ஆய்வு: வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (1) - கலாநிதி சு. குணேஸ்வரன் -
1.1 அறிமுகம்
மனித வாழ்வு முழுவதும் ஏற்றமும் இறக்கமும் விரவிக் கிடக்கின்றன. அவ்வாழ்வில் ஏற்படும் சோதனைகளால் மனிதன் துவண்டு போகின்றான். செய்வதறியாது சோர்ந்து போகின்றான். அச்சோர்வை நீக்க ஆடலும் பாடலும் கேளிக்கையும் கூத்தும் தோற்றம் பெற்றன. “ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது அங்கே ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது” என்ற அழகான பாடல் வரிகள்கூட இவற்றையே மெய்ப்பிக்கின்றன. கிராமப்புற மக்கள் தமது ஓய்வு நேரத்தைக் கலைவாழ்வில் செலவழித்தனர். அவ்வேளைகளில் தமக்குத் தெரிந்த ஆற்றல்களைப் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறுதான் கலைச் செயற்பாடுகள் தோற்றம் பெற்றன.
நாடகக் கலையும் இன்பமூட்டக்கூடிய ஒரு கலைதான். மக்களின் வாழ்க்கை முறையிலும் வழிபாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் எவ்வாறு மண்ணின் வேர் பிணைந்திருக்கிறதோ அவ்வாறே நாடகக் கலையாலும் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் வரலாற்றையும் தலைமுறை தலைமுறையாகக் கடத்த முடிந்திருக்கிறது.
கடவுள் வழிபாட்டில், காதலில், பிரிவில், வெற்றியில், தோல்வியில், மொழியில், இலக்கியத்தில் என இன்னோரன்ன அம்சங்களுடன் இந்தப்பண்பு இணைந்திருக்கின்றது. ஒரு சமூகத்தின் பண்பாட்டை அறிய வேண்டுமாயின் அவர்தம் கலைகளைச் சீர்தூக்கிப் பார்த்தாலே கண்டுகொள்ளலாம் என்று கூறுவர். ஆதிகால மனிதர்களின் குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பித்த இந்தப் பண்பு வரலாறு முழுவதும் நீண்டிருக்கிறது.
நாடகக் கலையானது பாராம்பரியமும் பழமையும் மிக்கதொரு கலையாக இருக்கிறது. அது கூத்துக் கலையாக ஆரம்பித்து நாடகமாகி அரங்கியற் கலையாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. மக்களின் சிந்தனையைத் தூண்டவும், அவர்களை ஒரே கொள்கை நோக்கித் திரட்டவும் இதனால் முடிந்திருக்கிறது. இன்று ஒருவருக்குத் தொழில் வாய்ப்பைத் தேடிக் கொடுக்கின்ற கற்கைத் துறையாகவும் உயர்ந்திருக்கிறது. இவ்வாறான கலைத்துறையில் தன்னை அர்ப்பணித்த வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகம் சார்ந்த பணிகளை மதிப்பிடுவதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.