நேர்காணல் பகுதி ஐந்து : ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
கேள்வி: அடுத்து…?
பதில்: அடுத்து, பல ஓவியர்கள் பொறுத்து நாம் கதைக்கலாம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் கதைப்பதென்றால் இப்பேட்டி அதிகளவில் நீண்டு விடும்.
கேள்வி: அப்படியென்றால் ஒரு தலையாய ஓவியரை பற்றி கதைப்பதற்கு முன் உங்களுக்கு பிடித்தமான வேறு இரண்டொரு ஓவியர்களை பற்றி சுருக்கமாக கூறுவீர்களா?
பதில்: டேகாஸ், சிசிலி, பிசாரோ - இவர்களை பற்றி நான் கதைக்க ஆசைப்படுகிறேன். ஆனால் இவர்களை பற்றி நீளமாய் கதைக்காமல் நவின ஓவியர் என கருதப்படும் ஓவியர் பிக்காசோவை பற்றி கதைப்பது பயனுடையது என்று நினைக்கின்றேன்.
கேள்வி: பிக்காசோவை பற்றி கதைப்பதற்கு முன் மிக சுருக்கமாக, இரண்டொரு வரிகளில் டேகாசை பற்றி கூறுவீர்களா?
பதில்: டேகாஸ் பெலே நடன பெண்களை வரைவதில் பிரசித்தம் பெற்றவர். கிட்டத்தட்ட 1500 பெலே நடன பெண்களின் ஓவியங்களை அவர் வரைந்துள்ளார். ஆனால் அங்கே பெண்களின் உடலமைப்புகளை பற்றிய சித்திரத்தை விட கூடிய அளவில் தொனிப்பது அவர்கள் ஏதோ ஒரு வகையில் அடக்கப்பட்டதின் ஆதிக்க முறைமையே. அவர் தீட்டியுள்ள ஓவியங்களில் பெண்களின் முகங்களிலும் மலர்ச்சி காணப்படவில்லை. அவர்கள் வெறுமனே ஆட்டுவிக்கப்படுவதாகத்தான் அவரது காட்சிப்படுத்தல்கள் காணக்கிட்டுகின்றன.