உயிரினத்தின் பரிணாம நிலை, செயல்கள் யாவும் அடிப்படையில் இயல்பு விதிக்குள் அகப்பட்டு கிடக்கிறது. ஆம், உயிர்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு இணைந்து இன்ப வாழ்வுதனில் தழைக்கும் இயற்கை இன்ப விதியாம் காதல் : அது இயல்பான ஈர்ப்பு நிலை : காந்தமானது நேர் துருவமும் எதிர் துருவமும் ஒன்று மற்றொன்றை ஈர்த்துக் கொள்வது போல ஒரு ஆண் உயிரி பெண் உயிரியையோ பெண் உயிரி ஆண் உயிரியையே புற பார்வையிலிருந்து தொடங்கி அகத்துக்கு அடைப்பட்டு ஒன்று மற்றொன்றோடு இணைந்து விடுகிறது.
அந்த இயல்புணர்ச்சியில் தேடலை முடிந்த வரையிலும் மூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கி சமூகத்தில் சிலரால் அழிக்கப்பட்டே வந்தது, வருகின்றது. சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டதாயினும் சமூகத்தால் மறுக்கப்பட்டு கொலைக்களத்தினில் நிறுத்தி முறையற்ற கொலைதனை மூலைமுடுக்கெங்கும் செய்து வருவதே கண்கூடு.
காதலைச் செய்யாதார் உலகில் எவருமில்லை: செய்யாதவர் (அதற்கு) உரித்தான மனிதர் இல்லை: காதலைப் பற்றிப் பாடாதவர் எவருமில்லை: வாய் கிழிய பேசாதவர் உலகில் எவருமில்லை: இன்றைய உலகில் தொலைக்காட்சி, திரைப்படம், வானொலி என யாவும் தகவல் தொடர்பியல் காதலை பரப்புரை செய்யும் கலைகளாய் முன் நிற்கிறது. எனினும் ‘காதல்’ ஏற்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? என்பதில் பொருள் அடங்கிக் கிடக்கிறது.
பண்டைய காலத்தில் சங்க இலக்கியம் 2381 பாடலுள் 1862 பாடல் காதல் பாடல்களே. இன்று வரையுங் கூட சமூகப் பாடல்களை விட காதல் பாடல்கள்தான் மிகுதி என்பது நாம் அறிந்ததுதான்.
“காதல் நிகழ்வில் ஒருவன் தன்வயப்படும் போது அது அவனுக்கு சிறப்புத் தான். தன் குடும்பத்துள் வேறொருவரால் நடந்தால் அது வெறுப்புத்தான்.”
காதல் வரலாற்றில் துன்பவியலே மிகுதி! காதல்! காதல்! காதல்! காதல் போயின் சாதல் என்றான் பாரதி. ஆனால் காதல் காதல் காதல,; காதல் செய்யின் சாதல்” என்று கூறுமளவிற்கு வன்மம் தலைவிரித்தாடிக் கொண்டே இருக்கிறது. உலக வரலாற்றில் காதல் வாழ்க்கை துன்பத்தையே அடைந்து அம்பலப்பட்டிருக்கிறது.
பண்டைய தமிழகத்தில் காதலைப் பற்றி தொல்காப்பியரும், சங்க இலக்கிய புலவர் பலரும் எடுத்துரைத்த முறைகள் மிகுந்த சிறப்பிற்குரியது. எனின், அக்காதல் நிகழ்வு யாருக்கெல்லாம் பொருந்தும் என்று கூறும் இலக்கண அடிகளிலிருந்து தான் சமூகச் சிக்கலை இனங்கண்டு கொள்ள முடிகிறது. அடிப்படையில்,
அகம்
“சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்” (தொல். பொருள். I நூ. 53) என்ற உன்னத சிந்தனையோடு, காதலைப் பற்றி எடுத்துரைக்கும் போது எந்த ஒரு தனிநபர் பெயரையும் சுட்டிக் கூறுதல் கூடாது என இலக்கணம் பகர்கிறது.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
காமக் கூட்டங் காணுங் காலை” (தொல். பொருள். II நூ. 89) என்று இன்பம், பொருள், அறம் என்று இன்பத்தையே முதல் நிலையாக கொண்டனர்.
