முன்னுரை :
- முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -சங்க காலப் பெண் கவிஞர்களின் காலத்தை நோக்குகையில் பெண்ணிற்கானக் கட்டுப்பாடுகள் பெரும்பான்மையும் வெளிப்படையாகத் தோற்றம் அளிக்காமல் மறைமுகமாகவே இருந்தன. இருப்பினும் இக்கால பெண் கவிஞர்களின் படைப்புகள் என்பது பல்வேறு தடைகளைத் தாண்டி வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்கள் சார்ந்திருக்கும் சமூகம் அச்சமூகங்களில் ஊடாடும் சமயங்கள், சாதிகள், குடும்பம் போன்றவை உருவாக்கிய கட்டுப்பாடுகளும் தடைகளும் அத்தோடு அல்லாது மேலும் பெண் என்பதானாலேயே உருவாகும் மரபார்ந்த சட்டகம் வார்த்த மனத்தடை என இவ்வாறு பல தடைகளைத் தாண்டியே இக்கால படைப்புகளைப் பெண் கவிஞர்கள் உருவாக்க வேண்டியுள்ளது. 18, 19ஆம் நூற்றாண்டிற்கு முன்பும் சிற்றிலக்கியக் காலத்திற்கு பின்பும் சமூகத்திலும், அரசியல் களத்திலும் பல்வேறு மாற்றங்கள் உருவாயின. பல மொழிகள் நாட்டில் ஆதிக்கம் செலுத்தின. சுதந்திர இந்தியாவிற்கு முன்பும் பின்பும் ஆங்கிலவழிக் கல்வியே கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மை போதிக்கப்பட்டன. இதனால் தமிழ்ச் சூழலில் இலக்கியங்களும் தமிழ்க் கல்வி குறித்த சிந்தனையும் பின் தள்ளப்பட்டன எனலாம். அதனால் இவற்றைக் கற்கும் ஆர்வமும் குறைந்தே காணப்பட்டன. பெண்களுக்கோ அவ்வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அதற்கான சூழலைச் சமூகமும் உருவாக்கித் தரவில்லை எனலாம். இத்தகையப் பல காரணங்கள் பெண் கவிஞர்கள் தம் படைப்புகளைப் படைப்பதற்கு நீண்ட இடைவெளி தேவைப்பட்டது. இத்தனை சூழ்நிலைகளையும் கடந்து பெண் கவிஞர் இக்காலத்தில் தமக்கான வெளியையும் மொழியையும் உருவாக்கி வருகின்றனர். படைப்பு முயற்சிகளில் பெண் கவிஞர்களுக்கு இருந்த தயக்கங்கள் தற்போது குறையத் தொடங்கியுள்ளன. பெண் குறித்து ஆண் நோக்கில் உருவாக்கப்பட்ட படைப்புகளையும் பெண் பற்றி ஆண் உருவாக்கிய பார்வையையும் விடுத்து இன்றைய பெண் கவிஞர்கள் தமது தமிழ்ப் படைப்புத் தளத்தில் மாற்றுச் சிந்தனையை உருவாக்கி அதைப் பதிவு செய்து வருகின்றனர்.

குடும்பக் கட்டுமானத்தில் பெண் நிலை : குடும்பம் எனும் அமைப்பு காலங்காலமாகப் பெண்களுக்கான கடமைகளையே அவர்களின் மீது திணித்து வருகிறது. இதனால் பெண்கள் தம் நிலையை உணர்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் “அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப்பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைபடுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்த இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள் தாம் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள் தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள்”1 என்ற நிர்மலாவின் கூற்று மூலம் தொடக்க காலத்தில் பெண்கள் வீட்டிற்குள் எவ்வாறு முடங்கினர் என்ற நிலையை அறிய முடிகிறது. ஆனால் இன்றைய பெண்மொழி பேசும் கவிஞர்கள் தம்மை முடக்கும் அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையினை உணரத் துவங்கி விட்டனர். அதை தம் கவிதை மொழியிலும் பெண் மொழியை பதிவு செய்து வருகின்றனர்.

“நீ கொண்டுவந்த பூச்செடிகள்
தொட்டியில் நடப்பட்டு
நீருற்றிய பின்னும்
தலைசாய்த்துக் கொண்டிருக்கின்றன
எப்பொழுதும் அது
தன் தோட்டத்து வெளியை விட்டு
வருவதில்லை
தன்னை இங்கு
ஊன்றி கொள்கிற ஒருவேரை
வெளிப்படுத்தவதுமில்லை”    (பச்சை தேவவை.ப.15)

என்ற இக்கவிதையானது குடும்பநிலையில் பெண்ணை ஒடுக்கும் தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது. திருமணமான பெண் கணவன் சொன்னவற்றை மட்டும் வேதமாக ஏற்று நடப்பது. குடும்பத்தைத் தவிர வேறு எதையும் சிந்திக்க வாய்ப்புத் தரப்படாமை மேலும் தனக்கான சுயத்தை வெளிப்படுத்த இயலாத நிலை என்ற இப்போக்கே நிலவுகிறது. ஆனால் ஆண்களுக்கோ இத்தகைய நிர்பந்தங்கள் இல்லை. “குடும்பம் - ஆண்களுக்குச் சிறையா? என்ற கேள்வி எழுவதில்லை. காரணம் தாமரை ‘இலை தண்ணீர் மாதிரி பட்டும் படாத வாழ்க்கை அவர்களுக்கு. பெண்ணுக்கோ வேராக, அடியில் மூழ்க வேண்டிய நிர்பந்தம். ஆணி வேராய்த் தாங்க வேண்டிய குடும்ப பந்தம் ‘இந்த வட்டத்துக்குள் உழலுவதே சாதனை’ என்கிற மந்த மனோ நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்”2 என்ற ஆண்டாள் பிரியதர்ஷியின் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதே போல் மேலும் பெண்ணானவள் அன்பு, அக்கறை எனக் கூறி ஒடுக்கும் சிக்கலுக்கும் உட்படுத்தப்படுகிறாள். ஒரு பெண் தன் துணையாகிய ஆணிடம் எதிர்பார்ப்பது உண்மையான தணிக்கையற்ற சுயநலமில்லாத அன்பு மட்டுமே, ஆனால் ஆணே பெண்ணைத் தன் துணையாகக் கருதாமல் அக்கறை என்ற பெயரில் பலவிதமான கட்டளைகளை அன்பு என்கிற சாயம்பூசி வெளியிடும் தன்மையைக் கூறிச் செல்கிறது கவிதாவின் கவிதை.

