விதை குழுமத்தின் அறிதலும் பகிர்தலும் 09 - தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் நிகழ்வுக்கான அழைப்பு!
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், இனக்குழும மோதல்கள் பற்றி ஆய்வு செய்யும் துறைசார் அறிஞர்கள் இனக்குழும பன்மைத்துவம் [ETHNIC DIVERSITY] காணப்படும் பகுதிகளில், இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத புதிர் [PUZZLE] தன்மையுடைய அனுபவ யதார்த்தத்தைக் கண்டனர். சில பிராந்தியங்கள் [REGIONS], தேசங்கள் [NATIONS], சில நகரங்கள், சில கிராமங்கள் ஆகிய பகுதிகளில் ஒரு கால எல்லைக்கு முன் இனக்குழுக்களிடையே அமைதி பேணப்பட்டு வந்ததையும், வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டிருந்ததையும் அவதானித்தனர். இப்பகுதிகளில் பின்னர் இடைவிடாது நம்பவே முடியாத வகையில் வியப்பையும் அதிர்ச்சியையும் தரும் வகையிலான இன வன்முறை, சூறைக் காற்று போல் வீசியடித்து கோர தாண்டவம் ஆடிவிட்டுப் போவதையும் கண்டனர். இதனை இனத்துவமும் தேசியவாதமும் [ETHNICITY AND NATIONALISM] பற்றிய தீர்வுகாணப்படாத புதிர் [UNRESOLVED PUZZLE] என்று குறிப்பிடுவதோடு 'காலமும் இடமும் [TIME AND SPACE] சார்ந்த வேறுபாடுகளை புரிந்து கொள்வது எப்படி?' என்னும் வினாவை வார்ஷ்னே [VARSNEY] என்ற ஆய்வாளர் தமது நூல் ஒன்றில் முன்வைக்கிறார். [பேராசிரியர் உயன்கொடவின் 2010 இல் வெளியான நூலின் பக்-22 இல் தரப்பட்ட மேற்கோள்].
மேலே குறிப்பிட்டது போன்ற விடுவிக்கமுடியாத புதிர்கள் பல உள்ளன. இப்புதிர்களை விடுவிப்பதற்குத் தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் [THEORIES OF NATIONALISM] உதவ முடியுமா? என்ற வினாவை முன்வைத்து 'அறிதலும் பகிர்தலும்' அரங்கில் 9 ஆவது உரையாடல் நிகழ்வு இடம்பெற உள்ளது. ஆதிமுதல்வாதம் [PRIMORDIALISM], நவீனத்துவ வாதம் [MORDENISM], இனக்குழும குறியீட்டுவாதம் [ETHNO-SYMBOLISM], கருவிவாதம் [INSTRUMENTALISM] போன்ற தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களையும் எரிக் ஹொப்ஸ்பாம், பெனடிக்ட் அன்டர்சன், அந்தனி டி.சிமித் போன்ற கோட்பாட்டாளர்களின் கருத்துக்களையும் முன்வைத்து சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் இவ்வுரையாடலை நிகழ்த்துவார். நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க இருப்பவர் திரு. சத்தியதேவன்.