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல். பொருள். II நூ. 219) என்று இன்பம் இயல்பான தன்மையானது என்றும், எல்லா உயிர்கட்கும் இது பொதுவானது என்றும் போற்றி கூறினர்.
“செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறுந்தொகை பா. 40)
என்று செம்புலத்தில் விழுந்த நீர் செம்புலத்தில் இரண்டற கலப்பது போல ‘காதல் உறவு’ என்று ஏற்றினர்.
உலகில் காதலின் ஆழத்தை வேறு எவரும் கூற முடியாத அளவிற்கு தமிழர்களே உலகில் திறம்பட வருணித்திருக்க முடியும். அதுவும் இயற்கை, இயற்கையொடு இணைந்த வாழ்வை வாழ்ந்ததற்கு முதற்பொருள், அதற்கு உரித்தான கருப்பொருள், உரிப்பொருளே முதன்மைச் சான்று. எனின், இப்படி சிறப்புற காதலைப் போற்றும் பழந்தமிழகத்தில் சில நெருடலான கருத்துக்களையும் காண முடிகிறது. இக்கருத்தே நம்முள் பல வினாக்களை எழுப்புகிறது.
உதாரணமாக,
“ஒன்றி உயர்ந்த பால தாணையில்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே” (தொல். களவு. நூ. 1039)
என்ற பாடலில், முந்தைய ஊழ்வினையின் காரணமாக ஒத்தத் தன்மையை உடைய ஆணும், பெண்ணும் சந்தித்துக் கொள்வர். இவர்களுள் ஆணுக்குத் தகுதி கூடுதலாக இருக்கலாம். பெண்ணுக்குத் தகுதி குறைந்தே இருக்க வேண்டுமென,
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருபு நிறுத்த காம வாயில்.... (தொல். பொருள். II நூ. 269) என்ற பாடல் ஆண், பெண்ணுக்குரிய தகுதிகளை எடுத்துரைக்கிறது.
பின்வரும் நூற்பாக்களில்;, இருவரின் முதல் சந்திப்பில் தலைவன் தலைவியின் அழகைக் கண்டு மகிழ்ந்து, இவள் தெய்வ மகளோ? என ஐயுறுவான் (நூ. 1040) பின்னர் அவள் மானுட மகளே என துணிந்து (நூ. 1041) நிற்பான். ஆண், பெண் இருவரும் கண்களால் நோக்கி குறிப்பால் தம் காதலை வெளிப்படுத்துவர் (நூ. 1042) அவன் குறிப்பை தலைவியின் கண்களும், சிந்தையும் ஏற்றுக் கொண்டால் காதல் தொடரும் (நூ. 1043) அதன் பின்னர் இருவருக்கும் இயற்கையான புணர்ச்சி நிகழும் (நூ. 1046) என்கிறார்.
காதல் நிகழ்வின் தொடக்கத்தில் “கண்களால் கண்ட பின்பு எல்லையில்லாத விருப்பம் கொண்டு இடையறாது இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து உணவு உண்ணாமலும், மனம் கலங்கியும் இருக்க, உடல் மெலிவு ஏற்படும். புற உலகத்திற்குத் தம்முடைய உடல் மெலிவுகளை மறைத்து நிற்க, அவர்களிடத்து வெட்கம் உண்டாகும். புற உலகினில் பார்க்கும் அனைத்தும் தம் காதலர் போலவே அவர்களுக்கு தோன்றுகிறது. மோகத்தால் மயங்கி, இனி வாழ்தலே அரிது என்று அவரவரின் மன நிலைக்கு ஏற்ப களவின் தொடக்க நிகழ்வினையும் (நூ. 1046) உளவியல் நோக்கோடு தொல்காப்பியர் விளக்குகின்றார்.