“அன்பு என்று சொன்னான் காதல் என்று வந்தான்
எனக்கானவள் நீ என்றான் நெடிக்கொருமுறை
பேசச் சொன்னான்.
முதலாம் நாள்
நேசமாய் வந்து பிறருடன் பேசுவதில்
அளவுகொள் என்றான்
இரண்டாம் நாள்
மென்மைக் கொண்டு வெளிச்செல்லலை
மட்டுப்படுத்தேன் என்றான்
மூன்றாம் நாள்
அன்றொரு நாள் கனிவாய் நண்பர்கள் அதிகமோ
உனக்கு
எதற்கு இத்தனை பேர் என்றான்
நான்காம் நாள்
ஆண் நண்பர்கள் எல்லாரும் அதற்குதான் அலைவார்கள்
தேரியாதா? விட்டுவிடேன் என்றான்
ஐந்தாம் நாள்
ஆடைகளின் கழுத்தை இறுக்கம் செய்தால்
அழகாய் இருக்குமென என் ஆடைத்தேர்வுகள் அவனே செய்தான்
ஆறாம் நாள்
ஒருமனமுள்ளவராய் இருத்தல் சுகமென்றான்
தன் கருத்தை இனிக்கும் மெல்லப்பருகென்றான்
ஏழாம் நாள்
என் உயர்வில் அக்கறை என்றான்
என் உலகம் யாவும் உடன் வந்தான்
எட்டாம் நாள்
பூனைக் கால்களால் எனது நேரங்களுக்குள் நுழைந்தான்
கசக்கி எறியப்பட்டன எனது கவிதைக் களங்கள்
ஒன்பதாம் நாள்
நான் பார்க்குமிடமெல்லாம் அவன் நின்றான்
எனது பார்வைக்குள் அவனது பார்வை ஊடுருவிக் கொண்டது
ஊசிபோல் துளைத்து ஓவென்று வெடித்து
என் கபாலக்கூடு ஆக்கிரமிப்பிற்கானது
தன்னை நினை வலிகள் அகன்றிடும்
என விடாது காதல் செய்தான்
என்றாவது ஒருநாள்
விக்கிரமாதித்தனுக்கு சொல்ல வேண்டும்
சில வேதாளங்கள் தலை வெடித்துச்
சிதறிய பின்னும் தோளோடு தொங்கிய படி
தொடர்ந்து கொண்டிருப்பதை.” (கறுத்த பெண்.பக்.20,21)

என்ற இக்கவிதையில் ஆண் அதிகாரம் கொண்டு பெண்ணை ஒடுக்கவில்லை. மாறாகக் காதல், அன்பு, அக்கறை என்ற பெயருடன் பெண்ணை ஒடுக்கத் தொடங்குகிறான். முதலில் பெண்ணின் பேச்சுக்குத் தடை பின்பு அவளின் வெளிப் பயணம், மற்றும் ஆண் நண்பர்களுடன் பழகுவதற்குத் தடை எனக்கூறித் தொடரும் அப்பட்டியல் பெண்ணின் சுயம் அழிக்கப்பட்டுத் தலை வெடித்த பின்பு கூட தொடரும் அவலநிலையை இறுதியில் விக்கிரமாதித்தன் வேதாளம் மூலம் கூறி முடிக்கிறார் கவிஞர்.

“பெண் தன்னில் பலவற்றை இழந்துதான் இந்த வாழ்க்கையைச் சுமக்கிறாள். அவளின் சுயம் அழிந்து, அவளுக்கான முகமும் அழிந்த நிலையில் தான் அவள் வாழ்வு அமைந்துள்ளது. ஏனெனில் ஆணின் விருப்பப்படியே இங்கு அனைத்தும் நடக்கிறது”3 என்ற தேவதத்தாவின் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கதாகும். பெண்ணானவள் தன் சுயத்தை ஆணுக்காகவும் அவன் உடன் உறையும் குடும்பத்தின் அங்கத்தினர்க்காகவும் இழக்கும் தன்மையைச் சல்மா தன் கவிதை வழி கூறிச் செல்கிறார்.

“எளிய விருப்பங்களுடன்
தயங்கியபடித் தொடங்கும்
உன் வீட்டில்
எனது முதல் நாள்
அருகில் வந்து
என் கை பற்றிப்
பரிச்சயமான முகங்களில் வழிந்த
பிரியங்களின் அரவணைப்பும்
கபடமற்றுத் தொடர்ந்த அக்கறைகளும்
எனது காரியங்களிலொன்றோடு
உங்களில் ஒருவர்
இணங்கி போக முடியாத கணத்தில்
உடையத் தொடங்கும்
பெரும் பாதுகாப்பின்மையை
என்னுள் உறுதி செய்தபடி”    (பச்சைத் தேவதை: ப.48)

என்ற இக்கவிதையின் வழி பெண்ணுக்கான சுயம் ஆணின் குடும்ப உறவினர் வழி அழியும் தன்மையைக் கூறுகிறார். “குடும்பச் சிறையில் அடைபடும் நேரத்துக்கு முன்பு வரை வானத்தை எட்டுவதையும், வெற்றிகளில் முட்டுவதையும் சர்வ சாதரணமாகச் செய்கின்ற பெண்கள் திருமணத்துக்குப் பின் சுவாசிப்பதைக் கூடப் பிரம்மப் பிரயத்தனப்பட்டு செய்கின்றனர்”4 என்ற ஆண்டாள் பிரியதர்சினியின் கூற்று இக்கவிதையோடு ஒப்புநோக்க தக்கது.

பெண்ணும் வீடும் வேறுவேறு அல்ல இரண்டும் ஒன்றில் ஒன்று சமூகக் கட்டுமானங்களால் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு பெண்ணானவள் ஏதேனும் ஒரு செயலைக் குறித்து யோசித்தால் கூட தான் மட்டுமே என எண்ணி சிந்திக்க முடியாது. தன் வீட்டுடன் சேர்த்தே அவளது சிந்தனைகளும் செய்கைகளும் அமையும் வண்ணம் அவளது மனதில் சமூகத்தால் பதிய வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுயம் தேடும் பெண்ணும் கூட வீட்டை விட்டு வெளியேற எத்தனித்தாலும் பல பயணங்கள் செல்ல எண்ணினாலும் மனதளவில் வார்க்கப்பட்ட வீடானது அவளை விட்டு அகலுவதில்லை என்பதை லீனா மணிமேகலை தம் கவிதையில் பதிவு செய்து உள்ளார்.

