எழுத்தாளர் சீர்காழி தாஜ் பற்றிய நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -
- எழுத்தாளர் சீர்காழி தாஜ் -
எழுத்தாளர் அமரர் சீர்காழி தாஜ் அவர்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தமிழக எழுத்தாளர்களிலொருவர். அவரது படைப்புகள் பல பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. 'தமிழ்ப்பூக்கள்' என்னும் பெயரில் வலைப்பதிவினை நடத்தி வந்தவர். அவ்வலைப்பதிவு தற்போதும் இயங்குகின்றது.
எழுத்தாளர் தாஜ், கலை,இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் 'நடு' கோமகன், நுணாவிலூர் கா.விசயரத்தினம் (பதிவுகளில் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆக்கங்கள் பல எழுதியவர்) போன்றவர்களின் மறைவுகள் யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் நடந்தவை. அதனால் அவர்களின் மறைவுச் செய்திகள் வெளியானபோது அவற்றை உள்வாங்குவது சிரமமாகவிருந்தது.
எழுத்தாளர் தாஜுடனான தொடர்பு ஏற்பட்டது பற்றிச் சிறிது கூறவேண்டும். முதலில் அவர் என் படைப்புகளின் வாசகராகவே எனக்கு அறிமுகமானார். தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா' (சிறுகதைத்தொகுதி), நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல்) ஆகியவற்றைத் தமிழக நூல் நிலையங்களிலிருந்து பெற்று வாசித்து எனக்கு அவை பற்றி நீண்ட கடிதங்களை எழுதினார். அக்கடிதங்களை இன்னும் பாதுகாப்பாக என் கைவசம் வைத்துள்ளேன்.
இவ்விதம் எனக்கு அறிமுகமான தாஜ் அவர்கள் வைக்கம் முகம்மது பசீரின் ' எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலை நான் தேடிக்கொண்டிருந்தபோது 'டொரோண்டோ'விலுள்ள அவரது நண்பர் ஒருவரினூடு அனுப்பி வைத்தார். அதனை இன்னும் அவர் நினைவாக வைத்துள்ளேன்.