நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் பற்றி ... - நந்திவர்மப்பல்லவன்-
இலங்கையென்னும் நாட்டில் அனைத்து மக்களும் சரிக்கு சமமாக இணைந்து வாழ்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையினை நீக்குவோம். புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம். அதுவரை மாகாண சபையினை இயங்க வைப்போம். அரசியல் கைதிகளை விடுவிப்போம். ' இவ்விதம் பல வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளைக் கேட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு இன, மத, மொழி பேதமின்றி மக்கள் 2/3 அறுதிப் பெரும்பான்மையினை வழங்கியிருக்கின்றார்கள். பெரு வெற்றியை ஈட்டிய அவருக்கும் , ஏனையோருக்கும் வாழ்த்துகள். அநுர குமார திசநாயக்கவுக்கு இனித் தன் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்குத் தடைகள் எவையுமில்லை. அவர் அவற்றை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.
அவருக்குப் பெரு வெற்றியைக் கொடுத்த தமிழ் மக்கள் மட்டக்களப்பு மூலம் எச்சரிக்கையொன்றையும் கொடுத்திருக்கின்றார்கள். தன்னை நம்பி வாக்களித்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம். மகிந்த ராஜபக்சவுக்குக் கொடுக்காத வெற்றியை அநுர குமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ளார்கள். இவ்வெற்றியைப் படிக்கல்லாக வைத்து நாட்டின் அனைத்துப் பிரச்னைகளையும் அவர் தீர்க்க வேண்டும். தீர்த்தால் வரலாற்றில் சரித்திர புருசனாக நிலைத்து நிற்பார். தவறின் வரலாறு மீண்டுமொரு தடவை சுழலும் பழைய இடத்தை நோக்கி.