“என் வீடு
என்னிலிருந்து விலகி மிதக்கிறது
காற்றற்ற கோள் போல
ஒரு கதவின் நகர்த்தலுக்கு பின்னும்
மற்றொரு அடைப்பு எட்டி எறியும்
நிறைய கதவுகளாலானது
என் வீடு

……………..

ஓட்டமெடுக்கும்
கால்களும்
திக்கற்று
பழகிய பாதைக்கே
திரும்பி விடுகின்றன
வீடற்ற என் வீடு”    (ஒற்றையிலை யென.ப.194)

என்ற இக்கவிதையில் வீடு என்ற பெயரில் சமூகம் கட்டமைத்த சட்டகங்களிலும் மரபுத்தளைகளிலும் சிக்கி கொண்ட பெண் சுயம் உணர்ந்த நிலையிலும் வெளியேற இயலாத நிலையைக் கவிஞர் கூறியுள்ளார்.

“குடும்பம் எனும் அடிப்படைச் சமூக நிறுவனமே, ஆண் மேலாண்மைக் கருத்தை வலியுறுத்திப் பெண் அடக்குமுறைக்கு வழி வகுக்கின்றது”5 என்று சமதர்மப் பெண்ணிய வாதிகளின் கருத்திற்கேற்ப சல்மாவின் கவிதை அமைந்துள்ளது.

“வீட்டின் புகை படர்ந்த முற்றத்திற்கு வெளியே
கால்கள் புராதன நகர மொன்றின்
கற்கோயில் வளாகத்தைக்
கடந்து கொண்டிருந்தாலும்
என்னுள் உயிர் பெற மறுக்கும்
கல் மண்டபத்துச் சிற்பங்கள்
நினைவில் ஓசையின்றிப்
புரள்கின்றன
வீடு வந்த குழந்தையின்
ஏங்கிய முகங்கள்

……………….

நானில்லாத வீட்டின் வெற்றிடங்கள்
மறைமுகமாய் இருங்கிருந்தென்னை
வெளியேற்ற
விதிக்கப்பட்ட எல்லை
மீற மாட்டேனென
மீள்கிறேன்
எனது வீட்டின் முற்றத்திற்கே”    (பச்சைத் தேவதை.ப.63)

என்ற இக்கவிதையானது வீட்டில் உள்ளோரின் தேவையைப் பெண் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்பதையையும் ஆண் பெண் இருவரும் பகிர்;ந்து செய்ய வேண்டிய செயல்களைப் பெண்ணின் மீது மட்டுமே சுமையாக ஏற்றி அதை அவளது கடமை என கற்பித்து வைத்திருக்கிறது ஆணின் அதிகாரமும் அவன் உருவாக்கிய சமூகக் கட்டுமானமும் என்பதை இங்கு உணர முடிகிறது. “உண்மையான சமத்துவத்திற்கு மதிப்பு கொடுப்போமானால் உண்மையான அன்பு இருக்குமானால் பிள்ளை சுமந்து பெறும் வேலை ஒன்று தவிர, மற்ற காரியங்கள் இருபாலருக்கும் ஒன்று போலவே இருக்க வேண்டும்”6 என்ற பெரியாரின் கருத்து இன்றளவும் வெறும் கருத்தளவிலேயே உள்ளது என்பதை மேற்கண்ட கவிதை வழி அறியலாம்.

“ஆணாதிக்கத்தின் முதன்மை நிறுவனம் குடும்பம். ஆணாதிக்க முழுமையின் ஒரு ஆணாதிக்க அலகு தனி நபர்களையும் சமூகத்தையும் இணைக்கும் பாலமாகக் குடும்பம் கண்காணிப்பையும், நிர்ணயத்தையும் செலுத்துகிறது. அரசியல் மற்றும் பிற அதிகாரங்கள் போதாத போதில் பெரிய சமூகத்தின் ஏஜெண்டாக குடும்பம் தனது உறுப்பினர்களை விட்டுக்கொடுத்து வாழ மட்டும் சொல்லித் தராமல், ஆணாதிக்க அரசின் அரசாங்கத்தில் ஒரு அலகாக குடும்பத் தலைவர்கள் வழிக் குடிமக்களை ஆட்சி செய்கிறது……..குடும்பம், சமூகம், அரசு மூன்றுமே ஆணாதிக்க நிறுவனங்கள் உளத்தொடர்புடையவை. இவற்றிற்கு மதங்களின் துணையும் சேர்கின்றது. மதச்சார்பற்ற அரசாங்கங்கள் கூட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், பாஸ்போட்டில், வரிச்சீட்டில் குடும்பத் தலைவர் என்று ஆணையே குறிக்கின்றது”7 என்பதன் மூலம் முதலில் ஆண் தன் அதிகாரத்திற்கான தொடக்கப் புள்ளியைக் குடும்பத்தில் இருந்தே ஆரம்பிக்கும் நிலையை அறியமுடிகிறது. இத்தகைய ஆண் ஆதிக்கச் சமூகத்தால் கட்டுண்ட பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப் பட்டு அந்த வீடாகவே மாறிப் போகும் நிலையை மாலதி மைத்ரி கவிதை வழி அறிய முடிகிறது.

“ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக் கிடக்கின்றன
வயதுக் கேற்றப்படி தம் உறவுகளுக்காக
கொலைகாரன் திருடன்
குடிகாரன் துரோகி மோசடிக்காரன்
ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரகன்
கொடுங்கோலன் காம வெறியன்
சாதி வெறியன் மதவெறியன் இனவெறியன்
இவர்கள் யாரையும் வீடு கைவிட்டு விடுவதில்லை
அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது”
(நீரின்றிஅமையாது உலகு:ப.35)

என்ற இக்கவிதையில் பெண்ணை வீடாக எண்ணும் ஆண் சமூக மன நிலையை கூறும் கவிஞர், ஆண் எந்நிலையில் இருந்தாலும் என்ன தவறு செய்தாலும் பெண்ணானவள் அவனைவிட்டு நீங்குவதில்லை எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அறியவருவது பெண் ஆண் சமூக மரபுகளை மீறும் தவறு செய்தாலோ சுயம் உணர்ந்தாலோ அல்லது ஆண் விரும்பாத ஏதோ ஒரு காரியத்தை செய்தாலோ அவளை தண்டித்து ஒதுக்கி வைக்கும் நிலையை உள்ளீடாக இக்கவிதை கூறுகிறது. மேலும் பெண்ணின் உடலும் வீடும் வேறு வேறு அல்ல ஒன்றுதான் எனக் கூறும் ஆண் சமூக போக்கைத் தன் கவிதையில் சாடியுள்ளார்.

