திருக்குறள் எத்துணைக் காலங்கடந்தாலும் கற்பக மலர்போல் நின்றொளிரும் நீர்மையது என்று முன்னோர்களால் பாராட்டப்பெற்றது. தமிழரின் தனிக்கருவூலமான திருக்குறளையும் அதன் உரைகளும் ஆராய்தல் வேண்டும். இந்நூலுக்கு உரை எழுதிய பண்டை ஆசிரியர்கள் பதின்மர். இடைக்காலத்தில் கருத்து மாற்றங்களுடன் விளக்கவுரை எழுதியவர்கள் சிலர். பண்டைய பலருரைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சி அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்குறள் உரைவளம், திருக்குறள் உரைக்களஞ்சியம், திருக்குறள் உரைக்கொத்து ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
அழிவற்ற அரிய அமுதசுரபியான திருக்குறளுக்கு இன்றுவரை நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட உரைகள் எழுதப்பட்டுள்ளன. அது தோன்றிய நமது அறத்தமிழ் மொழியிலும், அண்டை அயல்மொழிகளிலும் தோன்றித் துலங்கி மூலநூலுக்கு உயிர்ப்பும், செழிப்பும், சிறப்பும், பரப்பும், உயல்வும், பயில்வும் ஊட்டி வருகின்றன. திருக்குறள் போன்று உலகில் தோன்றிய வேறு எம்மொழி நூலுக்கும், எவ்வற நூலுக்கும் இப்பலர்பால் உரைப்பேறு வாய்த்தது இல்லை என்று உறுதிப்படக் கூறமுடியும்.
சங்கப் பாக்களிலுள்ள அகமும், புறமும் நெஞ்சில் புதைந்துள்ள உணர்வுகளைக் கொட்டுபவை. இதில் காதல் உணர்வும் வீரத்துடிப்பும் உணர்ச்சி அடிப்படையில் அமைபவை. நெஞ்சின் அலைகளே அப்பாடல்களில் கொதித்துத் துடிக்கின்றன. இங்கு அறிவு இரண்டாம் இடமே பெறுகிறது. ஆனால் வள்ளுவரின் வழியில் மெய்யறிவு முதலிடம் பெறுகிறது. ஆராய்ச்சி அதனுடைய நெஞ்சமாக அமைந்து விடுகிறது. இங்கு உணர்ச்சி இரண்டாம் இடத்தையே கொள்கிறது. எனவே உலக மக்களிடத்தில் உண்மையான மெய் விளக்கை ஏற்றி அறிவுப் பெட்டகத்தை வழங்கிய பெருமை வள்ளுவரையே சாரும்.
கோடி விளக்கேற்றி இருளையும் பகலாக மாற்றி விடலாம். ஆனால் இவ்விளக்கொளியால் புறவிருளை மட்டும் அகற்றலாமே தவிர நம் அகவிருளை அகற்ற முடியாது. நம் மனதை மருட்டி மதியை மயக்கி அறிவைக் குலைத்து ஆன்மாவை அழுத்திக்கிடக்கும் ஆணவ இருள் மிகக் கொடியது. இதனை அகற்றும் சக்தி வள்ளுவரின் மெய்விளக்கு திறனால் மட்டுமே சாத்தியமாகும். அத்தகைய வழியில் குறளுரையில் மெய்விளக்கு என்னும் தலைப்பில் ஆராய்வது அவசியமாகிறது. இதில் மூவருரையினை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராயப்பட்டுள்ளது.
மணக்குடவர்
திருக்குறள் உரைகளில் முதன்மையானது என்று போற்றப்படுவது மணக்குடவர் உரையே. இவரின் காலம் 11 ஆம் நூற்றாண்டாகும். பரிமேலழகர் உரை வளம்பெற வழிவகுத்தவர் மணக்குடவர் என்பது அறிவியல் மதிப்பீடு, சுட்டும் பாடவேறுபாடுகளும் மணக்குடவர் பாடங்களே என்பது நன்கு புலப்படும். பரிமேலழகர் உடன்படும் உரைகளும் உறழும் உரைகளும் உண்டு
பரிமேலழகர்
இவர் உரை எழுதிய காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியாகும். இவர் அறத்துப்பாலை இல்லறம், துறவறம் என இப்பகுதியாகவும் பொருட்பாலை அரசியல், அங்கவியல், ஒழிபியல் என மூவகையாகவும், காமத்துப்பாலை களவியல், கற்பியல் என இரு பகுதியாகவும் பகுத்துக்கொண்டு உரைகூறுவார். பதின்மர் உரைகளுள் பிற்பட்டதும், சிறந்ததும் பரிமேலழகர் உரையே என்பது பல அறிஞர்களின் கருத்து. இவர் தொண்டை நாட்டுக் காஞ்சிபுரத்தில் வசித்தவரென்பது தொண்டை மண்டல சதகத்தால் அறியப்படும்.
