வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்! மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை! - முருகபூபதி -
இலக்கியப்பிரவேசம் செய்த ( 1972 ) காலப்பகுதியில், நான் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார். அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழு நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன். சார்வாகன், அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனனே சொன்னார்.
மகாபாரதத்தில் குருஷேத்திர களத்தில் கௌரவர்களை அழித்து வெற்றிவாகைசூடிய பாண்டவர்கள், தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில் அந்தச் சபையிலிருந்து எழுந்து, அந்த வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சித்தவர் சார்வாகன் என்ற முனிவர். அவரது கூற்றால் வெகுண்டெழுந்த மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம். சார்வாக மதம் என்ற புதிய கோட்பாடு உருவானது என்றும் பாஞ்சாலியும் அந்த மார்க்கத்தை பின்பற்றியதாக கதை இருப்பதாகவும் சார்வாகன் என்ற புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன் சொன்னபொழுது மகாபாரதத்தின் மற்றுமொரு பக்கத்தை தெரிந்துகொண்டேன். துணிவுடன் தனக்கு சரியெனப்பட்டதைச் சொன்ன, சார்வாகன் பற்றிய முழுமையான கதையை பல வருடங்களின் பின்னரே இலக்கியப்பிரதியாக படித்தேன்.