அஞ்சலிக்குறிப்பு: மொழிபெயர்ப்பாளர் தேவாவின் மறைவு! ஈடு செய்யப்படவேண்டிய இழப்பு!! - முருகபூபதி -
கடந்த நான்காண்டுகாலமாக ( 2019 – 2022 ) தொடர்ந்தும் அஞ்சலிக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். மீண்டும் இந்த ஆண்டு ( 2023 ) முதல் இந்தவேலையை தொடக்கிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார் மொழிபெயர்ப்பாளர் தேவா. இவரது இயற்பெயர் திருச்செல்வம் தேவதாஸ். சந்திப்பதற்கு நான் பெரிதும் விரும்பியிருந்த ஒருவர்தான் தேவா. இவருடன் உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டதே என்ற சோகம் மனதை வாட்டுகிறது. இவரது சிறந்த மொழிபெயர்ப்பில் வெளியான இரண்டு நூல்களை படித்து, எனது வாசிப்பு அனுபவத்தை ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். முதலாவது உகண்டாவைச் சேர்ந்த சைனா கெய்ரெற்சி எழுதிய தன்வரலாற்றுச் சித்திரிப்பான குழந்தைப்போராளி என்ற நாவல். மற்றது இலங்கையைச் சேர்ந்த கடற்படைத் தளபதி அஜித்போயாகொட எழுதிய சிறை அனுபவங்களான நீண்ட காத்திருப்பு. இரண்டு நூல்களுமே போரின் அனுபவங்களை பேசியவை.
தேவா , இவற்றை ஆங்கில மூலத்திலிருந்து அவற்றின் உயிர் சிதையாமல் தமிழுக்கு வரவாக்கியிருந்தார். இவை தவிர, அம்பரயா, அனோனிமா, என்பெயர் விக்டோரியா முதலானவற்றையும் தமிழுக்குத் தந்தவர்.
தேவாவின் மொழி ஆளுமை விதந்து பேசப்படவேண்டியது. பெரும்பாலான மொழிபெயர்ப்பு நூல்கள், படிக்கும்போது அயர்ச்சியை தந்துவிடும். ஆனால், தேவாவின் மொழிபெயர்ப்புகள் தொடர்ந்தும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிக்கொண்டிருக்கும். அவர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்திருப்பவர். அதனால் அவருக்கு பிரெஞ், டொச் மொழிகளும் நன்கு தெரிந்திருக்கிறது. அம்மொழிகளிலிருந்தே நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்க்கும் ஆற்றலும் பெற்றிருந்ததாக அறிய முடிகிறது.
மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவா, சுவிட்சர்லாந்திலும் சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார். மீண்டும் தாயகம் திரும்பிய பின்னரும் இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டவர். இம்மாதம் 26 ஆம் திகதி தேவாவின் இறுதி நிகழ்வுகள் தலைமன்னாரில் நடந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேவா மொழிபெயர்த்த நூல்களை கருப்பு பிரதிகள், வடலி, பூபாளம் முதலான பதிப்பகங்கள் வெளியிட்டன. தேவாவின் மொழிபெயர்ப்பில் நான் படித்த குழந்தைப்போராளி நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவ பதிவுக்கு, “ சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் ! வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை ! “ எனத்தலைப்பிட்டிருந்தேன்.