நினைவுகூரல்: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது! - இந்து.லிங்கேஸ் -
குளிர்காலம்போய் வெயில் வந்தவுடனே ஒரு சந்தோஷம். எனக்குள்ளே இரண்டு மடங்கு உஷார். அவனை நினைக்கும் போதெல்லாம் அவனைக் காணவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் மனதிற்குள் நெருக்கு நெருக்கு என்றிருக்கும். இருட்டுறதுக்கு முன்னர் போனால்தான் முழுமையான ஒரு சந்திப்பை உருவாக்க முடியும். அவனை ஒருதரமேனும் ஏற இறங்க ஆசைதீர பார்க்க முடியும். அவனை நினைக்க உற்சாகமாக இருந்தது. தினமும் மாலையில் காலாற நடந்து செல்லும் அதேபாதையில் தடம் பதிக்கின்றேன். என்னைத் தினமும் சந்திக்கும் அந்த உயிர் கோடையின் ஆரம்பத்தில் மீண்டும் உயிர் பெற்றிருந்தது. என் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தன . இவன் மட்டும் எப்படி என் உறவோடு கலந்தான்? எனக்கும் இவனுக்குமுள்ள உறவுதானென்ன? எந்த உறவில் இவன் உறவைச்சேர்ப்பது? தொப்புள்கொடி உறவிலா? இரத்த உறவிலா? அம்மா வழிச் சொந்தத்திலா? இல்லை அப்பாவழி பந்தத்திலா? 'யார்இவன்? இத்தனை சொந்தங்களையும் மீறிய அர்த்தமுள்ள, ஆதரவான, ஆச்சரியமான, உணர்வுபூர்வமான சொந்தமானவன்.
இதே உறவு ஊரிலும் எமக்கிருந்தது. இதனால்தான் இவனைப்பார்க்கும்போதெல்லாம் அதே நினைவு. ஊரில் இருந்த அதே உறவின் சாயல் இவனிலும் இருக்கப்போய்த்தான் இவ்வுயிரையும் ஒரு நாளைக்கு ஒருக்காத்தன்னும் காண வேணும் போல மனம் கிடந்து துடிக்கும் .இவனைக்கண்டாலோ பழசுகள் மனசை வந்து ஒரு தட்டுத்தட்டும். இவனை மாதிரித்தான் ஊரில் அவனும் விருட்சமாக வளர்ந்து அடிப்பாகம் அகன்று மூன்று பகுதிகளாக நிலத்துடன் ஆழப் பதிந்திருந்தான். அவன், இவன், நான் அதில் குந்துவோம்.மற்றவன், இன்னொருவன் சைக்கிள் சட்டத்தில் சாய்ந்திருப்பார்கள். மாணிக்கவாசருக்கு குருந்தமரம், புத்தபெருமானுக்கு போதிமரம், எங்களுக்கு இந்த அரசமரம். பசளையிட்டு நீர்ப்பாய்ச்சி அந்தமரம் வளரவில்லை.மழைநீரில் அந்த மரம் வளர்ந்தது. பசளையாய் எம் பேச்சு இருந்தது. எமது முன்னோர் சிலரும் அந்த மரத்தின் அடியில் குந்தியிருந்து கதை பேசியிருக்கலாம். நாமும் கதைப்போம்.