இலண்டனூடாக கங்காரு தேசம் - 4 - ஶ்ரீரஞ்சனி -
- கங்காருவும் கட்டுரையாசிரியரும் -
அடுத்த நாள், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, சேற்று நிறத்தில் ஓடும் யாரா ஆற்றையும், வழியெங்கும் நீண்டுயர்ந்திருந்த மரங்களையும் பார்த்தபடி நடந்தும், Tramஇல் ஏறியும் இறங்கியும், வேறுபட்ட கட்டிட அமைப்புக்கள் நிறைந்த மெல்பேர்ன் நகரைச் சுற்றிப்பார்த்தபோது மூன்று விடயங்கள் எனக்கு அதிசயத்தைத் தந்தன. நகரின் மத்தியில் காரை நிறுத்துவதற்குப் பணம்செலுத்த வேண்டியிருக்கவில்லை, நகரின் மத்திக்குள் Tramஇல் இலவசமாகப் போக்குவரத்துச் செய்யமுடிந்தது, அத்துடன் இலவசமான இணையவசதிகள் சாலையோரத்தில் அங்கங்கேயிருந்தன. பின்னர் மதியவுணவுக்காக அருகிலிருந்த சரவணபவனுக்குப் போனோம். வட இந்திய உணவுகளை மட்டுமே அங்குண்ணலாம் என்றானபோது, சரவணபவன் என அவர்கள் பெயரிடாமலிருந்திருந்தால், நாங்கள் ஏமாந்திருக்க மாட்டோமே எனச் சலித்துக்கொள்ள மட்டுமே எங்களால் முடிந்தது.
அன்று மாலையில் என்னைச் சந்தித்த பூபதி அண்ணா, ATBC வானொலிக்காக எழுத்தாளர் கானா பிரபா என்னைப் பேட்டி காண்பதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதை ஞாபகப்படுத்திச் சென்றிருந்தார். மின்கணினிக்கூடாக என்னைப் பேட்டிகண்ட கானா பிரபா என்னைப் பற்றிய இலக்கிய விபரங்களை முன்பே சேகரித்து வைத்திருந்து வித்தியாசமாகவும் சிறப்பாகவும் அதனைச் செய்திருந்தார். மறுநாள், என் பாடசாலையான மகாஜனக் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான ரோகிணி ரீச்சரின் மகனும், எங்களின் அயல் வீட்டுக்காரருமான ராஜன், Twelve Apostles என்ற இடத்துக்கு என்னைக் கூட்டிப்போயிருந்தார்.