தலைவன், தலைவியை தன்வயப்படுத்துதல்
தலைவன், தலைவியை எண்ணி அவளை முன்னாகக் கொண்டு, தம் சொல்லை அவள் கேட்குமாறும், அவளின் அழகு, பண்பு ஆகியவற்றை புகழ்ந்து கூறி மகிழ்விப்பான். தம் காம உணர்வால் ஏற்பட்ட உடல் மெலிவினை இரக்கத்துடன் கூறி தலைவி மீதுள்ள காதலை உறுதியுடன் எடுத்துரைக்கின்றான். இவை இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னர் நிகழும் நிகழ்வுகளாகும் (நூ. 1017)
தலைவன் இயற்கை புணர்ச்சி, மெய்யுறுபுணர்ச்சி ஆகிய இடங்களில் எவ்வாறு பேசுவான் என்பதை நூ. 1048 விளக்குகிறது.
1. தலைவியை அடிக்கடி காண்பதால் மகிழ்வான். 2. பிரிய நேர்ந்தால் கலங்குவான். 3. நிலையான இல்லற வாழ்வை நினைத்து அடுத்து நிகழ வேண்டியதைப் பற்றி பேசுவான். 4. பாங்கனான அவன் நண்பன் தலைவன் ஏதோ தவறு செய்கிறான் என குற்றம் கூற, அக்குற்றத்தைக் கலைந்து பாங்கன் தம் காதலை ஏற்குமாறு விளக்குகின்றான். 5. தலைவியால் விரும்பப்பட்ட தோழியை அணுகி தலைவன் விரும்பும் கருத்தையும், தலைவியை பெற வேண்டியும் இரங்கியும் வலியுறுத்துவான். 6. தினைபுனத்தில் திடீரென தலைவியை காண, உங்கள் ஊர் எது? பேர் என்ன? என குளிர்ச்சிப் பொருந்திய முறையில் பண்புடன் வினாக்களைக் கேட்டு இரங்கி நிற்பான்.
7. தலைவி மீதுள்ள குறையைக் கூறி தோழி உண்மையை அறியும்படி எடுத்துரைப்பான்.
8. திரும்ப திரும்ப சலைக்காமல் கெஞ்சுவான். 9. பலவாறு தோழி அலைகழிக்க தோழியிடம் பேசுவான். 10. தோழியை கெஞ்சுதலை விட்டு விட்டு நேரே சென்று தலைவியிடத்தில் கூறுவான். 11. எல்லாம் அறிந்து ‘மதியுடம்பட்ட தோழி’ ஐயப்பட்டு மறுக்கும் போது, அதனால் வரும் கேடும், தனது பெருமையையும் கூறி வேண்டுவான். 12. தோழி, வராதே! என தடுப்பதனால் ஏற்படும் நிலையை பற்றி பேசுவான். 13. எதுவும் முடியாத போது ‘மடலேறுவேன் என்றும் அச்சுறுத்துவான்’ என இவை யாவும் தலைவனின் செயல்களாக அமையுமென தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. மேலும் பல்வேறு இடங்களில் தலைவன் பேசுவது உண்டு (நூ. 1053) இத்தகைய களவு மேற்கொள்ளும் தலைவனின் இயல்புகளாக, “பெருமையும் உரனும் ஆடுஉ மேன” (நூ. 1044) என்று தலைவனின் ஊர்திகளாக.
தேரும் மாவும் குதிரையும் பிறவு மன்ன
தலைவன் ஊர்திகள் (தொல். பொருள். பகுதி I நூ. 17)
என்று தேர், விலங்கு, குதிரை மற்ற இன்ன பிறவும் தலைவனின் ஊர்தி என்றுரைப்பதைக் காணலாம். தலைவன் களவில் ஈடுபடும் விதத்தினையும் ஆணுக்கு பெருமையும், வீரத்தையும் தகுதி என கூற, பெண்ணிற்கு,
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய (நூ. 1045)
என்று அஞ்சுவதற்கு அஞ்சுதலும், நாணம், மடப்பம் உடையவளே பெண்ணின் தகுதி என்றும், மடப்பம் உடையவளாதலால் அடக்கத்துடனே காணப்படுவாள். ஆகவே, அவள் பண்பிற்கு ஏற்ப கூற்று நிகழ்த்துவாள் எனவும் கூறப்படுகிறது.