“ஆண்கள் வீட்டைப் புணர்வதன் மூலம்
பூமியை வளர்க்கிறார்கள்
பெண்களை யல்ல
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை” (நீரின்றி அமையாது உலகு.ப.35)

என்ற இக்கவிதையில் பெண்ணை வீடாகவே எண்ணி அவளை முடக்கும் ஆதிக்கச் சமூகத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார். அத்தோடு அல்லாமல் மேலும் சுயம் உணர்ந்த பெண் என்றுமே வீடாவதில்லை அவள் காலத்தையே ஆளக் கூடியவள் என்பதையும் உரத்துப் பேசுகிறார்.

குடும்ப அமைப்பில் வாழத் தொடங்கிய ஆணும் பெண்ணும் தங்களுக்குள் பல மனவேறுபாடுகளுடன் வாழ நேர்கிறது. அதில் சுயம் உணர்ந்த பெண்ணிற்கு தன் துணையான ஆணினால் ஏற்படும் அதிகாரப் புறக்கணிப்பு, புரிதலின்மை, அலட்சியப் பார்வை போன்றவையால் தினம் தினம் மனது சிதைக்கப்படுகிறது. இந்நிலையை விடுத்து பிரிய எத்தனிக்கும் வேளையில் குழந்தைகளுக்கானப் பொறுப்பு பெண்ணை மீண்டும் சிறைப்படுத்துகிறது என்பதை கவிதாவின் கவிதை வழி அறியமுடிகிறது.

“வார்த்தைகளில் அலட்சியப்படுத்தும்
தருணங்களாலும்
பார்வைகளால் நிராகரிக்கப்படும்
நிமிடங்களாலும்
புறக்கணிப்பை புன்னகைத்து
நீண்ட பயணத்தில்
பிரியமுடியா எதிரிகளாய்
பயணிகள் ஆவதுண்டு
வாழ்கின்ற
வாழ்க்கைக்கும்
வாழ நினைக்கின்ற
வாழ்க்கைக்கும்
இடையில்
நீண்ட, நிரப்பபடாத
இடைவெளிகள்
இரட்டையாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன
இணையாத தண்டவாளங்கள் என
எங்கள் குட்டி ரதங்களின்
பயணத்திற்காக
வளைந்து நெளிந்து
போய்க்கொண்டிருக்கும் தண்டவாளங்கள்
இணைபிரியாதது போலிருந்தாலும்
வாழ்தல்
சிலருக்கு இனிய ரயில் பயணம்
சிலருக்கு
இரும்புத் தண்டவாளம்”    (கறுத்த பெண்.ப.26)

என்ற இக்கவிதையில் குடும்பம் எனும் அமைப்பு பெண்ணை மீண்டெழ முடியாத அளவு அவளின் மீது கடமைகளைத் திணிக்கும் நிலையைக் கூறுகிறது. வாழ்வது கடினமாக இருந்தாலும் குழந்தைகளுக்காக வாழ வேண்டிய சூழலே பெரும்பான்மையான பெண்களுக்குச் சமூகத்தில் நேரும் நிலையாக உள்ளதனையே இக்கவிதையும் வெளிப்படுத்தி உள்ளது.

குடும்ப அமைப்பில் மிக இயல்பாகப் பெண்ணுக்கு ஒடுக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் அதைக் குறித்த குற்ற உணர்வோ அல்லது மனித நேயமோ இன்றி ஆண் சமூகம் தன் இயல்பு மாறாமல் அதிகாரத் தோரணையிலேயே பெண்ணை நோக்குகிறது. அத்தோடு அல்லாமல் ஆணினுடைய உடைகள் கூட பெண்ணைக் கட்டளையிடுவதாக மாலதி மைத்ரி வெளிப்படுத்தியுள்ளார்.

“ஆளற்ற வீட்டில்
உனது உடை தொங்கிக் கொண்டிருக்கிறது
எந்த வொன்றையும் அதனுடன் பேசி
எல்லாவற்றையும் துவங்குவது புதிதல்ல
வீட்டின் எந்த மூலையில் இருந்தாலும்
அல்லது
உள்ளும் வெளியிலும்
பின் தொடருவதை பொருட்படுத்தவில்லை”
(நீரின்றி அமையாது உலகு.ப.57)

என்ற இக்கவிதையில் ஆணின் உடை மூலம் ஆணின் செயல்களை வெளிப்படுத்துகிறார்.

“அதன் கட்டளைகளைத் தவிர
மௌனம் அதிகக் கலவரப்படுத்த
பூதவுடல் அனைத்தையும் அடைகாத்தபடி”   
(நீரின்றி அமையாது உலகு.ப.57)

என்ற இவ்வரிகளில் ஆணின் மௌனமே அதிக மனப்பதட்டத்தைப் பெண்ணுக்கு உண்டு பண்ணக் கூடியது எனக் கூறியுள்ளார். ஏனெனில் அவ்வமைதி புயலுக்கு முன் வரும் அமைதி போன்றது. மேலும் பெண்ணின் ஒழுக்கம் குறித்து சந்தேகம் கொள்ளும் மனப்பான்மையைக் குறிப்பிடுகிறார். “பெண் தன்னை விட்டு அந்நியப்பட்டு விடுவாளே என்ற அச்சத்திலேயே, ஒவ்வொருகணவனும் வாழ்கிறான். அந்த அச்சத்தைப் போக்கத்தான் - சமூக – ஒழுக்க, நீதி, நெறி, அறப்பண்புகளை எல்லாம் பெண்ணை மையப் படுத்தியே சமூகம் வைத்திருக்கிறது”8 என்ற இமையத்தின் கருத்து இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

இதுவரைக் கண்ட கவிதைகளை உற்றுநோக்கும் போது குடும்பம் என்கிற அமைப்பு உருவான காலம் முதல் இன்று வரை பெண் ஒடுக்குதல் மட்டும் எந்த மாறுதலும் இன்றி நிகழ்ந்து வருகிற நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. ஆதிக்க சமூகத்தின் தொடக்கப் புள்ளியான குடும்பம் இன்று வரை பெண்ணைக் கட்டுக்குள் வைப்பதை செவ்வனே செய்து வருகிறது எனலாம். பெண் கவிஞர்களின் இந்தக் கவிதைகள் குடும்பத்தில் பெண்ணின் நிலையையும் ஒடுக்குதலையும் அதற்கு எதிரான தனது மன மாற்றத்தையும் கூறினாலும் குடும்பத்தை விலக்கும் நிலையை எக்கவிதையிலும் வெளிப்படுத்தவில்லை எனலாம்.

