குரு அரவிந்தனின் காதலர் தினக் கதைகள்!
1. என் காதலி ஒரு கண்ணகி
நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க வைத்தன. இவ்வளவு அருகில், மிக அருகில் வானவில்லை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அற்புதம்! இல்லை அதிசயம்! மாலை நேரத்து வெயிலில் நீர்த் துளிகள் பொன்மயமாக, சொர்க்க வாசலில் நுளைவது போல படகு மெல்ல மெல்ல ஆடி அசைந்தது. இயற்கையின் அதிசயத்தில் என்னை மறந்து என்னை அறியாமலே எழுந்து நின்று கண்களை மூடி, இரண்டு கைகளையும் முன்னே நீட்டி, ‘ஆகா..!’ என்று மெய்மறந்தேன்.
மறுகணம் படகு போட்ட ஆட்டத்தில், நான் தடுமாற எனக்கு முன்னால் நின்ற அவளும் தடுமாறி என் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள். கண்ணை மூடிக் கற்பனையில் இருந்த நான் என்ன நடந்தது என்று அறியாமலே, விழுந்திடுவேனோ என்ற பயத்தில் கைக்குள் அகப்பட்ட அவளை இறுக அணைத்துக் கொண்டேன். வெண்மேகப் பொதியோ? அந்த இதமான சுகத்தில் ஒருகணம் என்னை மறந்தேன். ‘ஸ்ருப்பிட்..!’ என்றாள் தன்னை விடுவித்துக் கொண்டு.
சற்றும் எதிர்பாராத வார்த்தை, தானே வந்து என் கைக்குள் விழுந்து விட்டு என்னைத் திட்டினாள்;. யாரென்றே தெரியாமல் கட்டி அணைத்தது என் தப்புத்தான், சமாளித்துக் கொண்டு,‘சொறி’ என்றேன், கோபத்திலும் அவள் ஆழகாய் இருந்தாள். கத்தும் குயிலோ இல்லை எழில் தோற்றத்தில் மயிலோ?