தலைவி கூற்றுக்கள் (நூ. 1057-ல் காணப்படுகிறது) தலைவி கற்பைக் காத்தல் மரபுடையதலால் கற்பைக் காக்க உறுதி பூணுதல் மிக முக்கியமானதாகும் என்று,
“உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
................................................................................
ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே” (நூ. 1059) என்று
“நம் முன்னோர் நமக்குக் காட்டிய நெறி: ஒரு பெண்ணுக்கு உயிரை விடவும் நாணம் சிறந்தது. நாணத்தை விடவும் குற்றமற்ற கற்பு சிறந்தது” என்றுரைப்பது நோக்கத்தக்கதாகும்.
களவில் தோழி
களவு, கற்புக் காலத்தில் தோழியின் பங்கு மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இத்தோழி தலைவியின் தாய் போன்று விளங்கக் கூடிய செவிலியின் மகளே என்றும் நூற்பா உணர்த்தும். இத்தோழி தலைவியின் காதலை குறிப்பால் உய்த்துணர்ந்து கண்டு கொள்ள பல வழிகளை கையாளுவாள். தலைவியின் தோற்றப் பொலிவு, நடைமுறையில் ஏற்படும் மாற்றம், உணவு உண்ணாதிருத்தல், தன் செயல்களை மறைக்க முயலுதல், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கே அடிக்கடி செல்லுதல், ஓரிடத்திலேயே பலகாலும் சுற்றித் திரிதல் (நூ. 1060) ஆகிய செயல்பாட்டினால் அவளை நுண்ணாய்ந்து, களவினை ஏற்று களவில் பெரும்பாலான காலங்களில், தலைவியோடு கூடவே நின்று, தலைவனொடு அறத்தோடு நின்றும், உடன்போக்கு வரை உதவுவாள், தலைவன், தலைவி கூடும் இடங்களை பெரும்பாலும் தோழியே தேர்வு செய்வாள் இதனைக் கண்டே,
“சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே” (நூ. 1072) என்று தலைவிக்கு தோழி நன்மை, தீமை ஆராயவும், இன்ப துன்பத்தில் உசாவி அறியவும் நல்துணையாவாள் என தொல்காப்பியம் சுட்டுகிறது.
தலைவன், தலைவி சந்திக்கும் இடங்கள்
பகல், இரவு ஆகிய காலநிலைக்கு ஏற்றவாறு காதலர்கள் கூடுவது உண்டு. அதனை பகற்குறி, இரவுக்குறி என்பர் (குறி - இடம்)
பகலில் வீட்டின் புறத்தில் அவள் வழி அறிந்து வரக் கூடிய தூரத்திலும் (நூ. 1077) இரவுக்குறி வீட்டினுள் ஒரு புறத்தே யாரும் அங்கு வராத சமயத்தில் இல்லத்தில் உள்ளோர் பேச்சுக்குரல் கேட்கக் கூடிய தூரத்தில் நிகழும் என்பர். குறியிடங்களை பெண்ணே கூறுவாள் (நூ. 1066) சில நேரங்களில் சில இடங்களில் தமக்குத் தாமே தூதுவர்களாகச் சென்று கண்டு கொள்வதுண்டு. இக்காதலர்கள் யார் துணையுமின்றி சந்திப்பது 3 நாட்கள் மட்டுமே என்பர். அம்மூன்று நாட்களிலும் கூட தோழியோடு செல்வதும் உண்டு. எதிர்பாராமல் சந்தித்தலும் உண்டு (நூ. 1080). மேலும், விளையாட்டு, திருவிழா நிகழ்வுகளில் தலைவன், தலைவியை எளிதில் சந்தித்து மகிழ்வான்.
அம்பலும், அலரும்
காதல் ஊராருக்கு தெரிய வரும் தொடக்க நிலையை அம்பல் என்றும், வளர்ச்சி நிலையை அலர் என்றும் கூறுவதுண்டு. இதனை,
“அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்
அங்கு அதன் முதல்வன் கிழவ னாகும்” (தொல். நூ. 1085)
என்று தொல்காப்பியம் சுட்டும். தலைவன், தலைவியை அடிக்கடி சந்திக்க செல்வதாலேயே ஊராருக்கு காதல் நிகழ்வு தெரியவரும். தலைவன் அச்சமோ, பயமோ இன்றி வருவான் (நூ. 1082) தலைவியின் தந்தையும், தமையனும் குறிப்பால் அறிந்து கொள்வர்.
“தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப” (நூ. 1083) என சுட்டும். தலைவியின் தாய் நற்றாய், எவ்வாறு அறிவாளோ அதே போலவே செவிலித்தாயும் தலைவியின் களவை அறிந்து கொள்வாள் (நூ. 1084).
செவிலி
தாய் போலவே தலைவியின் வீட்டில் இருக்கக் கூடியவள். தோழியின் தாய் என குறிப்பிடப்பட்டுள்ளது, அவளின் செயலாக, 1. காதல் ஊராருக்குத் தெரிந்த பின்பு செவிலி சில நேரங்களில் பேசுவாள். 2. காதலால் தலைவியின் உடலில் ஏற்படும் காமவுணர்வு வெளிப்படும் போதும், 3. தலைவி உடல் முன்னை விட மாறும் போதும், 4. எதிர்பாராமல் தலைவன், தலைவியை ஓரிடத்தில் காணும் போது, 5. குறி சொல்பவள் குறி கூறும் போதும், அதனால் வெறியாட்டு நிகழ்த்தும் போதும், 6. காதலால் தலைவி கனவில் அரற்றுதல், தோழியிடம் எதனால் இந்நிலை எனும் போதும், தெய்வத்தை எண்ணுதல், உடன்போக்கு அறிந்ததும் தோழியிடம் கலந்து மணம் முடிக்க சம்மதம் தெரிவிக்க முற்படும் போதும். பிரிவால் வருந்துதல், குடி பெருமை பேசுதல் என 13 இடங்களில் செவிலி பேசுமிடங்களாக தொல்காப்பியர் காதல் ஏற்படும் சூழலை தெளிவுற விளக்கி செல்கின்றார்.
தலைவன் மிக உயர்வாகப் பேசுதலும் செறுக்குத் தோன்ற பேசுதலும், எதிர் மறுத்துப் பேசுதலும் ஐயப்பட்டு பேசுதலும், ஆண்களுக்குரிய தன்மையாகும். மகளிர் அவ்வாறு பேசமாட்டார்கள் (நூ. 1181)
“தலைவி உடன்போக்கை வற்புறுத்தவும், திருமணத்தை வலியுறுத்தவும் நேரே கூறி முயலுமிடங்கள் உள்ளது. மனைவியாக உறுதிப்படும் உரிமையை வேண்டுமிடத்தும், பெண்ணாதலின் தலைவன் பிரிவானோ என்ற அச்சம் உண்டாகும் போதும், அம்பலும், அலரும் காதலை வெளிப்படுத்த ஊரார் பழிப்பாரோ என அஞ்சுதலாலும், தலைவியின் பெற்றோர்க்கு தலைவி மீது சந்தேகம் கொண்டு பார்ப்பதாலும், பல இடையூறுகளாலும், தலைவன் தலைவியுடன் போகவும் அல்லது திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்துவாள் (நூ. 1170) இதனை, பாதுகாப்பின் போது, தோழியின் நிலையை உணர்த்தும் போது ‘இற்செறிப்பு மிகும் போது தோழி அன்பு, அறம், இன்பம், நாணம் ஆகியவற்றை கைவிட்டுவிட்டு கற்பு ஒழுக்கம் பேணுதலேயே கடமையாகக் கொண்டு திருமணம் செய்துவிக்க முயலுவாள்.
இத்தகைய காதல் வாழ்வு முறையை தொல்காப்பியர் பழங்கால காதல் முறையாகச் சுட்டி செல்கின்றார்.
இதனுள் அடிப்படைக் கேள்விகள் சில
1. தலைவனுக்கு மிகுந்த தகுதியும், தலைவிக்குத் தகுதி குறைந்து இருக்க வேண்டுமெனக் கூறுவதன் ஃ கூறியதன் நோக்கம் என்ன?