ஆண் சமூகப் பார்வையில் பெண் :

சமூகத்தில் இந்த நிமிடம் வரை எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் பெண்ணை ஒடுக்கித் தனது கட்டுக்குள்ளேயே வைக்க வேண்டும் என்ற ஆணின் ஆதிக்க மனம் மட்டும் மாறவே இல்லை. “பெண்கள் மென்மையானவர்கள், பூப் போன்றவர்கள், வலிமை இல்லாதவர்கள், புத்தியில்லாதவர்கள் என்றும், அவர்கள் அடங்கிப் போக வேண்டியவர்கள்தான் என்றும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஆண்களால் சொல்லிக் கொண்டிருக்க முடியும். அதைக் கேட்டுக்கொண்டு இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பெண்களால் மனதுக்குள் குமறிக்கொண்டு வெளியில் பதுமை போல் நடிக்க முடியும்”9 என்ற றஞ்சியின் கருத்து இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பெண்கள் சுய அளவில் மாற்றம் பெற்றாலும் அதை வெளிகாட்ட இயலாத நிலையே நிலவி வருகிறது. ஆணின் பார்வையில் பெண் உடலின் தேவைக்கும், குழந்தை வளர்ப்புக்கும், கீழ்படிதலுக்கும் மட்டுமே உரியவள் என்று எண்ணுகிற தன்மை மிகுந்து கொண்டுதான் செல்கிறது. பெண்ணின் இயல்பு குறித்தோ மன உணர்வு குறித்தோ அறிய ஆண்கள் முற்படுவதில்லை. சில சமயங்களில் காதல், கருணை, அன்பு அக்கறை என்பது போல ஆண்கள் பெண்ணிடத்தில் நடந்து கொண்டு அதையே ஆயுதாமக்கிப் பெண்ணை ஒடுக்குகின்றனர். இவ்வாறான பல்வேறு நிலைகளைப் பெண் கவிஞர்கள் தம் கவிதை வழி வெளிப்படுத்தி உள்ளனர்.

சமூகத்திலும், குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு அதிகமாக வலியை உண்டாக்கும் நபர் பெரும்பான்மையாக ஆணாக உள்ளான். அவ்வாறு வலிகளை உண்டாக்கிய ஆணிடமே தன் வலிகளைக் கூறும் பெண் மனதை சல்மா தன் கவிதையில் பாடியுள்ளார்.

“நீ அருகிருந்த வேளை
நிலைக் கண்ணாடி பிம்பமென
எப்படியோ வந்துவிட்டது
சில வருத்தங்களும் வலிகளும்
என் நினைவுகளில்
உன்னைப் பற்றிய வலிகளை
நீக்கிவிடச் சொல்லி மன்றாடுகிறாய்
உனக்குப் புரிவதில்லை
உன்னைப் பற்றிச் சொல்லாமல்
வலியைப் பற்றி மட்டுமே பேசுமென்
சாத்தியமின்மை”    (பச்சைத் தேவதை.ப.24)

என்ற இக்கவிதையில் பெண் தன்னுடைய வேதனைகளும் வலிகளும் யாரால் உண்டாகியது என்பதைப் பாடியுள்ளார். வலியை உண்டாக்கிய ஆணிடமே அதை கூறவரும் நிலையில் அதை கேட்க விரும்பாமல் ஆண் மனம் தவிர்க்கவே எண்ணுகிறது. பெண் வலியையும் வேதனையும் போக்க முடியாத ஆண் அதை கேட்கக் கூட விரும்பவில்லை என்பதை இக்கவிதை வலி அறிய முடிகிறது.

“தன்னைப் புரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ள முயற்சிகூடச் செய்யாத ஆணின் உணர்வுகளை அறியும் பெண், தன் சோகத்தைக் கையற்ற நிலையை, விரக்தியை வெளிப்படுத்தும் நிலையில் பெண்ணிற்கான மொழி உருவாகிறது”10 என்ற தேவதத்தாவின் கருத்திற்கு ஏற்ப சல்மாவின் கவிதை அமைந்துள்ளது. மேலும் பெண்ணை ஒடுக்கவோ இழிவு படுத்தவோ எண்ணும் ஆண் சமூகம் வார்த்தைகளையே வசைகளாக்கி அதன் மூலம் பெண்ணின் சுயத்தை வீழ்த்த முயற்சி செய்யும் போக்கினையும் பெண் கவிஞர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஓர் ஆணின் வார்த்தைகள் பெண்ணின் மனதில் பல்வேறு தாக்குதல்களை உண்டாகும் என்பதை லீனா மணிமேகலை தம் கவிதை வழி கூறியுள்ளார்.

“வீசிய
சொல்லில்
அறுந்து தொங்கியது
தலை
நிஜமாகத்தான்
புலந்தனா
எனக்
காதுகள்
புடைத்துச்
சமைந்தன
பிளந்த நிலத்தின்
ஓலமானது
சுருங்கி சுணங்கியது
நிழனின் இருமையாய்
சுழன்றடித்த
சொல்லின்
கசாப்பு மணத்தில்
அன்பு
மூச்சடைத்தது
சொன்னதில்
உறைத்தது
சொல்லாததின்
வீரியம்”    (ஒற்றையிலை யென.167)

பெண் மனம் எதிர்பாராத நிலையில் வெளிப்படும் ஆணின் அவதூறு சொல் அவளை ஒருநிமிடம் உறைய வைக்கிறது. காதுகளும் நம்பாமல் அதை உறுதி செய்ய முனைகின்றன. இறுதியில் ஆண் தன் அதிகாரத்தை வெளிப்படுத்த பயன்படுத்திய தொனி இதுவென அறியும் பெண்ணின் மன உணர்வைப் பாடியுள்ளார்.

