1
தினக்குரலின் பொங்கல் வெள்ளி இதழ் (14.01.2022) தனது தலைப்பு செய்தியாக, (கொட்டை எழுத்துக்களில்) பின்வரும் செய்தியை தீட்டியிருந்தது: “மோடிக்கான கடிதம் முற்றாக மாற்றம்” கடிதம் இறுதியாக்கப்பட்டு, தினங்கள் கழிந்த நிலையில், மேற்படி ‘கொட்டை எழுத்தை’, ‘தலைப்பு செய்தியாக’ வாசிக்கும் வாசகனில், மேற்படி செய்தி பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், இதனைவிட அடுத்த அடியே, செய்தியாளரின் மரண அடி கொடுக்கும் அவாவினை பேசுவதாய் இருந்தது: “இதனை செய்தது தமிழரசு கட்சியே – சுமந்திரன்”
கிட்டத்தட்ட, மூன்று பத்திகளாக (Columns) ஓடிய, 71 வரிகொண்ட, மேற்படி செய்தியில், சுமந்திரனால் ஆற்றப்பட்டதாக கூறப்படும் கூற்றை, முழுமையாக வாசித்து பார்த்தால், இக்கூற்றின் 71 வரிகளில், கடைசி ஆறே ஆறு வரிகள் மாத்திரமே இக்கடித தயாரிப்பில் தமிழரசு கட்சி இடைநடுவே ஈடுபட தொடங்கியது என்பதும், இடைநடுவே ஏற்பட்ட அத்தகைய பங்களிப்பை தொடர்ந்து, கடித அமைப்பின் நோக்கம் - அதன் கோரிக்கை – அதன் தலையங்கம் - இவை மாற்றம் கண்டன என்பனவும், மேற்படி செய்தியில் சுமந்திரன் ஆற்றிய கூற்று கூறப்பட்டிருந்தது.
அதாவது, இந்நீண்ட அறிக்கையின் கடைசி மூன்றே மூன்று வரிகளில் மாத்திரமே தமிழரசு கட்சி, அறிக்கையில், இடைநடுவே செய்த, நோக்கம்-கோரிக்கை–தலையங்கம் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன. தமிழரசு கட்சி போன்ற கட்சியானது இடைநடுவே சேர்ந்த பின், - இம்மாற்றங்கள், எதிர்ப்பார்க்கக்கூடிய ஒன்றே. இது ஒரு புறம் இருக்க, இதன் மிகுதி பகுதியான, 65 வரிகளும் பின்வரும் விடயங்களை விஸ்தாரமாக விவாதித்தன.