2. வீரம், பெருமை ஆணுக்குரியது. அச்சம், மடம், நாணம் பெண்ணுக்குரியது என்று கூறுவதன் காரணம் என்ன?
3. ஊழ்வினையால் தான் காதல் நிகழ்ந்தது ஃ நிகழ்கிறது என்பதன் பொருள் என்ன?
4. உடன்போக்குக் காலத்தில் செவிலித் தாயே காதலின் தகவலை அறிந்து காதலினை அங்கீகரிப்பதன் காரணி யாது?
5. செவிலி மகளே தோழி எனச் சுட்டப்பட்டிருக்கிறது. எனில், தலைவியோடு கூடவே இருப்பவளாக தோழி இருக்கிறாள். தலைவிக்கு திருமணம் செய்து வைக்கும் வரையிலும் இருக்க, தோழி, தாய் செவிலி உடன்போக்கு சென்ற தலைவியை தேடிச் செல்லுதல் ஏன்? அப்படியென்றால் தலைவிக்கு செவிலி என்ன உறவு வேண்டும்.
6. நற்றாய் நேரடியாக காதல் நிகழ்வில், செவிலியை போல பேச முடியாமலிருக்க காரணம் என்ன?
7. தலைவியின் தந்தை, தமையன் சகோதரனுக்கு மட்டும் தெரிந்த காதல்? அது பற்றி அவர்களுடைய கருத்துக்கள் மற்றும் செயல்கள் சுட்டவில்லையே ஏன்?
8. தலைவனின் தந்தை, தாய் நிலைபாடு பற்றி கூறப்படாததன் பின்புலம் என்ன?
9. தலைவன், தலைவியை விரும்ப, அவள் மறுத்தால் மடலேறுவேன்? என்று கூறுவதன் அர்த்தம் என்ன?
10. ஆண் மடலேறினால் பெண்ணிற்கே இழிவு ஏற்படும் என்பதன் சமூகக் காரணி யாது?
11. ‘மடலேறும் உரிமை’ ஆணுக்கு மட்டுமே இருந்தது. பெண்ணினத்திற்கு அத்தகு உரிமை ஏன் மறுக்கப்பட்டது?
12. காதல் நிகழ்வில் குறிப்பாலேயே பலவற்றையும் பெண் கூற, ஆண் மட்டும் முழு உரிமையோடும் பேசும் சூழல் எத்தகைய நிலையது? என்ற பல கேள்விகள் நம்முன் எழுகிறது அல்லவா?
இஃது ஒருபுறமிருக்க கற்பு கற்பு என்று பெண்ணைப் போற்றும் சமூகத்தில் ‘பரத்தை’ என்றொரு விதியை யார் உருவாக்கியது. “பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே” (தொல். பொருள். ஐஐ நூ. 220) என்ற பாடலின் வழியாக ஆண்களுள் சிலர் பரத்தை வைத்துக் கொள்ளலாம் என உரிமை எவ்வாறு கொடுக்கப்பட்டது. மேலும் பரத்தை எங்கெங்கெல்லாம் பேசுவாள் என்பதையும் சுட்டி செல்வதையும் காண்கின்றோம்.
காமப் பரத்தை, இற்பரத்தை, சேரிப்பரத்தை என பல பரத்தையைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்துக்குள் காண முடிகிறது. மருதத்திணைப் பாடல்கள் பலவும் தலைவன் பரத்தையோடு தொடர்பிலிருக்க தலைவி வேதனையடைந்து பேசும் இடங்கள் பலவாகும். அதற்கு கூட விதி அமைத்ததன் நோக்கம் என்ன? ஊழ்வினையால் ஒத்த தகுதியுடைய ஆணும், பெண்ணும் எதிர்பட்டு காதல் கொண்ட சமூகத்துள் ‘பரத்தை’ என்கின்ற ஒரு சமூகமே எப்படி தோன்ற முடியும். பரத்தையெல்லாம் போன பிறவியில் பாவம் செய்தவர்களா? அப்படியெனில் பத்தினியாய் கிடந்த தலைவியும் பாவம் செய்தவளா? ஆண்கள் இரண்டு மனைவியை வைத்துக் கொள்ள எந்த ஊழ்வினை இடம் கொடுத்தது. எந்த சட்டம் அனுமதி வழங்கியது. இஃது ஊழ்வினையா இல்லை சமூகத்தின் உள் வினையா? என்பது நம்முன் நிற்கும் கேள்வி.