எதிர்பாராத நேரத்தில் தாக்கிய சொல்லின் வீரியத்தைக் கூறும் கவிதையாக லீனா மணிமேகலையின் கவிதை அமைந்துள்ளது. ஆனால் கவிதாவின் கவிதையிலோ அந்த சொல்லாகிய ஆயுதம் கொண்டு நித்தம் போர் நடக்கும் எனக் குறிப்பிடுகிறார்.

“மீண்டும் போர்
மீண்டும் ரணம்
மீண்டும் கேள்விகணைகள்
மீண்டும்; பதில் தேடும் சுமை
கையாலாகத்தனத்தின் கதறல்
தனிமனிதர்களாய் நின்று
தடைமட்டமாக்கும் வல்லமை
சொல்லாயுதங்களுக்கே உண்டு
பிரம்மாஸ்திரம் மௌனம்

…………

நேற்று விழுந்த
சடலத்தோடு கிடக்கிறது
நாணேற்றியபடி
வாழ்தலுக்கான
நாகாஸ்திரம்
அதையும் பிடுங்கியெறிந்து
நாளைக்கான அஸ்திரங்களைப்
பொறுக்கியபடி
எழுந்து செல்லும் உடல்கள்
நேற்றையைப் போலவே இன்றும்
சுயம் இழந்து
முகம் தொலைகிறது”    (கறுத்தபெண்.ப.55)

பொதுவாகப் போர் என்பது ஆதிக்க வெறியின் தொடக்கம் அழிவின் முடிவு எனலாம். இந்நிலையில் இக்கவிதையானது ஆண் பெண்ணுக்கிடையே நிகழும் சண்டைகளைப் போர் என அறிவித்துப் பாடப்பட்டுள்ளது. இதை நோக்கும் போது ஆணின் அதிகாரத் தொடக்கம் சொல் அம்புகளாகப் பெண்ணைத் தாக்க அதில் பெண்ணின் மனம் மட்டுமல்ல அவளின் சுயமும் காயப்படுகிறது.

மேலும் அன்பைக் காட்டும் ஆணின் முகம் மாறி அதிகாரத்தை நிலை நிறுத்தும் போக்கே காணப்படுவதை இக்கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர். மேற்கண்ட இரண்டு கவிதைகளிலும் உள்ள சூழலையே களமாக அமைத்து சல்மாவும் கவிதைக் கூறியுள்ளார்.

“அவமதிப்பின் விஷம் தீண்டிய
பிறிதொரு தருணத்தில்
மொட்டை மாடியில் துணையிருக்கிறது
நிலவு………..
பேசிக்கொண்டிருப்பது மட்டுமே
இனிச் சாத்தியமென்றான பிறகு
நீ உடைத்த நிசப்தத்தில்
தெறித்து உருண்டோடிய வார்த்தைகளில்
துளிர்த்து வழிகிறது நஞ்சு”    (பச்சைத் தேவதை.பக்.28,29)

என்கிற கவிதைகளில் ஆணின் வசைச் சொற்கள் பெண்ணை விஷம் (நஞ்சு) போலத் தாக்கும் என்று ஆணின் மனோபாவத்தைச் சாடியுள்ளார். பெண்ணை அவமதிக்க எண்ணும் ஆண் ஆதிக்கச் சமூகம் தன் சொற்களில் விஷம் தடவி பிரயோகிப்பதை ஆண்மையின் வீரம் என எண்ணியே இன்று வரை அவ்விழிவான செயலைப் புரிந்து வருகிறது.

“சமயத்திற்கு தகுந்தாற்போல் பெண்களைச் சாடுவதில் இந்த சமூகத்திற்குத்தான் எத்தனை ஆசை! வேலைக்குப் போகும் பெண்ணா? ‘உனக்கு சம்பாதிக்கும் திமிர்’ என்பதும் அதிகம் பேசினால் ‘வாயாடி’ அமைதியாக இருந்தால் ‘ஊமைக் கொட்டான் மாதிரி இருந்துகிட்டு…..’ என்று பட்டம் கொடுப்பதும், கணவனை, சொல் பேச்சு கேட்க வைத்தால்,‘மயக்கி விட்டாள்’ என்று சொல்வதும், அதே கணவன், மனைவி சொல்வதை கேட்காமல் இருந்தால்,‘மயக்க தெரியவில்லை’ என்பதும் அப்பப்பா! போதுமடா சாமி! ஒரு பெண் படித்து பட்டம் பெறுகிறளோ, இல்லையோ இந்த சமூகம் அவள் கேட்காமலேயே அத்தனைப் பட்டத்தையும் கொடுத்து விடுகிறது”11 என்ற இக்கருத்து இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். குடும்ப அளவில் இவ்வாறான வசைச் சொற்கள் பாடுவது தொடரும் கதையாகும் ஆனால் பொது வெளியில் செயல்படும் பெண்ணின் மீது அவளின் ஒழுக்கம் குறித்த அவதூறு சொற்களை வெகு எளிதாக ஏசிவிடும் நிலை இன்றைய ஆண் ஆதிக்கச் சமூகத்தில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இவ்வாறான சூழலைதான் லீனா மணிமேகலை தன் கவிதை வழி கலகக் குரலாக வெளிப்படுத்தி உள்ளார்.

“நீ சொற்களை
வல்லுறவு செய்ய ஏவினாய்
மலம் மூத்திரம்
கழுவப்படாத கழிப்பறை
அழுகல் அலறல்
செத்த எலி
வீச்சம் நிணம்
ஊசிய மீன்
வலி உதிரம்
கறை இருள்
பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள்
என்னிடமும் சொற்கள் இருந்தன”    (பரத்தையருள் ராணி.ப.42)

இக்கவிதையில் ஆண் சமூகம் பெண்ணை இழிவு படுத்த பயன்படுத்தும் வார்த்தைகளின் தன்மையை எடுத்துக் கொண்டு அதையே ஆயுதமாகக் கொண்டு ஆண் சமூகத்திற்கு எதிரான கலகக்குரலாக முன் வைத்துள்ளார். ஆதிக்க சமூகம் கட்டமைத்த மரபு சட்டகங்கள் எனும் மந்தைக்குள் ஆடுபோல செல்லாமல் தன் சுதந்திர வெளியை உணர்ந்த பெண்ணை அக்காலம் முதல் இன்று வரை வசைப் பாடுவதை ஆதிக்க சமூகம் நிறுத்தவே இல்லை என்பதை,

“உள்ளிருக்கும் ஜோதி ஒளியை விசாரியாதே
கள்ள அவிசாரி என்று கவி சொல்லுவார்
கண்டத்திலாத்மாவை கண்டு விசாரியாதே
வண்ட அவிசாரி என்று வைவார்”    (ஆ.ப.தி.ப.92)

ஆவுடையக்காளின் கவிதை வழி அறியமுடிகிறது. பெண்ணும் தனக்கான கலகக்குரலைப் பதிவு செய்யத் தவறுவது இல்லை என்ற செய்தியை இப்பாடல் வழி உய்த்துணர முடிகிறது.

