முன்னுரை
சங்கம் என்னும் அமைப்பின் சிறப்புக்கும், சங்கத் தமிழர்களின் பெருமைக்கும் சான்றளிப்பனவாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள் ஆகும். அவை தொன்மைத் தமிழர்களின் பழைழையை, தொல்பழங்கால நாகரிகத்தை, அவர்தம் வாழ்வியல் வெளிப்பாடுகளை எடுத்துரைப்பதோடு, பிறர் அறியத்தக்க, கற்கத்தக்க, ஏற்கத்தக்க நற்க்கருத்துக்களை அறமாக வகுத்துரைக்கின்றன. சங்கச் சமூகத்தில் அறம் தழைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயலாற்றியவர்கள் நமது புலவர்கள் ஆவர். அதன் பொருட்டே அவர்கள் சான்றோர் என்று சிறப்பித்து உரைக்கப்பட்டனர்.
தமிழின் இலக்கியக் கோட்பாடு அறம், பொருள், இன்பம் என்பனவற்றை முதன்னிறுத்தியவை ஆகும். இவற்றுள் சங்கப் புலவர்கள் அறத்திற்கே முதன்மை கொடுத்துள்ளனர். மனித வாழ்வின் அனைத்து நிலைப்பாடுகளிலும் அறம் வலியுறுத்தப்பட்டது. அறத்தை நிலைநிறுத்துபவர்களாக நாடாளும் தலைவர்கள் திகழ வேண்டும் என்பதனைச் சங்கப் புலவர்கள் அவர்களுக்கு செவியறிவுறுத்தலாக வலியுறுத்திக் கூறியுள்ளனர். அறத்தினின்று வழுவிய மன்னர்களைச் சங்கப் புலவர்கள் போற்றுவது மரபில் இல்லை என்பதனை அவர்களது பாடல் புனைவாக்கத்திலிருந்து உய்த்துணரலாம்.
சங்கப் பாடல்களின் புறப்பாடல்கள் தனிச்சிறப்பும், தனித்தன்மையும் வாய்ந்தனவாகும். சங்கத் தொகைநூல்களில் புறநானூறும், பதிற்றுப்பத்தும் சங்கப் போரியல் வாழ்வின் நிலைப்பாட்டினைச் சமூகவியல் நோக்கில் எடுத்துரைக்கின்றன. சங்கப் புலவர்களின் பாடல்களுக்குப் போராற்றலில் சிறந்த வீரனே பாடுபொருளாக அமைந்தான். சங்க அக வாழ்விலும், புற வாழ்விலும் வீரம் முன்னிலைப்படுத்தப் பட்டது.
சங்க கால வாழ்வியலில் புறம் பாடிய புலவர்கள், தங்கள் வயிறு வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு பாடல்களைப் புனையவில்லை. அவர்கள் பழுமரம் நாடிச் செல்லும் பறவைகளைப்போல, கொடுக்கும் குணமுடைய கொடைஞர்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களின் புகழினை உலகிற்கு அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு ஈதல் அறத்தைத் திறம்படச் செய்த வள்ளல்களே சங்கப் புறப்பாடல்களில் பெருமைப்படுத்தப்பட்டனர். அவ்வகையில் மக்கள் எக்காலத்தும் பின்பற்றி வாழத்தக்க அறக்கூறுகளைப் புறநானூற்றின் பொதுவியல் திணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அவை வலியுறுத்தும் அறமானது இக்கால வாழ்வியலுக்கும் முதன்மையானதாக, எல்லோரும் கடைப்பிடிக்கத்தக்க அறங்களாக அமைவதனை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.
மனித வளம் என்பது ஒரு நாடு பெற்றிருக்கும் உறுப்புகளில் மிக முக்கியமானதாகும். மனித வளம் என்பது ஒத்திசைவு, கூட்டு முயற்சியின் விளைவு, அதனால் எழும் தாக்கம் ஆகியனவற்றை அடியொற்றியதாய் அமைந்திருந்தது. மனித வளத்தை சமூக வளர்ச்சி ஆக்கத்திற்குத் துணைசெய்யுமாறு சங்கப் புலவர்கள் பயன்படுத்தியுள்ள திறத்தினை விளக்குவதாய் இக்கட்டுரை அமைகின்றது.