முன்னவராகிய மணக்குடவர் தேர்ந்த பாடங்களிலிருந்து ஏறத்தாழ 220 இடங்களில் பரிமேலழகர் வேறுபட்ட பாடங்களை அமைத்துக் கொண்டுள்ளார். [அறம்.84, பொருள். 105, இன்பம்.32] (திருக்குறள் வ.உ.சி உரை, இரா.குமரவேலன்(பதி) ப.9)
வ.உ. சிதம்பரனார்
இவர் தேசவிடுதலைக்குப் போராடிய செக்கிழுத்த செம்மல் ஓரு சிறந்த உரையாசிரியராகவும் திகழ்ந்தார். தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை ஆழ்ந்து கற்றவர். தொல்காப்பியம் எழுத்து, பொருள் அதிகாரங்களை இளம்பூரணர் உரையுடன் புதிய பதிப்பினைக் கொண்டு வந்தார். அவர் காலம் வரை வெளிவராதிருந்த திருக்குறள் மணக்குடவருரையைக் கண்டெடுத்துச் செம்மைப்படுத்தி அரியதொரு நூலாகப் பதிப்பித்தார். அறத்துப்பால் மணக்குடவர் உரையோடு முதலில் 1917 ஆம் ஆண்டு வெளியிட்டார். 1935 இல் அறத்துப்பாலுக்கு எழுதிய அகலவுரை வெளிவந்தது. இவர் 1936 இல் மறைந்துவிட்டதால் பொருட்பாலுக்கும், காமத்துப்பாலுக்கும் அகலவுரை எழுதியிருந்தும் வெளிவரவில்லை. பின்னர் வெளியிட்டனர்.
இவர் ஏறத்தாழ 265 இடங்களில் பரிமேலழகரின் உரையிலிருந்து வேறுபடுகிறார். (திருக்குறள் வ.உ.சி உரை, இரா.குமரவேலன்(பதி) ப.10) இவர் பழைய உரைகளை ஒப்பிட்டுக் காணும் இலக்கிய நெறிக்கு ஒரு வழிகாட்டி. மூலப்பாடங்களை எங்ஙனம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு ஓர் உரைகல் என்று போற்றப்படுகிறார். இவர் குறள் எண் வரிசை முறையில் மற்ற உரையாசிரியர் போலில்லாமல் வேறுபட்டு இடைப்பாயிரமாக முதல் 30 குறளை வரிசையிட்டு பின்னர் பாயிரத்திலிருந்து முதல் எண்ணிட்டுத் தொடங்குகிறார்.
பொய்யாமையே மெய்விளக்கு
கடலில் எங்கோ ஓரிடத்தில் சிப்பியின் வயிற்றில் பிறக்கும் முத்து பேரரசனின் மணிமுடியில் இடம்பெற்று சிறப்படைகிறது. மனையின் உச்சியில் ஏற்றி வைத்த விளக்கு மனை முழுவதும் ஒளிபெறச் செய்கிறது. ஒருவன் எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும், பதவியை அணி செய்யாதவன் ஆயினும், செல்வனல்ல எனினும், அவன் சான்றோரால் நன்கு மதிக்கத் தக்கவனாக முடியும். அவர்தம் உள்ளத்தில் நிலையான இடம் பெற்று என்றும் நின்று நிலவ முடியும்.
திங்கள் கதிர்களாலும் வேறு எந்த விளக்குகளாலும் ஒருவன் விளங்கப்போவதில்லை. உண்மை என்னும் மெய்விளக்கு மட்டுமே மனிதனை விளங்கச் செய்யும் அவனை மேம்படுத்தியும் காட்டும். இதுவே திருஞான விளக்காகப் போற்றப்படுகிறது.