கணவன் மனைவி இடையிலான உறவானது சமூகத்தில் ஆண்டான அடிமை என்கிற நிலையே பெரும்பான்மை நிலவுகிறது. “ஆண் பெண் கல்யாண விஷயத்தில், புருஷன் மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாணத்தத்துவம் எல்லாம் சுருக்கமாய்ப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே அதில் இல்லை”12 என்ற பெரியாரின் கருத்திற்கு ஏற்பவே சல்மாவின் கவிதை இங்கு அமைந்துள்ளது என்பதை,

“முன் எப்போதோ
தன் பறத்தலிலிருந்து
நிலம் மீண்ட மயிலிறகு
ஒளிந்திருக்கிறது
என் குழந்தையின் புத்தக இடைவெளிக்குள்
தன் உயிர்ப்பின் வெம்மையோடு
அவனது கனவுகளை அடைகாத்தபடி”    (பச்சைத் தேவதை.ப.23)

என்ற கவிதை வழி அறியமுடிகிறது. மணமான பெண் தனக்கான வெளியை மறந்து தன் கணவனின் ஆசை மற்றும் கனவுகளுக்கு மட்டுமே முக்கியதுவம் தந்து கட்டுண்டு கிடப்பதை இக்கவிதை வரிகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இவ்வாறாக ஆணின் தேவைக்கும் கனவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழும் பெண்ணின் உணர்வுகளை ஆண் புரிந்து கொள்வதே இல்லை என்பதை லீனா மணிமேகலையின் கவிதை கூறிச்செல்கிறது.

“காற்றாடி ஆலையின்
இராட்சசக் கத்திகள்
ஓங்குவதும் ஒடுங்குவதுமாய்
சுழன்று கிடக்கின்றன
திசைகளின்
ஆதரவை
மட்டுமே
தேடித் திரியும்
காற்றுக்கு
கத்திகளின் சோர்வு
புலப்படுவதே இல்லை”    (ஒற்றையிலையென.ப.162)

இக்கவிதையில் பெண்ணையும் ஆணையும் கத்தி , காற்று என உருவகப்படுத்திப் பாடியுள்ளார் கவிஞர். தன்னுடைய தேவைகளை மட்டுமே தேடித்திரியும் ஆண் என்றுமே பெண்ணின் தேவையை அறிய முயற்சி கூட செய்வதில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆண் சமூகம் பெண்ணின் தேவை குறித்து எண்ணுவதில்லை என்பதோடு அல்லாமல் தான் செய்த தவறுகளுக்கும் பெண்ணையே குற்றம் சாட்டும் நிலை நிலவி வருகிறது.

“ஏங்கி கருமையுற்ற முகத்தோடு
ஏரி சலனமற்றிருக்கிறது
சில நாட்களுக்கு முன்
தயக்கமின்றி உன்னிடமிருந்து
காலியான மதுக்கோப்பைகளை
விட்டெறிந்திருந்தாய் அதில்
மறுக்காமல் பெற்றுக் கொண்டது
ஏரி
பிறகொரு நாள்
நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்
கழுவிச் சாம்பலையும் கரைத்தாய்
நேற்றுகூடக்
கசந்துபோன நம் உறவினை
இகழ்ந்து எச்சில் துப்பினால்
தண்ணீரில்

எந்தக் காலமென்றில்லாமல்
எல்லாக் காலங்களிலும்
உன் கழிவுகளைக் கொட்டி
உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய்
இன்று இதில் எதையும்
நினைவுறுத்தாது
உன் தாகம் தணிக்கத்தயாராகிறாய்”    (பச்சைத் தேவதை.ப.39)

அதிகாரத்தைத் தன் வசம் கைப்பற்றிய ஆண் சமூகம் பெண்ணை பல்வேறு மரபுகளைக் கூறி ஒடுக்கி வருகிறது. அத்தோடு அல்லாமல் தான் செய்கின்ற தவறுகளுக்கும் காரணகர்த்தவாகப் பெண்ணையே குற்றம் சாட்டுதலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையை இக்கவிதை கூறுகிறது. இவ்வாறு பல விதங்களில் பெண்ணை அடிமையாக்கும் ஆதிக்க மனம் கொண்ட ஆண் தன்னுடைய உடல் தேவைக்காக மட்டும் பெண்ணைப் பயன்படுத்தும் தன்மையைக் கவிதையின் இறுதிவரிகள் கூறிச் செல்கின்றன.

“பெண்களின் உடலை தேவையின் பொருட்டு பண்டமாக்கிக் கொள்கிற குடும்ப நிறுவனமும், ஆணாதிக்கமும் அவளது மனதையும் உடலையும் பொருட்டாகக் கொள்வதில்லை”13 என்ற கருத்து இவ்விடத்தில் குறிக்கத்தக்க ஒன்றாகும். இவ்வாறான சமூகம் விதித்த கட்டுப்பாடுகளும் ஆணின் குற்றச்சாட்டுகளும் பெண்ணை ஒடுக்குவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்ட போதும் தனக்கான வெளியைத் தேடி சுயத்தை உணர எத்தனிக்கும் நிலையிலும் ஆண் பல முட்டுக்கட்டைகளைக் கொண்டு தடுத்துக் கொண்டே உள்ள ஆண் ஆதிக்கத்தைச் சல்மா குறிப்பிடுகின்றார்.

