சயந்தனின் ஆறாவடு – ஒரு பார்வை! - கலாநிதி சு. குணேஸ்வரன் -
புலம்பெயர்ந்தோர் படைப்புகளில் அரசியல் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டனவாக 80கள் முதலே பல புனைவுகள் வெளிவந்துள்ளன. இதற்கு ஈழத்திலும் தமிழகத்திலும் வெளிவந்த ஈழத்தவரின் முன்னோடிப் படைப்புகளை ஒருமுறை நினைவு கொள்ளலாம். மு. தளையசிங்கத்தின் ‘ஒரு தனிவீடு’ தொடக்கிவைத்த அரசியல் சார்ந்த வெளிப்பாட்டின் தொடர்ச்சியை அருளரின் ‘லங்காராணி’யில் காணமுடிந்தது. அதேபோல் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ ஆகியவற்றுக்கூடாக போராட்ட இயக்கங்களின் உள்ளரசியல் பேசப்பட்டது. ஆனால் இவ்விரண்டு போக்குகளைக் கடந்தும் இணைந்தும் பல படைப்புக்கள் 2009 இற்கு முன்பின்னாக வெளிவந்துள்ளன. இவை யாவும் அரசியல் சார்ந்த புனைவுகள் என்ற ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடியவை.
ஈழத்தில் மண்வாசனை நாவல்கள் வெளிவந்த காலத்தைத் தொடர்ந்து 1950 கள் முதல் மொழியுரிமை மற்றும் இனமுரண்பாடு சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தியும் பல நாவல்கள் தோன்றின. ஒரு புறத்தில் தமிழ்த்தேசிய ஆதரவு சார்ந்த எழுத்துகளும் மறுபுறத்தில் இயக்க உள்ளரசியல் முரண்பாடுகளைப் பேசிய படைப்புகளும் இன்றுவரையிலும் தொடர்கின்றன. அதேவேளையில் இரண்டு போக்குகளுக்கும் அப்பால் மாற்றுச் சிந்தனை என்ற வகையிலும் கணிசமான படைப்புகள் வந்துள்ளன. அவற்றுள்ளும் நுண்ணரசியலை வெளிப்படுத்தும் வித்தியாசங்களை அறியமுடியும். கருத்தியல் அடிப்படையிலும் புனைவின் தீவிரத்தன்மையிலும் தமிழ்ச்சூழலில் ஈழப்படைப்புகளைக் கவனங்கொள்ள வைத்த பல நாவல்களை இவற்றுக்கு உதாரணங் காட்டலாம். இந்த வகையில் ஒரு பொதுத்தளத்தில் கடந்த காலச் செயற்பாடுகளைப் பதிவு செய்த அல்லது விமர்சித்த நாவல்களின் வரிசையில் வந்து சேரக்கூடியதாகவே சயந்தனின் ஆறாவடு அமைந்திருக்கிறது.
1987 முதல் 2003ற்கு இடைப்பட்ட காலத்தைக் களமாகக் கொண்டு ஆறாவடு நாவல் இயங்குகின்றது. இரண்டு சமாதான ஒப்பந்தங்களுக்கு இடைப்பட்ட காலங்களிலுங்கூட தமிழ்மக்கள் எவ்வாறான இன்னல்களை அனுபவித்தார்கள் என்பதனையே நாவலின் கதைக்காலம் குறிக்கின்றது.
“நிகழ்கால நடப்பியலைச் சித்திரிப்பதற்கு கடந்த காலத்தின் மீதான விசாரணைகள் அதன் தாக்கங்கள் அதன் மீதான தீர்ப்புகள் கடந்த காலம் முடிந்தேறிவிட்ட ஒன்றா அல்லது இன்னும் அது நிகழ்காலத்தின் மீது நிழல் விழுத்தி நிற்கிறதா என்பது பற்றிய தெளிவு என்பனவெல்லாம் அவசியமானவை.” (யமுனா ராஜேந்திரன், ஈழத்து அரசியல் நாவல்கள்) என்ற கூற்று கடந்த காலத்தை ஏன் எழுதவேண்டும் என்பதற்கான பதிலாக அமைந்திருக்கிறது.