“எல்லாம் விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு”
என்று தெய்வப் புலவர் சுட்டிக் காட்டுகிறார்.
மணக்: உரை, வாய்மை, அதிகாரம் 30, குறள் எண் .300
பரிமேல்: உரை, வாய்மை, அதிகாரம் 30, குறள் எண். 299
வ.உ.சி: உரை, வாய்மை, அதிகாரம் 16, குறள் எண்.159.
மணக்: சான்றோர்க்கு எல்லா அறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல: பொய்மையான் உண்டான ஒளியே ஒளியாகும்.
பரிமேல்: புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா: துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமையாகிய விளக்கே.
வ.உ.சி: சான்றொர்க்கு எல்லா ஒளிகளும் ஒளிகள் அல்ல: பொய்மை(யால்வரும்) ஒளியே ஒளி.
மேற்கண்ட குறளுக்கான உரையில், விளக்கு என்பது ஒளியைக் குறிக்கும் . அதனால் பரிமேலழகரைப் போல ‘விளக்கு’ என்பதைப் பயன்படுத்தாமல் ‘ஒளி’ என்னும் பாடத்தையே பயன்படுத்துகிறார் வ.உ.சி. ‘சான்றோர்க்கு’ என்பதற்கு நேரான பொருள் கொள்ளாமல் அவ்வாறே பயன்படுத்துகிறார். பரிமேலழகர் ‘துறவான் அமைத்தார்க்கு’ எனறு பொருள் கொள்வர். மணக்குடவர் ‘எல்லா விளக்கும்’ என்பதற்கு ‘எல்லா அறத்தினானும் உண்டான ஒளி’ என்று விளக்கம் தருகிறார்.
உள்ளத்து மெய்விளக்கு
உண்மையைக் கடைபிடிப்பதிலும் சோதனைகளைத் தாங்குவதிலும் இறைவனின் துணையும் உண்டு. அவ்வாறு வாழும் சான்றோரின் உள்ளத்திலவன் சுடர்விட்டு விளங்குகிறான். எல்லாப் பொருள்களின் உண்மையையும் அவர்கள் அறியுமாறு செய்கிறான்.உலகியலில் பொய்யாமல் வாழ்வது என்பது தான் கொடுத்த வாக்குத் தவறாமல் இருப்பது.
உள்ளத்தால் பொய்யாது நேர்மையாக வாழ்பவனின் உள்ளத்திலே மெய்யொளி தோன்றும். அந்தப் பிரகாசமான ஒளியைச் சான்றோர்கள் அறிந்து கொள்வர். அவருக்கு பல்வேறு புகழும் வந்து கிட்டும். மனம், மொழி, மெய் மூன்றினாலும் ஒருவருக்குத் செய்யக்கூடாது. பொதுவாக நல்ல பண்பாளர்கள் இந்த உலகத்து மக்கள் அனைவராலும் போற்றப்படுவார்கள்.
“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்”
என்று வள்ளுவர் தனது அனுபவ அறிவோடு எடுத்துக்காட்டுகிறார்.
மணக்: உரை, வாய்மை, அதிகாரம் 30, குறள்.295
பரிமேல்: உரை, வாய்மை, அதிகாரம் 30, குறள். 294
வ.உ.சி: உரை, வாய்மை, அதிகாரம் 16, குறள்.154.
மணக்: தன் நெஞ்சினால் பொய்யை நினையாது ஒழுகுவனாயின், உலகத்தார் நெஞ்சினுள் எல்லாம் உளனாவான்.
பரிமேல்: ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின் ; அவன் உயர்ந்தோர் உள்ளத்திண் கண் எல்லாம் உளனாம்.
வ.உ.சி: (ஒருவன்)மனச்சான்றுக்குப் பொய்யாமல் ஒழுகின், உலகத்தில் உள்ளவர்கள் உள்ளத்துளெல்லாம் உளன்(ஆவன்).
