யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களின் 'தாலி' சிறுகதைத் தொகுப்பு - நூல்நயம்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் –
'நாம் விரும்புகின்றவையும் திட்டமிடுபவையும் எப்போதும் நடந்து விடுவதில்லை .விரும்பாதவையும் எதிர்பாராதவையும் நடந்து விடுகின்றன ' . யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அம்மையாரின் 'தாலி' சிறுகதைத் தொகுப்பில் படைப்பாளியின் உரை இவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. தத்துவார்த்தமான வசனங்கள் மட்டுமல்ல, சிறுகதைத் தொகுப்பின் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகவும் இதுவே அமைந்துள்ளது.
யுத்தமும் இடம்பெயர்வுகளும் பேரழிவுகளும் உயிரிழப்புகளும் யாரும் விரும்பிப் பெற்றவை அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அமைந்தவையும் அல்ல. சர்வதேச அரசியல் சதிகளினாலும் மனச்சாட்சியற்ற உள்நாட்டு அரசியல் வாதிகளாலும் திட்டமிட்டே வடிவமைக்கப் பட்டவை. ஆனாலும் அப்பாவிப் பொதுமக்களுக்கு இவை எதிர்பாராதவை. விரும்பத் தகாதவை. பத்து சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு, 'நெல்லியடி பரணி அச்சகத்தின்' வெளியீடாகும். தமிழ்ப் பாரம்பரியத்தின் உணர்வு பூர்வமான குறியீடாகவும் முக்கியமான சிறுகதையின் தலைப்புமான 'தாலி' அட்டைப் படத்தினை அலங்கரிக்கிறது.
இனப்பிரச்சனை சார்ந்த வன்முறைகளில், மிகக் குறைந்த அனுபவங்களையே கொண்டிருக்கும் பலரால், இவ்வாறான பயங்கரங்கள் உணரப்படுவதற்கு இலக்கியத்தின் மூலம் பங்களிப்பை நல்கும் இவரைப் போன்ற எழுத்தாளர்களின் பணி பெறுமதி மிக்கது. யுத்த வன்முறைகள் இயல்பு வாழ்வினை பலிவாங்கிய கடந்த காலங்களில், மக்களின் வாழ்வியல் எவ்வாறு அதனை உள்வாங்கியது என்பதே இத்தொகுப்பின் முக்கிய பேசுபொருள். எளிமையான யதார்த்த நடை எழுத்தாளரின் அனுபவச் சிறப்பினை உணர வைக்கின்றது. எனினும் ஆழ்ந்த கலாசார பாரம்பரிய சிந்தனைகளுக்கும், பெண்ணியம் சார்ந்த மனோதத்துவங்களுக்கும் இடம் கொடுக்கும் இரு முக்கிய கதைகளான 'தாலி`, 'மலை முகடுகள் சரிக்கப்படுகின்றன', ஒப்பீட்டுக்கு உரியவை. இக்கதைகள் பல கேள்விகளை மனதில் எழுப்பவும் தவறவில்லை.