கம்பராமாயணத்தில் காவிரி! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை - 61 -
முன்னுரைஇந்தியாவின் மிகச் சிறந்த ஆறுகளில் ஒன்று காவிரி. இந்துக்கள் இதைப் புண்ணிய நதியாகக் கருதி வழிபாடுகள் செய்கின்றனர்.காவிரி ஆறு பற்றி பட்டினப்பாலை, புறநானூறு, பொருநராற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம்,போன்ற பல நூல்களிலும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. கம்பர் காவிரி நாட்டினர். வளமான இயற்கையை எங்குக் கண்டாலும், பொன்னி ஆற்றையும், பொன்னான சோழநாட்டையும் ஒப்பிட்டு மகிழ்வார். கம்பர் காலத்திலும் காவிரிஆறு, கங்கை ஆற்றுக்கு ஒப்பானது என்று மக்கள் கருதி வந்தனர்.கம்பரும் கங்கையை நினைவு கூறும்போதெல்லாம் காவிரியையும் நினைவு கூருகின்றார். அவ்விடங்களில் சிலவற்றை ஆராய்வோம்.
காவிரி ஆறு வந்த வரலாறு
கா- என்றால் சோலை.தான் செல்லும் இடமெல்லாம் பசுமையான சோலைகளை விரித்துச் செல்வதால் “காவிரி” என்று பெயர். பொன்னி ஆறு என்று அழைக்கப்படுகிறது.காவிரி நதியின் நீரில் பொன் தாது அதிகம் இருப்பதால் இது ’பொன்னி’ என அழைக்கப்படுகிறது. சப்த ரிசிகளில் ஒருவர் அகத்தியர். அகத்தியரால் கமண்டலத்தில் சிறைபிடிக்கப்பட்ட காவிரி நதி, காக்கை உருவில் வந்த விநாயகரால் விடுவிக்கப்பட்டதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அகத்தியன், எட்டுத் திசைகளும் ஏழு உலகங்களும், அங்குள்ள உயிர்களும். நற்கதி அடையும்படி தனது கமண்டலத்தில் இணையற்ற காவிரி ஆற்றைக் கொண்டு வந்தவன். அந்த அகத்தியன்
“எண்திசையும் ஏழ் உலகும் எவ் உயிரும் உய்ய
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான்”
(அகத்தியப்படலம் 161),
கம்பர் பஞ்சவடியை வருணித்து வியந்த போதும் 'பொன்னி' பற்றிப் புகன்றது நினைந்து மகிழத் தக்கது.