1
என் தங்கை கலையரசிக்கு திருமணமான கையோடு , அவளும் கணவரும் கனடாவுக்கு குடிவந்து விட்டார்கள். அவர்களது வீட்டின் மூன்றடுக்கு மாளிகையின் மொட்டை மாடியில், வெற்றுத் தரையில், அகலக் கால்பரப்பி, ஆகாயத்தைப் பார்த்தபடி, மல்லாந்த நிலையில் படுத்திருக்கின்றேன். காற்றின் தாலாட்டால் கண்கள் சுழலக், கடந்துபோன நினைவுகளின் தாலாட்டால் நெஞ்சம் சுழன்றது.
சுமணாவதி கண்டியிலே சிங்களப் பள்ளிக்கூடம் ஒன்றில், வரலாறு (சரித்திர) பாடம் கற்பிக்கும் ஆசிரியை. நானோ தமிழகத்தில் திருநெல்வேலியில் வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியன். முகம் பார்த்துப் பேசும் அலைபேசியோ, அல்லது சாதாரண அலைபேசியோ புழக்கத்துக்கு வராதிருந்த காலம் அது. முன்பின் அறிமுகமில்லா உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களுடன் தொடர்புகொண்டு, உள்ளப்பரிமாற்றம் செய்கின்ற கருவியாக, “பென் பிரெண்ட்” என ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற “பேனா நண்பர்” தொடர்புக் கலாச்சாரம் அன்றய நடைமுறையில் அமோகமாக இருந்தது. தொடர்புகொள்ள விரும்புபவர்கள், தமது பெயர்,விலாசம் மற்றும் படிப்பு, தொழில் போன்ற இதர சூழல்பற்றிய விபரக் குறிப்புக்களை பத்திரிகை, சஞ்சிகை போன்ற ஊடகங்களின்மூலம் தெரியப்படுத்துவார்கள். அவற்றில் தமக்குப் பிடித்தமான விபரங்கள் கொண்ட நபரை, மற்றய நபர் தொடர்புகொண்டு தனது பேனா நண்பராக ஆக்கிக்கொள்வார். இந்த வகையில்தான் வரலாற்றுப்பாட ஆசிரியர்கள் என்னும் முறையில், என் முகவரிக்கு முதன்முதலில் கடிதம் அனுப்பினாள் சுமணாவதி.
எழுத்துக்கள் எல்லாமே முத்துமுத்தாக இருந்தன. சொற்குற்றம் ஏதுமில்லாமல் இத்தனை அழகாக தமிழில் , ஒரு சிங்களப் பெண்ணால் எப்படி எழுத முடிகிறது? ஒருவேளை, தமிழ் நண்பர்கள் யார்மூலமாவது எழுதுவிக்கின்றாளோ என்ற சந்தேகம் உள்ளிட, இருப்புக்கொள்ள முடியாமல் கடிதத்தில் கேட்டேவிட்டேன். பத்தாம் வகுப்புக்கான தமிழ்பாட பரீட்சையில் திறமையான பெறுபேறு பெற்ற சான்றிதழைப் போட்டோ எடுத்து, தனது குடும்பப் போட்டோவையும் சேர்த்து தபாலில் அனுப்பியிருந்தாள்.
நடுவிலே நாற்காலியில் அப்பா அமரதுங்க, பின்னால் அண்ணி கீதா, அவரது கையில் ஐந்து வயதுக் குழந்தையாக ராகுல, அடுத்து அண்ணன் நிசங்க மல்ல, அடுத்து சுமணாவதி. அப்பாவின் நெஞ்சோடு அணத்தபடி அம்மாவின் படம்.பெயர் : மெனிக்கா. இதிலே, அண்ணன் நிசங்கமல்ல, கனடாவில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகின்றான். அப்பா கண்டியிலே பில்டிங் கன்ராக்டராக இருக்கின்றார். தவிர, தங்களின் வீட்டிலுள்ள தொலைபேசியின் எண்ணையும் குறிப்பிட்டு, தன்னோடு தமிழிலே பேசும்படி எழுதியிருந்தாள்.
எங்கள் வீட்டிலும் தொலைபேசி வசதி இருந்ததனால், தொலைபேசிச் செயலகத்தில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து, அப்போதெல்லாம் அரைமணி நேரமல்ல…. ஆறுமணி நேரம் காத்துக்கிடந்துகூட பேசினேன்…. பேசினோம். அதனை ட்ரங் கால் என்பார்கள். ஐயம் தீர்ந்தது. அது சுமணாவதிதான். எங்களைப்பற்றிய விபரங்களுடன் எங்கள் குடும்ப போட்டோவையும் அனுப்பினேன். பிறந்த காலத்திலிருந்து, கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்புவரை தாங்கள் கொழும்பில் குடியிருந்ததாகவும், தங்களுக்குப் பக்கத்து வீட்டுக் குடும்பம், தமிழகத்து கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுடன் நெருங்கிப் பழகியதால், தானும், அண்ணனும் தமிழில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்துகொண்டதாகவும், தெரிவித்தாள்.