1
எதிர்பார்க்கப்பட்டாற்போல், 149 குடியரசு கட்சியினரும் (Republicans) 165 ஜனநாயக கட்சியினரும், இணைந்து, ஒருமித்தாற் போல், அமெரிக்க காங்கிரசில் வாக்களித்து, அமெரிக்கா உலகில் பெறக்கூடிய, “கடன் எல்லையை”, 31.4 ட்ரில்லியன் டாலருக்கும் மேலே பெறலாம், என்று உயர்த்தி உள்ளனர். இப்படி உயர்த்தி விட்டதால், இனி தமது ராணுவத்துக்கு, அல்லது நடந்து கொண்டிருக்கும் ஓர் உக்ரைன்-ரஷ்ய போரில், உக்ரைனுக்கு, “உதவி” என்ற பெயரில் தான் வழங்குவதாய் கூறிக்கொண்டிருக்கும் நிதியை தொடர்ந்து வழங்குவதில் எந்த ஒரு தடங்கலும் ஏற்படப்போவதில்லை என்பது தெளிவு.
மொத்தத்தில், அமெரிக்க-ஆங்கிலேய-ஜெர்மனிய ஆயுத வியாபாரிகளின் பைகள் நிரம்ப போகின்றன என அவர்கள் மகிழ்ந்து கொள்ளும் நடைமுறையில். காசடிக்கும் இயந்திரங்களும், வட்டி வீதங்களை உயர்த்தும் வங்கிகளும், இறைமுறிகளை விற்று தீர்க்கும் மும்முரமும், ரொம்பவே, நேரமற்று, செயலில் இறங்க போகிறது என்பது தெளிவு.
சுருக்கமாக கூறினால், இந்த வாக்கெடுப்பு ஒற்றுமை நிலையானது, இவ்விரு கட்சிகளின் அரசியலானது, அடிப்படையில் போலித்தன்மை கொண்டது-போலியானது என்பதனையும், அது வேறு ஏதேனும் அரசியல் நலனை பிரதிபலித்து நிற்பது என்பதும்–எந்த ஒரு அடித்தள மக்களின் அரசியலையும் இது ஒரு சிறிதும் பிரதிபலிப்பது அல்ல–என்ற எண்ணப்பாடும், மேற்படி நடவடிக்கைகளால் (வாக்களித்ததற்கூடு) இன்று வெகுஜனமய படுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசியல்தான், மேற்கின் அனைத்து வெகுஜன ஊடகங்களிலும், திறைசேரி அதிகாரிகளிலும் (Janet Yellen அம்மையார் உட்பட), மற்றும் வெளிநாட்டு கொள்கைகளிலும் பிரதிபலித்து நின்று–எப்படி ‘கோடிகளை’ திரட்டி தமக்கு பதவி தரும் ஆயுத வியாபார-கோடீஸ்வரர்களின் காலடியில் சமர்ப்பிப்பது என்பதற்கான, சதி திட்டத்தை உருவாக்கி கொள்கின்றன-இவற்றில் இருந்து வீசப்பட்டு, பொறுக்கி எடுக்கப்படும் எலும்பு துண்டுகளோடு, வாசம் நிகழ்த்துவது திருப்தி தருவதாகவே உள்ளது எனும் கூட்டமும் மகிழ்ந்திருக்க. ஆனால், இத்திட்டங்கள் அல்லது இவ் அரசியல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட உகந்த சூழ்நிலை உலகில் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டி உள்ளது. இதன் ஒரு வெடிப்பே, உக்ரைன்-ரஷ்ய போர் என்பதையே இக்கட்டுரை தொடர் வாதிக்க முனைந்த விடயமானது.