காதல் ஆணும் பெண்ணும் இணைகின்ற இயல்புசேர்க்கை நிலை. காதல் அங்கீகரிக்கப்பட்டதென்றால் ஏன் அவர்கள் ஓடி போய் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஓடி போய் மணம் செய்தனர் எனில் எல்லோருமே அத்தகு நிலையையே மேற்கொண்டனரா?
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்கிற படிமுறையும், அடியோர், வினைவலர், ஏவலர், இழிந்தோர் என்கின்ற படிமுறையினருக்குள்ளுமாக எல்லோரிடத்தும் எல்லோரும் காதல் கொண்டு கூடி வாழ்ந்தனரா? கூடி வாழ்ந்திருந்தால் ‘குலம்’ என்ற ஒன்றே இல்லாதிருக்குமல்லவா?
இன்னும் அடிப்படையான ஒரு கேள்வி, தேரோட்டியின் மகனும், மன்னர் மகளும் காதல் கொண்டனரா? மறவர் குடியில் பிறந்த மறவனும், மன்னனின் மகளும் திருமணம் செய்து கொண்டனரா? அல்லது ஓடி தான் போனார்களா? அப்படியே ஓடி போய் திருமணம் செய்ய நினைத்தால் அவர்கள் வாழத்தான் முடியுமா?
தந்தை வழிச் சமூகமாக, மன்னர் அதிகாரத்தில் இருந்துகொண்டு அவரின் கட்டளைக்கு செவி சாய்த்த சமூகத்தில் காதல் எப்படி மலரந்திருக்கும் அல்லது மலர்ந்த காதல் எப்படி நிலைக்கும். வள்ளல் தோன்றிய சமூகத்தில் வறுமையும் தோன்றி நிற்க, இருப்பவனுக்கும், இல்லாதவனுக்குமான வாழ்வு எப்படி சிறந்திருக்கும். ஓர் குறிப்பிட்ட உயர்குடியினரின் வாழ்வு நிலையைத் தான் இந்நூல் தாங்கிப் பிடித்திருக்கிறது என்பது இதன் வழி புலனாகிறது.
ஆணும் பெண்ணும் இணையும் இணைவு தான் காதல். சாதி, வர்க்கம், குலம், இனம் என பல்Nவுறு பாகுபாட்டிலும் ஏதேனும் ஒன்றிலும் கூட நிலைத்திருந்த சமூகமாய் இருக்க, அங்கு காதல் எப்படி நிலைத்திருக்கும். ஆணாதிக்கத்தின் வேர் நீண்டு சென்ற சமூகத்தில், பெண்ணை அடிமையாக்கிய சமூகத்தில், பொருளாகவே கருதிய சமூகத்தில் இருவருக்குமான இன்ப உறவு, உணர்வு எப்படி ஒழுக்கமாக இருந்திருக்கும். நிலைத்த ஒத்த கருத்து ஒற்றுமை எப்படி நிலைத்திருக்கும் என்பதே நம்முள் எழும் கேள்வியாகும். ஆக, காதல், திருமணம் யாவும் ஊழ்வினையால் தீர்மானிக்கப்படவில்லை. சமூகத்தின் உள்வினையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காதல் சொர்க்கத்தில் தீர்மானிக்கப்படவில்லை. வர்க்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
துணை நூல்கள்
1. தொல்காப்பியம், பொருளதிகாரம், பகுதி – I & II இளம்பூரணர் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை மு.ப. 2001.
2. தொல்காப்பியம், ச. பாலசுந்தரம் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 1, மு.ப. 1953
3. குறுந்தொகை, அண்ணாமலை பல்கலைக் கழக வெளியீடு, சிதம்பரம் மு.ப. 1983.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர் - - முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -