தில் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. தனக்கென வாழாமல் பிறர் நலனுக்காகவே வாழ்ந்து வரலாறாகி மிளிர்பவர்கள் பலர். சமயங்கள் பற்பல தோன்றிய தமிழ் நிலத்தில், யாவரும் கேளிர் என்ற நன்னெறியும் தழைத்து விளங்கியது.
‘மனம் என்ற சொல்லின் அடியாகவே மனிதன் என்ற சொல்லும் தோன்றியிருக்க வேண்டும். மனத்தை உடையவன் மனத்தன் என்றிருந்து பின்பு மனிதன் என்றாகியிருக்கலாம். அதுவே முதல் நீண்டு மானிடன் என்றும் ஆகியிருத்தல் வேண்டும்” (டாக்டர் அ. ஜெகந்நாதன், பாரதிதாசனில் மார்க்சியம், ப.48)என்று கரு.நாகராசன் ‘தமிழர் கண்ட மனம்” நூலில் கூறியதை சி.இராகவேந்திரன் வழிமொழிகிறார். மனிதன் என்ற சொல் ‘மனிதம்” ஆக மாறி மனிதநேயத்தைக் குறிக்கிறது என்பர்.