நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்' பற்றி முகநூலில்... - வ.ந.கிரிதரன் -
சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனத்தினர் எழுத்தாளர் மாலன் தொகுப்பில் வெளியிட்டிருந்த 'புவி எங்கும் தமிழ்க் கவிதை' (2019) நூலில் இடம் பெற்றுள்ள எனது கவிதை 'நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'. இக்கவிதை எது பற்றிப் பேசுகிறது, இக்கவிதையிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நான் என்ன நினைத்து எழுதினேன் என்பதைக் கூறினால் அது உங்களது சுதந்திரமான புரிதலுக்குத் தடையாக இருக்குமென்பதால் அதனை இங்கு தவிர்த்துக்கொள்கின்றேன். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கவிதைகளைத் திரட்டித் தொகுத்துள்ளார் மாலன். தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் மற்றும் அவர்கள்தம் கவிதைகள் பற்றிய விபரங்கள் இறுதியிலுள்ளன.
கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! - வ.ந.கிரிதரன் -
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
விரிவொளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ, நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.
இரவு வானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திர சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கிறேன்.
எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன் காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று பின்
உனைப் புரிதல்தான்.