இதில், பொய் கூறாதான் உலகத்தாரெல்லாராலும் போற்றப்படுவான். என்பது கருத்து. உலகத்தார் என்பதை அப்படியே உரையில் பயன்படுத்துகிறார் மணக்குடவர். உலகத்தார் என்போர் உயர்ந்தோர் என்று பொருள் தருபவர் பரிமேலழகர். வ.உ.சி சிறிது மாறுபட்டு பொய்யாது ஒருகுபவனை ’கடவுள் போல’ என்று குறிப்பிடுவது ஈண்டு நோக்கத்தக்கது.
அறிவாரின் மெய்விளக்கு
அகண்ட உலகில் மாந்தர்கள் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதில்லை. அஞ்ச வேண்டாததற்கும் அஞ்சுகிறார்கள். இது எவ்வளவு அறியாமை. எனவே மானிடம் பெற்ற ஆறாவது அறிவினை பயன்படுத்தி அஞ்ச வேண்டியதையும், அஞ்ச வேண்டாததையும் உணர்தல் வேண்டும்.
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்”
என அறிவார்ந்த நிலையில் வள்ளுவர் எடுத்து இயம்புகிறார்.
மணக்: உரை, அறிவுடைமை ,அதிகாரம் 43, குறள் : 427
பரிமேல்: உரை, அறிவுடைமை, அதிகாரம் 43, குறள் : 428
வ.உ.சி: உரை,அறிவுடைமை, அதிகாரம் 40 , குறள் : 398
மணக் : அஞ்சத் தகுவதனை அஞ்சாது ஒழிதல் ஒருவர்க்கு அறிவின்மையாகும். அஞ்சத் தருவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில்.
பரிமேல்: அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம். அவ் அஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.
வ.உ.சி: அஞ்சத் தகுவதற்கு அஞ்சாதிருத்தல் மடமை அஞ்சத் தகுவதற்கு அஞ்சுவது அறிவுடையார் தொழில்.
இவ்வுரைகளில்,வ.உ.சி ‘அறிவார்’ என்பது ஓர் பிழையானப் பாடம் என்று நினைத்து. ‘அறிஞர்’ என்றே சொல்வது சிறப்பிற்குறியனவாக அமைகிறது.
ஒவ்வொருவரின் மனதிலும் அறியாமையாகிய இருள் மண்டிக்கிடக்கிறது. அறிவாகிய ஒளி உள்ளே நுழைய நுழைய அறியாமையாகிய இருட்பாலம் சுருட்டிக்கொண்டு ஓடுகிறது. நாம் சிறிது சிறிதாக அறியும்பொதுதான் நமது அறியாமை எத்துணை பெரிது என்பது அறிய முடிகிறது.
“அறிதோ றறியாமை கண்டற்றால்”
மணக்: உரை, புணர்ச்சி மகிழ்தல், அதிகாரம் 111, குறள் : 427
பரிமேல்: உரை, புணர்ச்சி மகிழ்தல், அதிகாரம்111, குறள் : 428
வ.உ.சி: உரை, புணர்ச்சி மகிழ்தல், அதிகாரம் 108, குறள் : 398
மணக்: யாதானும் ஒன்றி அறியுந்தோறும், அறியாமை தோன்றினாற் போலும்.
பரிமேல்: நூல்களாலும் நுண்ணுணர்வானும் பொலும் பொருள்களை அறியஅறிய முன்னை அறியாமை கண்டார் போலக் காணப்படா நின்றது.
வ.உ.சி: (புதிய பொருளை) அறிந்தோறும் (அப்பொருளை முன்னர்) அறியாமலிருந்த தன்மையைக் கண்டாற்போலும்.
இங்கு காணும் உரையில், மணக்குடவர் ‘யாதானும் ஒன்றை அறியுந்தொறும்’ என்று விளக்கம் தருகிறார். மாறாக வ.உசி ‘அறிதொறும்’ என்பதற்கு புதிய பொருளை ’அறிந்தோறும்’ என்று சொல்லிவிடுகிறார். ஏனைய உரையாசிரியர்கள் ‘நூல்களானும் நுண்ணுணர்வானும்பொருள்களை அறிய அறிய’ என்று பொருள் கொண்டுள்ளனர்.
