ஆய்வு: இன்ப, துன்ப உணர்வில் தலைவன் நெஞ்சொடு கிளத்தல் - திருமதி கு.வளா்மதி, உதவிப் பேராசிாியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி. -
முன்னுரை
மாந்தர் தனக்குத்தானே மனதுக்குள் பேசுவதும், தனக்குத்தானே வாய்திறந்து பேசுவதும் ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்’ எனப்படும். சங்கப்பாடல்களில் காணப்படும் நெஞ்சொடு கிளத்தல் மற்றும் தனிமொழியில் அமைந்த பாடல்களை ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் எனும் நிலையில் ஆராய இயலுகின்றது. சங்கஅக-புறப்பாடல்களில்;, ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல்’ என்ற அடிப்படையில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் அமைந்துள்ளது. சங்க அகப்பாடல்களைப் புறப்பாடல்களுடன் ஒப்பிடும் போது மாந்தர்கள் தனக்குத் தானே பேசுவதாக அமைந்துள்ள பாடல்கள் அகஇலக்கியங்களிலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. களவுக்காலத்திலும், கற்புக்காலத்திலும் தலைவன் - தலைவிக்கு இடையிலான பிரிவின்போதே தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சூழல் மிகுதியும் உருவாகின்றது. இதன் காரணம் பிரிவே, உணர்ச்சியை மிகுவிக்கிறது எனலாம். மாந்தர் கேட்போர் யாருமின்றி தன்னந்தனியாக நின்று பேசுவது ‘தனக்குத்தானே பேசுதல்’ எனப்படும். இம்முறை சங்க இலக்கியங்களில் ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி’ என்ற சொற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் இன்ப, துன்ப உணர்வில் தலைவன் நெஞ்சொடு கிளத்தல் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.
நெஞ்சொடு கிளத்தல்
அகமாந்தர் பிரிவுத்துயரத்தினால் தனிமையில் தன் நெஞ்சிற்குக் கூறும் நிலை ‘நெஞ்சொடு கிளத்தல்’ ஆகும். நெஞ்சொடு கிளத்தலில், நெஞ்சுக்குக் கூறுபவரின் நனவுமனச் செயல்பாடுகளும் நனவிலி மனவுணர்வுகளுமே ஒன்றுக்கொன்று எதிர்கொள்கின்றன. தொல்காப்பியர், களவிலும் கற்பிலும் தலைவன், தலைவியின் கூற்றுகளை வரையறுக்குமிடத்து ‘நெஞ்சொடு பேசுவதும்’ அவர்களுக்கு உரியது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை,
“நோயும் இன்பமும் இருவகை நிலையில்
காமம் கண்ணிய மரபிடை தெரிய
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய
உறுப்புடை யதுபோல் உணர்வுடையது போல்
மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும்”1
என்ற நூற்பா விளக்குகின்றது. சங்க அகப்பாடல்களில் தலைவன், தலைவி இருவருமே நெஞ்சொடு பேசுவதைக் காணமுடிகிறது.