“நான் வரைய முயலும்
வேறொரு சித்திரத்தையோ
வரைய விரும்புகிற
ஏதேனும் ஓர் உருவத்தையோ
அனுமதிப்ப தேயில்லை
என் பயணங்களில் எதிர்ப்பட்டு
சாலையைக் கடந்து கொண்டேயிருக்கும்
ஒரு மன நோயாளி”    (பச்சைத் தேவதை.ப.27)

தன் தேடலை இனம் காண முயலும் பெண்ணிற்குப் பல தடைகளை விதித்து அதை அனுமதிக்க மறுக்கும் ஆண் ஆதிக்க மனநிலையைக் கவிஞர் இக்கவிதையில் மன நோயாகச் சாடியுள்ளார். “பெண்ணின் இயலாமையும் புலம்பலும் சுயமற்ற அவளது வாழ்வும் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன. ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட பெண்களால் இயல்பாக இருக்க முடிகிறது. ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற பெண்மனம் தவிப்புக்கும் அதிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாத தடைகளிலிருந்து மீட்டுக்கொள்ள போராடித் தோற்பதும் தொடர்கிறது. ஆணாதிக்கத்தை எதிர்ப்பதற்கு பெரிய அரசியல் தெளிவு தேவையில்லை. சுயத்தைத் தக்க வைக்க வேண்டும் என்ற அடிப்படை மனநிலை அடக்கு முறையை எதிர்க்கும் மனநிலையை நோக்கி நகர்த்தும்”14 என்ற விசயலெட்சுமியின் கருத்து இவ்விடத்து ஒப்பு நோக்கதக்கதாகும்.

ஆதிக்கம் கொண்ட ஆண்மனம் பெண்ணை, தன் கட்டுள்ளேயே வைக்க பலவழி முறைகளைக் கையாள்கிறது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு செயல் பெண்ணின் ஒழுக்கம் குறித்து இழிவாகப் பேசி அதைக் கேள்விக்குள்ளாக்குவது,

“விபசாரின் மறைவிடங்களில்
பதுங்கி திரிபவளென்கிற
உன் கற்பனைகளைக் கேட்டபடி
இங்கேதானிருந்து கொண்டிருக்கிறேன்
என் நண்பனொருவனின் அடையாளம் சொல்லி
இவள் உங்கள் தகப்பனெனவும்
தன் குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு
என் சாயல்கள் அதிகமெனவும்
நாம் குழந்தைகளுக்கு நீ சொல்கையில்
பிடிபடுகிறது
உன் ஆதிக்க வெளியின் எல்லை
என்னோடு மட்டும் முடிவதில்லை
என”    (பச்சைத் தேவதை.ப.18)

ஆணின் அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் கட்டுபடாத பெண்ணை வீழ்த்த எண்ணும் ஆண் மனம் பிரம்மாஸ்திரமாகப் பயன்படுத்துவது பெண்ணின் ஒழுக்கத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவது. இதனால் பிறந்த நாற்முதற் கொண்டு ஒழுக்கம் மட்டுமே உயிரைவிட சிறந்தது என போதிக்கப்பட்டு மனதில் திணிக்கப்பட்ட அக்கருத்து பெண்ணைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் முடக்கும் என்பதை அறிந்த ஆதிக்க மனம் இச்செயலைத் தொடர்ந்து செய்கிறது. மனைவியிடம் மட்டுமின்றி தன் குழந்தைகளிடமும் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த இவ்வாறான இழி செயலை அதிகாரம் கொண்ட ஆண் செய்யத்தவறுவது இல்லை என்பதை சல்மா கவிதை வழி அறிய முடிகிறது.

முடிவுரை :

குடும்பக்கட்டுமானத்தில் பெண், ஆணின் அதிகாரம் கொண்டும், அன்பு என்ற பெயரிலும், கடமை என்கிற ரீதியில் மரபு என்கிற கட்டுகளிலும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு கொண்டேயிருக்கிறாள். ஒடுக்கப்படுகிறாள் என்பதை விட இத்தகைய தன்மைகளைப் பெண்ணோடு ஒன்றாகப் பிணைத்து விட்டிருக்கிறது ஆண் சமூகம். குடும்பத்தில் பெண் ஒடுக்கப்படும் போது அதை கேள்வி கேட்கும் விதமான மனமாற்றம் பெற்ற பெண் மொழியைக் கூறும் கவிதைகள் பெண் குடும்பத்தை ஒதுக்கி வைக்கும் முடிவை எக்கவிதையிலும் வெளிப்படுத்தவில்லை.

ஆணின் பார்வையில் பெண் போகப் பொருளாகவும் அடிமைத் தொழில் புரியும் உயிராகவும் குழந்தையைக் காக்கும் தாதியாகவும் மட்டுமே உள்ளநிலை கூறப்படுகிறது. மேலும் பெண்ணைக் காயப்படுத்த ஒழுக்கம் குறித்த வசைபாடுகளை அதிகமாகப் பயன்படுத்தும் நிலையும் வெளிப்படுகிறது. ஆணுக்காகப் பெண் பல செயல்களைச் செய்தாலும் பெண்ணின் உணர்வை புரிந்து கொள்ள முயற்சி செய்யாத ஆதிக்க மனமாகவே ஆண் உள்ளான் என்பதையும் கூறுகிறது. பெண்ணை உடலாக மட்டுமே காணும் போக்கு ஆண் சமூகத்திடம் மிகுந்து கொண்டே செல்கிறது.

அடிக்குறிப்பு

1. நிர்மலா,பெண்ஏன்அடக்கப்பட்டாள்? ஏன் ஒடுக்கப்பட்டாள்? பெரியார் குரல் வலைதளம்
2. ஆண்டாள் பிரியதர்ஷினி, பெண் எழுத்து., ப.71
3. முனைவர் தேவதத்தா, மௌத்தின் அதிர்வுகளும் மொழியும் பெண்., ப.73
4. ஆண்டாள் பிரியதர்ஷினி., மு.நூ., ப.70
5. தேவதத்தா, தி. கமலி, பெண்ணிய கலைச்சொல் விளக்க கையெடு, ப.25
6. தந்தை பெரியார், பெண் ஏன் அடிமையானாள், ப.20
7. அருணா (க.ஆ), பாலியல் அரசியல் பற்றிய கோட்பாடு, காவ்யா சண்முக சுந்தரம் (தெ.ஆ), பெண்ணியமும் பிரதிகளும், ப.135
8. இமையம்., நான் எழுதிய பெண்கள், இமையம் வலைதளம்
9. முனைவர் தேவதத்தா., மு.நூ., ப.39
10. மேலது., ப.70
11. குடும்பமாது (க.ஆ), றஞ்சி சுவிஸ், மேகலா, காசினி (தெ.ஆ), கட்டுடைக்கும் பெண் (பெண்படைப்பாளர்களின் தொகுப்பு), ப.39
12. தந்தை பெரியார், மு.நூ.,ப.32
13. ச.விசயலெட்சுமி, பெண்ணெழுத்துகளமும் அரசியலும், பக்.106-107
14. மேலது., ப.107

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R