மெய்ப்பொருளில் மெய்விளக்கு
தொல்காப்பியர் ஞாலத்து உயிர்களை ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஆறறிவு உயிர்கள் எனப் பகுத்துக் கொடுத்துள்ளார். மானிடத்திற்கே உரிய மிகுதியானப் பண்பு ஆறாவது அறிவாகும். அவ்வறிவினாலே மெய்ப்பொருளை உணரவேண்டும். பொதுவாக அறிவு என்றால் என்ன? அது வேறு எதுவும் இல்லை. உண்மையை உள்ளவாறு உணர்வதுதான் அறிவு. இதனை,
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”
என்று வள்ளுவரின் வாக்கு நிரூபிக்கிறது. மணக்குடவர் உரையில், ‘மெய் என்பதூஉம் அறிவு என்பதூஉம் ஒன்று’ தான் என்று கூறப்பட்டுள்ளது.
மணக்: உரை, மெய்யுணர்தல், அதிகாரம் 36, குறள் : 353
பரிமேல்: உரை, மெய்யுணர்தல், அதிகாரம்36, குறள் : 355
வ.உ.சி: உரை, அறிவுடைமை, அதிகாரம் 40, குறள் : 393
மணக்: யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும், அப்பொருளினுடைய உண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம்.
பரிமேல் : யாதொரு பொருள் யாதோர் இயல்பற்றாய்த் தோன்றினும் அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது அட்பொருளின் கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது.
வ.உ.சி. : எந்தப் பொருளை யாருடைய யாருடைய வாயினின்று கேட்பினும் அப்பொருளின் கண் மெய்ப்பொருளைக் காண்டல் அறிவு.
இதில் யார்யார் என்று என்னும்போது பரிமேலழகர் இழிந்தோர், உயர்ந்தார், பகைவர் என பாகுபடுத்திக் கூறுவார். எனினும் எவ்வகைப் பாகுபாடுமின்றி “யாவர் வாயினின்று கேட்பினும்” என்று வ.உ.சி. பொதுமையையாய் சிந்திக்கிறார். மேலும் இக்குறளை செம்மைக்கருதி அறிவுடைமை அதிகாரத்தில் சேர்த்து விடுகிறார். மணக்குடவரும், பரிமேலழகரும் மெய்யுணர்தல் அதிகாரத்திலே மாறிய வரிசையில் வைத்துவிடுகின்றனர்.
மாசறு மெய்விளக்கு
மெய்யறிவானது துன்பத்தை நீக்கி இனிய இன்பத்தை கொடுக்கும். மெய்யறிவு உடையவருக்கு என்றும் துன்பமே இல்லை. ஒருவன் எந்தத் துறையில் அதிக ஆர்வம் செலுத்துகிறானோ அத்தகைய துறையில் இறங்கி ஆய்ந்து குற்றமில்லாது முறையாக பல்வையிலும் தேர்ந்து நிற்கவேண்டும். அப்போதுதான் தன் மெய்யறிவால் துணிவுவரும் அதனால் உன்மையும், மகிழ்வும் தொற்றிக்கொள்ளும் எனலாம்.
துன்பத்தின் காரணம் அறியாமைதான் நூலறிவால் பட்டறிவால் அறியாமையைப் போக்கிக் கொள்ளும் அளவு துன்பமும் வராது, வந்தாலும் நீங்கும். ஆனால் மீண்டும் துன்பம் தாக்காது என்று சொல்ல முடியாது. அறியாமைக்கும் அடிப்படைக் காரணம் ஒன்று உண்டு. அதுதான் மருள். மருளை உலகியலறிவால் நீக்க முடியாது. எவ்வளவு அனுபவப் பட்டாலும், வயது தொண்ணூற்றொன்பதே ஆனாலும் நீங்காது. ஆகவே துன்பம் தாக்கும் அபாயம் என்றும் உண்டு. மருள் நீங்கினால்தான் இந்த அபாயம் இல்லை. அவனுக்கு மெய்யொளி கிட்டும்.
“இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு”
என்பது பொய்யாமொழியின் வாக்கு.
மணக்: உரை, மெய்யுணர்தல், அதிகாரம் 36, குறள் : 357
பரிமேல்: உரை, மெய்யுணர்தல், அதிகாரம்36, குறள் : 352
வ.உ.சி: உரை, மெய்யுணர்தல், அதிகாரம் 33, குறள் : 322
மணக்: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்பமுண்டாம்.
