பட்டினப்பாலையில் வணிகம்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
முன்னுரைதமிழகம் நீர், நிலப்பொருள் வளங்களைக் கொண்டுள்ளது. பொருள் ஆதாரமாக, அடித்தளமாக இருக்குமானால் அது மற்ற நாடுகளை விடச் சிறந்ததாகத் திகழும். இதற்கு, அங்கு நிகழும் வணிகம் முக்கியமான காரணமாக அமைவதே ஆகும். இத்தகைய வியாபாரம் (வணிகம்) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மண்ணிலும் நடந்துள்ளது. இது குறித்துச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றுள் பட்டினப்பாலை குறிப்பிடும் வணிகம் குறித்த செய்திகளை இக்கட்டுரை கூறுகிறது.
ஒரு நாடு குறையாத விளைச்சல், நடுநிலைமையாளர், சோர்வற்ற வணிகர் என்று இருக்குமானால் அது வளமுடையதாகக் காட்சியளிக்கும் என்ற கருத்தமைந்த பாடலைக் குறள் புலப்படுத்துகிறது.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு (கு.எண்.731)
இதன் வழியாக வணிகரின் மேன்மையை அறிய முடிகிறது.
பெருங்குடி
வணிகர் மிகுதியாக இருந்த பூம்புகார், புகழாகிய சிறப்புக் கொண்ட அரசரின் மதிப்புக்கும், பெருமைக்கும் உரியதாய், இம்மக்களைக் கொண்டு பயன்பெற்று விளங்கியது. இதைப் 'பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" என்ற தொடர் வலியுறுத்துகிறது. வணிகர் தம் குடிக்கு ஏற்ற ஒழுகலாறைக் கைக்கொண்டு, அதிலிருந்து சிறிதும் பிறழாதவராய்த் திகழ்ந்தனர். இவர்கள் அறவழியில் சேர்த்த பொருளில்லாதவர்களுக்குத் தந்தனர். அதன் பயனாகப் போகப் பூமியில் மகிழ்ச்சியை அடைபவர் போல் தோன்றினர்.