பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (4) - மீஜி ஷின்டோஆலயம் - நடேசன் -
மீஜி சின்ரோ ஆலயம் ( Meiji Shrine ) யப்பான் செல்பவர்கள் தவிர்க்க முடியாத இடம். அதாவது இந்தியாவில் புது டெல்கியில் பிர்லா மந்தீர் என பிர்லாவின் பெயரால் கோவில் இருப்பது போல் இங்கு மீஜி என்ற யப்பானிய மன்னரின் பெயரால் இந்த ஆலயம் உள்ளது . இந்த ஆலயம் மன்னரால் கி.பி. 1800 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் இருப்பது, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மரங்களால் உருவாக்கப்பட்ட 175 ஏக்கர் காட்டுக்குள்ளே நாம் நடந்து போக வேண்டும். இந்த காடு இருக்கும் நிலம் ஆரம்பத்தில் மன்னருக்கு சொந்தமானது .
நாங்கள் போனபோது பகல், இலையுதிர்காலத்து மம்மல்ப் பொழுதாகக் கசங்கி விட்டது. ஆனாலும் அக்காலத்தில் மட்டும் தெரியும் அருங்காட்சி : வானத்தை நோக்கி எரியும் தீக்கொழுந்துகளாக தெரிந்த யப்பானிய மாப்பிள் இலைகளைக் கண்களால் தரிசிக்க முடிந்தது. இயற்கையழகு எம்மை சுற்றிவரக் காடாகச் செழித்திருக்கும் இந்த இடத்திலுள்ள ஆலயம் வனத்திடையே மரத்தால் கட்டப்பட்ட அழகான கட்டிடம். நமது ஊரில் போல் கோயில் கட்ட இயற்கையை அழிக்கவில்லை.
இதுவே யப்பானில் பெரிய சின்ரோ ஆலயமாகும். கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் புதுவருடத்திற்கு முன்னைய நாளிலும் புதுவருட தினத்திலும் இங்கு வருவார்கள் . இந்த ஆலயங்களில் எங்கள் ஊரில் திருமணங்கள் நடப்பது போன்ற சடங்குகளும் நடக்கும். பிள்ளை பிறந்தால் அல்லது வயதுக்கு வந்தால் இங்கு அது ஒரு வைபவமாக நடக்கும்: எங்கள் கோயில்களில் நடக்காதது. மரணக்கிரியைகளை சின்ரோ ஆலயங்களில் நடத்த முடியாது. ஆனால் , பௌத்த ஆலயங்களில் நடத்தலாம் என வழிகாட்டி கூறினார்.மனிதர்களில் வாழ்வின் தருணங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. ஆலய வளாகத்தின் உள்ளே சென்றதும் தெரிந்தது: ஆலயத்தின் முன்பு ஒரு பலகை தொங்கியது. அதில் மடித்த கடுதாசிகள், பழங்களாகத் தொங்கின. நெருங்கிப் பார்த்தபோது புரிந்தது: நீங்கள், உங்கள் எதிர்கால விருப்பங்களை, வேண்டுதலை எழுதிப் போட முடியும். நான் ஒன்றை நெருங்கிப் பார்த்தபோது, விக்டர்- ஆன் இருவரது பெயர் எழுதி அதன் கீழ் அவர்கள் காதல் நிலைக்க வேண்டும் என ஒரு கடுதாசியில் எழுதியிருந்தது. அதாவது ஜப்பானியரைப் பின்பற்றி எங்களைப்போல் ஊர் பார்க்க வந்தவர்கள் எழுதியிருக்கிறார்கள் என நினைத்தேன்.