பரிமேல்: அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையார்ஆயினார்க்கு அம்மெய்யுணர்வு பிறப்பினை நீக்கி வீட்டினைக் கொடுக்கும்.
வ.உ.சி: மயக்கத்தினின்றும் நீங்கிக் குற்றம் அற்ற அறிவினை யுடையவர்க்கு(நரகம் என்னும்) துன்பம் நீங்கி வீடு என்னும் இன்பம் என்னும் உண்டாம்.
இருள் என்பதற்கு ‘அறியாமையாகிய இருள்’ என்று மணக்குடவரும், ‘இருள் நீங்கி’ என்பதற்கு ‘பிறப்பினை நோக்கி’ என்று பரிமேலழகரும், வ.உ.சி இதற்கு பொறுளாக ‘நரகம் என்னும் துன்பம் நீங்கி’ என்றும் பொருள் கொண்டுள்ளதைக் காணமுடிகிறது.
நெஞ்சகமே மெய்விளக்கு
இவ்வுலகில் நிலவும் புறவிருளுக்கு பயந்து விளக்கைத்தேடி ஓடுகின்றவர்கள். பொய்யாகிய இருளை உள்ளத்திலே சுமந்து கொண்டு திரிகிறார்கள். பொய் என்பது ஒரு பொல்லாத இருள். அது இன்மையையும், மறுமையையும் பாழடிக்கும் பேரிருளாகும். அதனை ஒழிப்பதற்கு உள்ளே முளைத்தெழும் நெஞ்சறி மெய்விளக்கை அணைத்து விடக்கூடாது.
தீயசெயலைச் செய்யும் ஒருவனை அவன் அச்செயலைச் செய்யவில்லை என்று கூறுவது தன்னெஞ்சு அறியப் பொய்யுரைப்பதாகும். அத்தகையவனைக் கண்டிப்பாகத் தண்டித்தேயாக வேண்டும். இல்லையெனினும் அவனது உள்ளத்து மெய்யுணர்வு அவனை உருத்திக்கொண்டே இருக்கும்.
“தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்”
எனக் கடுமையாகச் சாடுகிறார்.
மணக்: உரை, வாய்மை அதிகாரம் 30, குறள் : 291
பரிமேல்: உரை, வாய்மை, அதிகாரம்30, குறள் : 293
வ.உ.சி: உரை, வாய்மை, அதிகாரம் 16, குறள் : 151
மணக் : தன்னெஞ்சு அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக : பொய்ப்பனாயின், தன்னெஞ்சுதானே தன்னை யொறுக்கும்.
சுடுதலாவது அதனாற் பிறர்க்கு உளதாகுந் தீமையைக் கண்டு என் செய்தோம் யாமென்று வருந்துவித்தல். இது பொய்யாமை வேண்டுமென்றது.
பரிமேல் : ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக; பொய்த்தபின், அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்.
வ.உ.சி: தன் மனச்சான்று அறிந்ததனை அறிந்ததற்கு மாறாகக் கூறற்க: அறிந்ததற்கு மாறாகக் கூறிய பின்னர்த் தன் மனச்சான்றே தன்னை வருத்தும்.
குறள்வரிசை முறையில் ஒரே அதிகாரத்தில் அவரவர் கருத்துப்படி மணக்குடவரும், பரிமேலழகரும் முறையே 291, 293 என்னும் எண்ணில் முறைப்படுத்தியுள்ளனர். வ.உ.சியோ வாய்மையை 16ஆவது அதிகாரத்திலே வைத்து முதல் குறளாக வரிசைப்படுத்துகிறார். வ.உ.சி.யின் குறள் வைப்புமுறை குறள்வரிசையைப் செப்பனிட்ட பாங்கு தெரிகிறது.
