இலங்கை அரசின் மீனவர்கள் மீதான தாக்குதல்களும், இந்தியாவின் அமைதியும்!
அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் , கொல்லப்படுவதும் உபகண்ட அரசியலை அவதானித்து வருபவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்து வருகின்றது. உலக அரங்கில் இராணுவ மற்றும் பொருளியல்ரீதியில் பலம் பொருந்திய வல்லரசுகளிலொன்றாகப் பரிணமித்துவரும் பாரதம் எதனால் தனது மண்ணின் முக்கியமானதோரினத்தின் கடற்றொழிலாளர்கள் மீது , அதுவும் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாக ஆழியினுள் அலைக்கழிந்து, வாழ்க்கையினையோட்டிச் செல்லும் வறிய தொழிலாளர்கள் மீது நடாத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை உறுதியாகத் தட்டிக் கேட்காமலிருந்து வருகின்றது என்னும் கேள்வி அரசியல் அவதானிகள், தமிழ் மக்கள், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் எழுவது நியாயமானதுதான். ஒருவரா, இருவரா ... கடந்த பல வருடங்களாக இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வந்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமானதாகும். இந்திய மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கு இன்றைய அரசியல் சூழலில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் அபாயகரமானதொரு சமிக்ஞை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் காட்டிய கண்டிப்பையும், தீவிரத்தையும் ஏன் இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்கள் விடயத்தில் காட்டவில்லை என்ற கேள்வி நியாயமானதே.