சங்கப் புலவர்களின் பொதுவியல்புகள்
சங்கப் புலவர்கள் தங்களுக்குள் சில வரையறைகளைக் கொண்டே செயல்பட்டுள்ளனர் என்பதனைப் புறப்பாடல் மரபினின்றும் அறியலாம். அவர்கள் எந்தவொரு தலைவரையும் இகலின்றி மதித்தனர். மேலும் பெருமிதத்துடனும், தன்மானத்துடனும் வாழ்ந்தனர். தமக்குப் பொருளுதவி புரிந்த புரவலர்களைச் செய்ந்நன்றி மறவாது வாழ்த்தினர். மன்னருக்கும் மக்களுக்கும் அறிவுரை கூறி, நாடு செழிக்க மன்பதை உயர வழிவகுத்தனர். பண்டைய புலவர்கள் வயிற்றுக்கு முதன்மை தந்து மானத்தைப் பின்னுக்குத் தள்ளி வாழவில்லை. எப்படியும் வாழலாம் என்பது அவர்களது நோக்கமாகவும் இருக்கவில்லை.
சங்கப் பாடல்கள் திணை, துறை என்னும் அமைப்பில் அமைந்தனவாகும். தொல்காப்பியக் கருத்தியலின்படி அகத்திணை ஏழு, அதற்கு மறுதலையான புறத்திணையும் ஏழு ஆகும். இவை ஒன்றற்கொன்று தொடர்புடையனவாக விளங்குவதை உரையாசிரியர்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றனர். (காண்க, இளம்பூரணர் உரை) இவற்றில் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி முதலானவை போர் பற்றிய நிலைப்பாடுகளாக அமைந்த புறத்திணைகளாகும். போரியல் வாழ்வின் படிநிலைகளாக அமைந்தவை இவையாகும். இவற்றுள் திணை வாரியாக அடங்காதவற்றையும், பொதுவாக மக்கள் திரள் அறிந்து கொள்ள வேண்டியவற்றையும் “பொதுவியல்’ என்றவொரு தனித்துறையாக வகுத்துரைத்தனர் சங்கப் புலவர்கள்.
புறநானூற்றில் பொதுவியல்
புறநானூற்றின் பொதுவியல் திணையில் முதுமொழிக்காஞ்சி, பொருண்மொழிக் காஞ்சி, கையறுநிலை, ஆனந்தப்பையுள், தாபதநிலை, முதுபாலை, பெருங்காஞ்சி என்னும் ஏழு துறைகளில் மொத்தம் 73 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சமூக வாழ்வியலில் பிரிவு, துன்பம், துயரம், அவலம், தவிப்பு, இழப்பு, உணர்வு போல்வன மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்துவன வாகும். மக்கள் வாழ்வியலில் கிடைக்கும் இழப்புகளே அவனுக்குப் பல கருத்துக்களை உணர்த்துகின்றன. ஒருவனது வாழ்வில் பெறும் அனுபவமே அவனுக்கு வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்றுத் தருகின்றது. அவ்வகையில் சங்கப் புலவர்கள் பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடு பொதுவியல் திணைப் பாடல்களில் பெருமளவில் இடம்பெற்றுள்ளதனைக் காணமுடிகின்றது.
ஈகைப்பண்பை வலியுறுத்தல்
சங்க காலத்தில் வீரமும் கொடையும் புலவர்களால் பெரிதும் பாராட்டப் பட்டன. வீரத்தைச் சிறப்பித்துரைக்கும் போது அதனுடன் அவனுடைய ஈகைப் பண்பும் விதந்துரைக்கப்படுகின்றது, புகழுக்குரிய செயல்களில் கொடைப்பண்பே முதன்மையானதாகத் திகழ்கின்றது. அறங்களில் தலையாய அறமாக ஈகையினைக் குறிப்பிடுகின்றனர் சங்கப் புலவர்கள். அது சமூகத்தின் வாழ்வுக்குத் தலையாயதாக விளங்குகின்றது. மேலும் மனிதன் பின்பற்றி நடக்கும் ஒப்புரவுப் பண்பிற்கு அடையாளமாக ஈகைப்பண்பு விளங்குகின்றது. இதன் பொதுநோக்கம் கருதியே புலவர்கள் ஈகைப்பண்பைப் போற்றியுள்ளனர்.