மணக்குடவரும், பரிமேலழகரும் பாடமாகிய, நெஞ்சறிவது என்பதற்கு மாறாக ‘நெஞ்சறிந்தது’ என்னும் பாடத்தைக் கொண்டுள்ளனர். நெஞ்சு ஆகுபெயர். இது மனத்தின் சான்றைக் குறிக்கும். மனச்சான்று ‘மனத்தின் கண் சான்றாய் நிற்கும் அறிவு’ என்று வ.உ.சி விளக்கம் தருகிறார். மணக்குடவர் “சுடுதலாவது அதனால் பிறர்க்கு உளதாகும் தீமையைக் கண்டு” என செய்தோம் யாம் என்று வருந்துவித்தல் என்று சுடும் என்னும் சொல்லுக்கு பொருள் தருகிறார். பரிமேல் துன்பத்தை எய்துவிக்கும் என்று கூறுவார். வ.உ.சி தனக்கே உரிய முறையில் ‘வருந்தும்’ என்று சுருக்கிச் சொல்வதைக் காணமுடிகிறது.
அறன் காணும்மெய்விளக்கு
‘அறம் செய்ய விரும்பு’ என்பது ஔவை மூதாட்டியின் வாக்கு. மக்கள் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றவேண்டும். மற்றவர்களுக்கு இயன்ற வழியில் எல்லாம் அறம் செய்ய வேண்டும். மிக உரத்துக் களம்பிரர் கால நீதி இலக்கியங்களில் பேசப்படுகிறது. இஃது சைன, பௌத்த போதனைகளில் மிகத் தலைமை வாயந்ததாகும் மனத்தில் களங்கம் இல்லாமை மகிழ்ச்சியுடன் வாழ்பவனே மெய்யவன் ஆகிறான்.
அறம் என்று வள்ளுவர் குறிப்பிடுவது, உயிர்ச்சூழல் சிறப்பதற்குரிய நயன்மை ஆற்றல் (power of goones) என்று பொருள் கொள்ளலாம். (புலவர் த.சுந்தராசன், திருக்குறள்தேசிய நூல்.ப.203) இந்த நல்லாற்றல் மனித சமூகத்தில் வளர வேண்டுமானால் ஒவ்வொரு மனித மனமும் மாசு நீங்கி, மலர்ச்சி காண வேண்டும். என்னென்ன மாசு நம் அகத்தில் உள்ளது என்பதை நாமே கண்டறியவேண்டும். அதற்கு நாம் உற்றுப் பார்க்க வேண்டும்
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”
1.மணக் : உரை, அறன் வலியுறுத்தல் . அதிகாரம் 4, குறள்: 40
2.பரிமேல்: உரை, அறன் வலியுறுத்தல் . அதிகாரம் 4, குறள்: 34
3.வ.உ.சி: உரை,அறப்பால் –பாயிரம் அறன் வலியுறுத்தல்,அதிகாரம்1,குறள்: 4
மணக் : ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம் அதில் அழுக்குண்டாயின், மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய.
பரிமேல்: அவ்வாற்றான் அறஞ்செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையனல்லன் ஆக : அவ்வளவே அறம் ஆவது: அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா; ஆரவர நீர்மைய
வ.உ.சி: உள்ளத்தின் கண் குற்றம் இல்லாதவனாய்ச் செய்யப்படுவது அனைத்தும் அறமாம்: மனத்துக்கண் குற்றமுள்ளவனாய்ச் செய்யப்படுவன துன்பம் தருவன (வாகிய மறங்களாம்)
இதில், பரிமேலழகர் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்று பாடமாகக் கொண்டு ஆதல் என்பதற்கு ‘ஆகுக’ எனப் பொருள் கூறுகிறார் ஆதல் என்பது அவரின் கருத்து வியங்கோள் வினைமுற்றாகும். வ.உ.சி ‘மனத்துக்கண் மாசிலன் ஆவது’ என்று பாடம் கொண்டு ‘செய்யப்படுவது’ என்று பொருள் கூறுவார். பழைய உரையாசிரியர்களை வ.உ.சி மறுத்து தெளிவுபடச் சொல்வது ஏற்புடையதாக உள்ளது. மேலும் ‘ஆகுலம்’ என்னும் பழஞ்சொல்லிற்கு ‘ஆரவாரம்’ என்று மணக்குடவரும், பரிமேலழகரும் பொருள் கொள்வர். இங்கு மாறுபட்டு வ.உ.சி ‘துன்பம் தரும் மறம்’ என்று விளக்கம் தருகிறார்.
