முன்னுரை
இறைவனின் படைப்பில் இவ்வுலகில் பல விலங்குகள் இன்பமாக வாழ்ந்து வருகின்றன. கம்பர் தம் இராமாயணத்தில் சில விலங்குகள் குறித்தும் அவற்றின் பண்புகள், இயல்புகள் குறித்தும் கூறியுள்ளார். அவற்றுள் ஆடு,ஆட்டுக்குட்டி, செம்மறிஆடு, வெள்ளாடு,ஆட்டுக்கடா, வரையாடு, பசு, எருமை, எருமைக்கடா, எருது, பன்றி, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, குரங்கு,நீர்க்குரங்கு, நாய்,நீர்நாய், கழுதை, கோவேறு கழுதை, குதிரை, கவரிமான், நவ்வி மான், புள்ளிமான், சிங்கம், புலி, யானை, நரி,குள்ளநரி, கரடி, ஒட்டகம், எலி, பச்சோந்தி, ஆமை, பூனை, ஆமா, காட்டுப் பசு, ,ஓந்தி, உடும்பு,அணில்கள், யாளி,முயல் ஆகிய விலங்குகள் குறித்துக் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை ஆராய்வோம்.
1. ஆடு
அனுமனின் வலிமையைக் கண்டு அஞ்சிய அரக்கர் கொல்கின்ற புலியினாலே துரத்தப்பட்ட ஆடுகள், அடைந்த துன்பத்தையே அடைந்தார்கள். பழமையான இலங்கை நகரம் அனுமனால் எரிந்தது.
“சூடுபட்டது தொல் நகர் அடு புலி துரந்த
ஆடுபட்டது பட்டனர் அனுமனால் அரக்கர்”
(இலங்கை வேள்விப் படலம் 516)
1.1 ஆட்டுக்குட்டி
முல்லை நிலத்து இடையர்கள் ஆட்டுக்குட்டியுடன் சிற்றிலையுடைய மரத்தடியில் ஒதுங்கியிருந்தனர்.திருடர்களைப்போல மறைந்துத் திரிவனவான பெரும்பேய்களும் ஒடுங்கி முட்கள் போலக் கூர்மையான பற்களை மென்று தின்ற வண்ணம் மிகுந்த பசியுடன் இருந்தன.
“வள்ளி புடை சுற்று உயர் சிற்றிலை மரந்தோறு
எள்ள வருமறிக் குருளொடு அண்டர்கள் இருந்தார்”
(கார்காலப்படலம் 521)
1.2. செம்மறி ஆடு
மென்மை உடைய பெண் செம்மறி ஆடுகள் பெற்ற அச்சம் அற்ற வரிகள் அமைந்த கொம்புகளை உடைய வலிமையான தலைகளையுடைய ஒன்றுக்கு ஒன்று சமமான கடாக்கள் ஒன்றை ஒன்று மோதின.