தன்னிடம் உள்ள செல்வத்தைப் பிறர்க்கு ஈதலால் உண்டாகும் புகழே நிலைத்த பேற்றினைத் தருவதாக அமையும் என்னும் கருத்தினை, சோழன் நலங்கிள்ளியை வாழ்த்திப் பாடும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,
“திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
வல்லாய் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி” (புறநானூறு, பா. 27:16-19)
என்று குறிப்ப்பிடுகின்றார். இதில், செல்வம் நிலையில்லாதது என்பதனை உணர்த்துவதோடு, நிலையில்லாத செல்வத்தால் பெரும் பயனை அடைவதற்கு முன்னர் அதனைக் கையில் உள்ளபோதே பிறர்க்கு ஈந்து பெருமை தேடிக் கொள்க’ என்று அறிவுறுத்துகிறார்.
மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், பிறர்க்குக் கொடுத்து உதவும் ஈகைப்பண்பினை,
“உண்பது நாழி; உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே, தப்புந பலவே,“ (புறநானூறு, பா. 189:6-9)
என்று சிறப்பித்து உரைக்கின்றார். இதில், உலகில் பிறந்த எல்லா மனிதரும் உட்கொள்ளும் உணவுத்தானியத்தின் அளவு காற்படியாகும். உடுப்பவை மேலாடை, கீழாடை என்னும் இரண்டுமாகும். எனவே, செல்வத்தின் சிறப்பு பிறர்க்குக் கொடுத்து உதவுவதே ஆகும். தாமே உண்ணலாம் என்று நினைத்தால் தம்மிடமிருந்து இழப்பன பலவாகும் எனும் கருத்து எடுத்துரைக்கப்படுகின்றது.
ஐயாதிச் சிறுவெண்தேரையார் பாடிய பெருங்காஞ்சித்துறைப் பாடல் ‘ஈகையை இடைவிடாது செய்க’ என்று அறிவுறுத்துவதனை,
“....வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை ; மாயமோ அன்றே
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் இங்கண்
உப்பு இலாஅ அவிப் புழுக்கல்
கைக் கொண்டு. பிறக்கு நோக்காது
இழிபிறப்பி னோன் உயப்பெற்று
நிலன் கலனாக இலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே
செய்ந்நீ முன்னிய வினையே” (புறநானூறு, பா. 363:7-14)
என்னும் பாடலில் காணலாம். இதில், ‘இன்னல் ஆகிய இறுதிநாள் வருவதற்கு முன்னர் உலகத்தின் மீதுள்ள ஆசையைத் துறந்து நல்வினையாகிய ஈகையைச் செய்யுமாறு’ வலியுறுத்துவதைக் காணலாம்.
உயிரோடு இருக்கும் காலத்திலேயே பகிர்ந்துண்டு வாழ்தல் வேண்டும் என்று அறிவுறுத்துவதனை,
“உண்டும் தின்றும் இரப்போர்க்கு உய்ந்தும்
மகிழ்கம் வம்மோ - மறப் போரேயே !
அரிய ஆகலும் உரிய பெரும
…………………………..
தாழிப் பெருங்காடு எய்திய ஞான்றே” (புறநானூறு, பா. 364:6-13)
என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.
புலவர் வேந்தர்க்குக் கூறும் அறக்கருத்துகள்
வேந்தரிடம் பரிசில் பெற்ற புலவர்கள் பரிசிலுடன் வறிதே மீளாது தக்க அறிவுரைகளைக் கூறிச்செல்லுதல் சங்கமரபு. வேந்தனிடம் தவறு கண்டபொழுது தமக்குப் பரிசில் நல்கினனே எனத் தாழ்ந்து விடாமல் தேவைப்படும் நேரத்தில் கடுமையாக அறிவுறுத்தும் நெஞ்சுரத்தையும் சிலபாடல்களில் காணமுடிகிறது. இம்மரபினை வள்ளுவர்,
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்” (குறள். 448)
என்று குறிப்பிடுகின்றார். உழவுத்தொழிலுக்கு அடிப்படைத் தேவையாக அமைந்திருப்பது நீர், உழவுத் தொழிலைப் போற்ற நினைக்கும் வேந்தன் முதலில் நீர் நிலைகளைப் பெருக்குதல் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் குடபுலவியனார். பசியும், பகையும் இன்றி மக்கள் வாழும் நாடே சிறந்த நாடாகக் கொள்ளப்படும், பசியும், பிணியும் பகையுமின்றி மக்கள் வாழவேண்டுமானால் உணவுக்குறை உண்டாதல் கூடாது. நீர் அற்றவழி நிலம் இருந்தும் பயன் இன்று, எனவே, நீர் நிறைந்து நிறையக் கிடைக்குமாறு நீர்நிலை பலவற்றை ஆங்காங்கே ஆக்கித்தருதல் வேந்தனுடைய தலையாய கடமை. இம்மண்ணுலகில் நிலைத்த புகழை விரும்புவோர், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து அதற்கு வேண்டுவன செய்வோரே என்ற கருத்தினை,
“நீரின் றமையா யாக்கைக்கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்க் கொடுத்தோரே
உண்டி முதற்றே யுலகின் பிண்டம்
உணவென படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரின்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே.” (புறநானூறு, பா. 18:19-23)
என்று குடபுலவியனார், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்துவது எல்லாக் கால அரசுக்கும் பொருந்தும் அறிவுரையாகும்.
