அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள். இந்நாளில் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண்ணின் நினைவுகள் எழுகின்றன. எந்தை, தாயுடன் கழித்த இனிய தருணங்கள் நினைவுக்கு வருகின்றன.
என் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். வீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா (நடராஜா நவரத்தினம் - நில அளவையாளராகப் பணி புரிந்த காலத்தில் அவரைப் பலர் 'Tall Nava' என்று அறிந்திருக்கின்றார்கள்). தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக 'ஷெல்ஃப்' ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணன், பி.ஜி வூட்ஹவுஸ், டி.இ.லாரண்ஸ் ('லாரண்ஸ் ஒஃப் அராபியா' (Lawrence of Arabia), டால்ஸ்டாய் என்று பலரின் நூல்கள் அவரது 'புக் ஷெல்வ்'வில் இருந்தன.
கல்கி, குமுதம், விகடன், ராணி, ராணி முத்து, பொன்மலர், பால்கன், சுதந்திரன்ம், ஈழநாடு, தினமணி, The Hidnu, கலைமகள், மஞ்சரி, பொம்மை, பேசும்படம், தினமணி, தினமணிக்கதிர் என்று தமிழில் வெளியான வெகுசன சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளால் வீடு நிறைந்து கிடந்தது. ஒரு தடவையாவது வாசி என்று அவர் கூறியது இல்லை. சூழல் எம்மை வாசிக்க வைத்தது. போட்டி போட்டு வாசித்தோம்.
ராஜாஜியின் வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன், பாரதியார் பாடல்கள் அடங்கிய முழுத்தொகுப்பு, புலியூர்க்கேசிகனின் சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை போன்ற சங்க இலக்கிய நூல்கள் இவை எப்போதும் வீட்டில் இருக்க வேண்டிய நூல்கள் என்று வாங்கி வைத்தார். ஆரம்பத்திலேயே இவற்றுடனான தொடர்பு ஏற்படக் காரணம் அப்பாவின் இப்போக்குத்தான். அப்பாவுக்கு இராமாயணம், மகாபாரதத்தின் மீதிருந்த ஈடுபாடு எதுவரை இருந்ததென்றால் எங்கள் அனைவருக்கும் பெயர்கள் வைக்கும் அளவுக்கு இருந்தது. கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி, தேவகி இவை அனைத்தும் அந்த ஈடுபாட்டின் விளைவுதான்.