வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளின் 41ஆவது நினைவு தினம்! 1983 ஜூலை 25 – 27 – 28 ஆம் திகதிகளில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக ! தாயகம் முதல் புகலிடம் வரையில் அலைந்துழலும் ஈழவிடுதலைக் கனவைச் சுமந்த ஆத்மாக்கள்! - முருகபூபதி -
ஐந்து வருடங்களுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு பிரான்ஸில், எனது மதிப்பிற்குரிய ஆசான் ( அமரர் ) பண்டிதர் க. மயல்வாகனன் அவர்களின் நூற்றாண்டு விழா நடந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் அதற்கு என்னையும் அழைத்திருந்தனர். அங்கு பயணமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், எனது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவந்த ஒரு அன்பர் என்னுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டார். அவரது பெயரைப்பார்த்துவிட்டு, அந்தப்பெயரில் இலங்கையில் எவரையும் எனக்குத் தெரியாதிருந்த நிலையில், “ தமிழ்நாட்டில் நீங்கள் எவ்விடம்? “ எனக்கேட்டிருந்தேன். அவர் தமிழ்நாட்டில் சிறிதுகாலம் வசித்திருந்தாலும், அவரது பூர்வீகம் இலங்கையில் வடபுலம்தான் என்பதை தெரிந்துகொண்டேன்.
இலங்கையில் நீடித்த இனப்பிரச்சினையும் இனவிடுதலைப் போராட்டமும் அவரையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. இந்தப்போராட்டத்தில் அவரும் ஒரு இயக்கத்தில் இணைந்திருந்தவர். அத்துடன் அறிவுஜீவி. தொடர்பாடலின் ஊடாக அவரும் பிரான்ஸிலிருப்பதை அறிந்துகொண்டேன்.
நான் அங்கு சென்றதும் என்னைத்தேடி வந்து சந்தித்தார். அவருக்கு நான் ஏற்கனவே எழுதியிருந்த சொல்லமறந்த கதைகள், சொல்லவேண்டிய கதைகள் ஆகிய நூல்களை கொடுத்தேன். அவற்றைப் பார்த்துவிட்டு, தன்னிடமும் சொல்லவேண்டிய கதைகள், சொல்ல முடியாத கதைகள் ஏராளமாக இருப்பதாகச் சொன்னார்.