பொதுநோக்கும் வரிசையும் அறியவேண்டுதல்
மன்னர்கள் புலவர்களைப் புரக்கும்போது வரிசை யறிந்து முறைப்படுத்தி நடத்துதல் வேண்டும் என்று புலவர்கள் மன்னரிடம் விரும்பியுள்ளனர். அவ்வாறு வரிசையறியாத மன்னரிடத்து அறிவுரை செய்தும். தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளுமாறும் வேண்டி உள்ளனர்.
மலைமயமான் திருமுடிக்காரி என்னும் மன்னனுக்கு அறிவுறுத்துவதாக அமைந்த கபிலரது பாடல்வழி இதனை அறியலாம்.
“ஒருதிசை ஒருவனை உள்ளி நால்திசை
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே ; பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அது நற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே.” (புறநானூறு, பா. 121)
என்னும் பாடலில், வரிசையறிதலின் சிறப்பு எடுத்துரைக்கப்படுகின்றது. இதில், மன்னன் கொடை வள்ளலாக இருக்கின்றான்; பெரியவன்-சிறியவன்; உயர்ந்தவன்-தாழ்ந்தவன்; புலவன்-இரவலன் என்ற வேறுபாட்டை அவனால் காணஇயல வில்லை, இதனால் கொடுப்பதில் வேறுபாடு கருதாத நிலை ஏற்பட்டது. இவ்வாறு காணும் நிலையினைக் குற்றமாகக் கூறுகின்றார் கபிலர். இதனால், தக்கார் யார்? தகுதியுடையவர் எவர்? எனப் பகுத்துணர்ந்து அவரவர் தரம்கண்டு அளித்தலே பதவிக்கும் பரிசிலுக்கும் சிறப்பாகும் என்னும் கருத்து இதில் அறமாக்க் கூறப்பட்டுள்ளதனைக் காணலாம்.
உலகியல் உண்மை உணர்த்துதல்
பொதுவியல் திணைப் பாடல்கள் உலக இயல்புகளை உணர்த்தும் தன்மை கொண்ட அறநிலைப் பாடல்களாக விளங்குகின்றன. இவ்வுலகம் நிலைபெற்று
இயங்குவதன் காரணத்தை, கடலுள்மாய்ந்த இளம்பெருவழுதி,
“உண்டாலம்ம இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும். இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர். பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.” (புறநானூறு, பா. 182)
என்னும் பாடலில், இந்திரனுக்குரிய அமிழ்தமே கிடைத்தாலும் அதனைச் சுயநலம் கருதித் தனியாக உண்பது இல்லை; வாழ்க்கை, கடினம் என வெறுத்தொதுக்குவதும் இல்லை; மன உளைச்சலாகிச் சோர்வதும் இல்லை; தீய செயல்களுக்கு அஞ்சுவது. புகழ் என்றால் உயிரையும் கொடுப்பது. பழி என்றால் உலகத்தையே கொடுத்தாலும் வாங்க மறுப்பது; மனக்கவலை கொள்ளாமல் இருப்பது; இத்தகைய பண்புடையவர்கள் தமக்கென்று வாழாமல் பிறர்க்கென்று வாழ்வதால் இவ்வுலகம் இன்றளவும் சிறப்பாக இயங்குகின்றது என்னும் கருத்து புலப்படுத்தப்பட்டுள்ளது.
