கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் பற்றிய நினைவுக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் தனது பவளவிழாவையும், பிறந்தநாளையும் நேற்று கொண்டாடினார். அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். இத்தருணத்தில் அவரைப்பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்கின்றேன். அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தது யாழ் பல்கலைக்கழகத்தில். நண்பர் ஆனந்தகுமார் அப்போது அங்கு படித்துக்கொண்டிருந்தார். யாழ் இந்துக்கல்லூரியில் எனக்கு அவர் ஒரு வருடம் சீனியர். பால்ய காலத்திலிருந்து அறிமுகமான நட்பு. அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை கற்றுக்கொண்டிருந்தேன். 80/81 வருட மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையின் இதழாசிரியராகவிருந்தேன். 'நுட்பம்' சஞ்சிகைக்கு கலாநிதி கா.சிவத்தம்பி, கலாநிதி க.கைலாசபதி ஆகியோரிடமிருந்து ஆக்கங்கள் வேண்டி அங்கு நண்பருடன் சென்றிருந்தேன். அப்பொழுது ஆனந்தகுமார் மூலம் அறிமுகமானவர்தான் அப்போது அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த மு.நித்தியானந்தன் அவர்கள்.
அப்போது அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மலையக மாணவர்கள் வெளியிட்டிருந்த சஞ்சிகையொன்றினைக் காட்டினார். அதன் பெயர் மறந்து விட்டது. ஆனால் அதன் வடிவமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக உள்ளடக்கம் ஆ, ஆ .. வரிசையில் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அது பற்றிக் கேட்டபோது அதனைச் சித்திரா அச்சகத்தில் அச்சடித்ததாகக் கூறினார். அப்பொழுது எனக்கும் ஒரு சிந்தனை ஏற்பட்டது. அச்சஞ்சிகை போலவே 'நுட்பம்' சஞ்சிகையினையும் அச்சடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தால் எழுந்த சிந்தனையே அது. எனக்கும் மொறட்டுவைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அலைவதில் சிரமமிருந்ததால் எங்களுக்கும் 'நுட்பம்' சஞ்சிகையை அவர் ஏற்கனவே சித்திரா அச்சகத்தில் அச்சடித்த சஞ்சிகை போன்றதொரு வடிவமைப்பில் அச்சடித்துத் தர உதவ முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் மனம் உவந்து உதவ முன்வந்தார். அத்துடன் அவரே சித்திரா அச்சக உரிமையாளரை எனக்கு அப்போது அறிமுகப்படுத்தினார்.