ஓராயம் அமைப்பின் ஆதரவில் நடந்த மெய்நிகர் நிகழ்வு: 'பண்பாடும் வீட்டு வடிவமைப்புகளும்' - வ.ந.கிரிதரன் -
அண்மையில் எழுபதுகளில் யாழ் இந்துவில் கல்வி கற்று , உலகமெங்கும் பரந்து வாழும் மாணவர்களில் சிலர் உருவாக்கிய அமைப்பான 'ஓராயம்' அமைப்பின் ஆதரவில். 'பண்பாடும் வீட்டு வடிவமைப்புகளும்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட மெய்நிகர் நிகழ்வினைக் கனடாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் தர்மகுலராஜா ஒருங்கிணைந்து நடத்தினார். இந்நிகழ்வில் கட்டடக்கலைஞர்களான மயூரநாதன் (யாழ்ப்பாணம்), குணசிங்கம் (ஆஸ்திரேலியா) மற்றும் சிவகுமார் (கனடா) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்டடக்கலையும் அதன் மீதான பண்பாட்டின் தாக்கமும் பற்றிய நல்லதொரு நிகழ்வு. இதில் முதலில் உரையாற்றிய மயூரநாதன் வீட்டு வடிவ அமைப்பில் பண்பாட்டுக் கூறுகளான உணவுப்பழக்கம், அன்றாடச் செயற்பாடுகள், சிறப்பு நிகழ்வுகள், நம்பிக்கைகள், குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்புகள், வெளியாருடனான தொடர்புகள், தனிமைக்கான தேவை மற்றும் சமூகத்தகுதி வேறுபாடுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி , அவற்றில் குடும்ப உறுப்பினர்கள், வெளியாருடனான தொடர்புகள், சமூகத்தகுதி வேறுபாடுகள் என்பவற்றின் அடிப்படையில் நல்லதோர் உரையினைப் போதிய வரைபடங்கள், புகைப்படங்கள் உதவியுடன் நடத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய கட்டடக்கலைஞர் குணசிங்கம் கட்டடக்கலைஞராகப் பணியாற்றிய தனது சொந்த அனுபவங்கள், தனது இளமைக்காலத்தில் தான் அனுபவித்த யாழ்ப்பாண வீடுகள், மாந்தர்களுடனான தொடர்புகள் பற்றி நனவிடை தோய்ந்து, தன் உள்ளத்தில் சுமைகளாகக் காவிக்கொண்டிருக்கும் தன் இளமைக்கால வீடுகளின் பண்பாட்டுக் கூறுகளைத் எவ்விதம் புதிதாக அவர் வடிவமைக்கும் வீடுகளில் பாவித்தார் என்பதை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டினார்.