உலக ஒற்றுமை வேண்டுதல்
உலக மக்கள் யாவரையும் ஒன்றாகக் கருத வைக்கும் கணியன் பூங்குன்றனாரின் பாடல் சாதி, இன, சமயங் கடந்த ஒருமைப்பாடுடைய உலகை வலியுறுத்துகின்றது, இதனை,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்று இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே ; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொழுது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனைபோல் இருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” (புறநானூறு, பா. 192)
என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது. இதில் ‘எல்லா ஊரும் நம் ஊரைப் போன்றதே; எல்லா மனிதரும் நம் உறவினரே; தீமையும் நன்மையும் பிறர்தர வருவது இல்லை; நன்மையும் தீமையும் நாமே ஏற்படுத்திக் கொள்வது; அதற்காக வருந்துவது இல்லை; வாழ்க்கை இனிமையானது என்று எண்ணி இறுமாப்புக் கொள்வதில்லை; வாழ்க்கை துன்பமானது என்று வெறுப்பதும் இல்லை; நீர்வழிச் செல்லும் படகுபோல உயிரானது ஊழ்வினை சென்றவழியே செல்லும் என்ற சான்றோரின் குறிப்பால் உணர்ந்தோம், அதனால் பெரியோரைக் கண்டு வியப்பதும் இல்லை, சிறியோரைக் கண்டு இகழ்தலும் இல்லை’ என்று குறிப்பிடுவதனைக் காணலாம்.
உலக வாழ்க்கையின் இயல்பு கூறுதல்
உலக வாழ்க்கை இன்பம்-துன்பம் என்னும் இரண்டும் கலந்தது. இருப்பினும் துன்பமே மனிதனை அதிகமாகப் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. உலக வாழ்க்கை துன்பமாக இருந்தாலும், இன்பமாக வாழ்வதற்கான இயல்பினைப் பெறுதல் வேண்டும் என்பது புலவர் பக்குடுக்கை நன்காணியாரின் எண்ணமாக இருப்பதனை,
“ஓர்இல் நெய்தல் கறங்க. ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற. அப் பண்பி லாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே” (புறநானூறு, பா. 194)
என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது, ஒரு இல்லத்தில் துன்பமிக்க நெய்தல் பறையும், மற்றொரு வீட்டில் மணமுரசும் ஒலிக்கின்றன. தலைவனைச் சேர்ந்த மகளிர் அணிகலன்களும், பூக்களும் அணிந்தனர், பிரிந்தவர் கண்ணீர் வடிக்கின்றனர். இவ்வாறாக இருவேறாய்ப் படைத்த இறைவன் பண்பற்றவன், உலகத் துன்பம் கொடுமையானது. அதனால் இதன் இயல்பை உணர்ந்தோர் இனிமைதரும் இன்பத்தையே தேடுவார்கள் என்னும் கருத்து இப்பாடலில் உணர்த்தப்பட்டுள்ளது.
வாழ்க்கையானது நாம் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் இயல்பினை உடையது என்ற கருத்தினை,
“அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல.
ஓடிஉய்தலும் கூடும் மன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” (புறநானூறு, பா. 193)
என்னும் ஓரேழுழவனாரின் பாடல் எடுத்துரைக்கின்றது, இதில் சுற்றத்தோடு கூடிய வாழ்க்கை வேடன் கையில் சிக்காத மான்போல தப்பிப் பிழைக்கும் தன்மை உடையதன்று, துன்பத்தையே தரக்கூடியது என்னும் கருத்து புலப்படுத் தப்படுகின்றது,
“யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே” (புறநானூறு, பா. 2141-2)
என்னும் பாடலடிகளில் யானையை வேட்டையாடச் செல்பவன் அதனை எளிதாகப் பெறும் நிலை உண்டாவதும். காடையை வேட்டையாடச் செல்பவன் வெறுங்கையோடு திரும்புவதும் உண்டு என்ற உலக இயற்கைக் கருத்துப் புலப்படுத்தப்பட்டுள்ளது.
உலக இயல்பைக் கூறி அறன் வலியுறுத்தல்
உறையூர் முதுகண்ணனார் என்ற புலவர், சோழன் நலங்கிள்ளியைப் போற்றும் பாடலில் உலக இயல்பைக் கூறி அறத்தை வலியுறுத்துகிறார்.
“சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும்
கூனும், குறளும், ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்என
முன்னும் அறிந்தோர் கூறினர்” (புறநானூறு, பா. 28:1-6)
கண்பார்வை இல்லாமை, உறுப்புக் குறைவுள்ள தசைப் பிண்டம், கூன் விழுந்த உடல், மிகக் குட்டையான உடலமைப்பு, வாய்ப்பேச்சு இன்மை, காது கேளாமை, விலங்கின் முகத்தோற்றம், அறிவில் தெளிவின்மை ஆகிய எட்டு வகையான குறைவுடையது மக்கட்பிறவி எனச் சான்றோர் கூறியுள்ளனர். அத்தகைய எவ்விதக் குறையும் இல்லாத அரசனே! நீ அறத்தைப் போற்றி நடப்பவன் உன்னைப் போற்றுபவன் உன் செல்வத்தைப் பெற்றவனாவான். உன்னைப் போற்றாதவர், செல்வத்தையும் அறத்தையும் பெறாதவர் ஆவார். எனவே. “அறத்தை இடையறாது செய்க’ என்று இதில் வலியுறுத்தக் காணலாம்.
நன்மை செய்யாவிடினும் தீமை செய்யாமலிருக்க வற்புறுத்தல்
பிறர்க்கு நன்மையினைச் செய்யாமல் போனாலும் பரவாயில்லை. ஆனால், அறம் அல்லாதனவற்றைச் செய்வதைக் கைவிடுவீர்களாக! அதுவே எல்லோராலும் விரும்பத்தகும் அறமாகும் என்று நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர்,
“நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே” (புறநானூறு, பா. 195:6-10)
என்னும் பாடலில் வலியுறுத்துவதனைக் காணலாம்.
வீடுபேற்றை அடைய அறம் செய்ய வலியுறுத்தல்
உயர்ந்த விருப்பமுடைய பெரியவர்கள் தாம் செய்த நல்ல செயல்களுக்கு நல்ல பயன் கிடைக்குமாயின் விண்ணுல இன்பமும் கிடைக்கும். அப்படி விண்ணுலக இன்பம் கிடைக்காவிட்டாலும், அப்படி இல்லாமல் போனாலும் அறம் செய்தால் பெரும்புகழ் கிடைக்கும். எனவே, அறத்தை இடையறாது செய்தல் வேண்டும் என்று வலியுறுத்துவதனை,
“உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் உய்தல் உண்டெனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்” (புறநானூறு, பா. 214:6-10)
எனும் பாடல் எடுத்துரைக்கின்றது. இதில் அறம் செய்தால் வீடுபேற்றை அடையலாம் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
முடிவுரை
புறநானூற்றின் பொதுவியல் திணைப் பாடல்கள் சொல்நயம், பொருள்நயம் கொண்ட கருத்தாழமிக்க பாடல்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் புலவர்களின் தன்னுணர்ச்சிப் பாடல்கள் உள்ளத்தை உருக்கும் விதமாக உள்ளன. அவை புலவர்கள் பெற்ற அனுபவத்தின் உச்சமாகத் திகழ்கின்றன. மேலும் அவை, கற்போரை நெறிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற உலகம் தன்னளவில் மிகப்பெருமளவில் சுருங்கி வருகின்றது. எனினும் உலகியல் அறங்கள் இன்றைக்கும் தேவைப்படுவனவாக உள்ளன. மக்களிடையே மனிதநேயம், அன்பு, அருள், இரக்க உணர்வு என்பன அருகிக் கொண்டுவரும் காலகட்டத்தில் இன்றைய உலக மக்களும் ஏற்று நடப்பதற்கு ஏற்றனவாகப் புறநானூற்றின் பாடல்கள் அமைந்துள்ளன. உலகத் தத்துவம், வாழ்க்கைத் தத்துவம் கூறும் பொதுவியல் திணைப் பாடல்கள் இன்றைய காலகட்டத்திற்கும் தேவையான ஒன்றாக அமைந்துள்ளதனை இக்கட்டுரையால் உணரமுடிகின்றது.
உசாத்துணை: புறநானூறு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர் - - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். தமிழ்நாடு இந்தியா -