நட்பின் மெய்விளக்கு
மானிடத்தில் நட்பு ஓர் புனிதச் சொல்லாக இருந்து வருகிறது. ஒரு சிலர் தனது முகத்திலே மகிழ்ச்சியைக் காட்டிக்கொண்டு உள்ளத்திலே நயவஞ்சகம் கொட்டிக் கிடக்க உலா வருவதைக் காண்கிறோம். அத்தகையோரை மெய்யுணர்வினால் அறிதல் வேண்டும். இத்தகைய கொடிய நட்பு செய்வோரை கண்டு கன்னியாய் கூறும் வள்ளுவர்,
“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு”
என்னும் குறளில் நட்பினை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் கூறுகிறார். இக்குறள் நட்பின் இலக்கணத்தையே கூறி விடுகிறது.
மணக்: உரை, நட்பு, அதிகாரம் 79, குறள்: 781
2. பரிமேல்: உரை, நட்பு, அதிகாரம் 79, குறள்:786
3. வ.உ.சி: உரை, நட்பு அதிகாரம் 76, குறள் :756
மணக்: முகத்தொடு முகம் மகிழக் கொள்ளும் நட்பு, நட்பு அன்று. மனத்தோடு மனம் மகிழக் கொள்ளும் நட்பே நட்பாவது.
பரிமேல் : கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது. அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது.
வ.உ.சி: (கண்டவிடத்து) முகம் (மட்டும்) மலரும்படி நட்பது நட்பு அன்று ; அன்பால் அகமும் மலரும்படி நட்பது நட்பு.
மணக்குடவர் பாடம் ‘நட்பதே’ என்பதாகும். பரிமேலழகர் பாடத்திலும் மணக்குடவர் பாடம் சிறந்ததே. அகநக எனப் பரிமேல்ழகருரையை ஒட்டிப் பிரித்துப் பொருள் கூறாமல் வ.உ.சி ‘அகமும் நக’ என்று உம்மைக் கொடுத்து சொல்கிறார்.
மேற்குறிப்பிட்டுள்ள ‘மெய்யொளி’ கருத்தினை உலகிற்கு எடுத்துக்கூறும் வகையன. மூவருரையிலும் மெய்விளக்குப் பார்வையில் சொல்லுகிற விதமும் சொல்லும் வேறுபட்டாலும் அனைத்தும் மெய்யியல் கருத்தினையே பிரதிப்பலிப்பவையாகத் திகழ்கின்றன. இவ்வுரைகள் தமிழ்ச்சொல் வளத்தைக் காட்டுகின்றன. இதனை மேலான கட்டமைப்புச் சிந்தனையைப் பாரினில் பரப்பி வலிமைப்படுத்திட வேண்டும். மெய்யின்பக் கருத்தினை பிற மொழி அறிஞர்களும் அறியும் வகையில் அதிக மொழிபெயர்ப்புகள் வெளிவர வழிவகை செய்தல் வேண்டும்.
திருக்குறளின் கருத்துக்களை மெய்யியல் பார்வையில் பார்க்கவும். புகழை வெளிக்கொணரவும் முக்கியப் பங்காற்றியோர் பழந்தமிழ் உரையாசிரியர்களே எனலாம். ஏனெனில் தமிழ் இலக்கிய வளம் அறியாதோர்க்கும், குறைந்த தமிழறிவு உடைய அயல் மொழியினருக்கும் பாலமாக இருந்தோர் இவர்களே! இவர்களின் உரை 10, 13 ஆம் நூற்றாண்டு என்பர். தொண்டை மண்டல சதகம் 41 ஆம் செய்யும் திருக்குறள் உரையாசிரியர் பற்றிய செய்திகளைத் தருகிறது.
“தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி, பரிமே லழகர் – திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்
கெல்லை உரை செய்தார் இவர்”
எனவே குறளின் பல்வகை உரைகளும் மெய்விளக்கு கருத்தினை மேலோங்கவே செய்கின்றன. மனத்திலே பொய்யாகிய இருளை வளர்த்துக் கொண்டு ஒருவன் நிறைந்த செல்வம் பெற்று பெரிய மனிதன் போல் சுற்றித் திரிவது தொழுநோய் பிடித்தவன் பட்டாடை உடுத்திக் கொண்டு பகட்டுவது போல் இருக்கும். எனவே இம்மண்ணுலகில் இன்புற்று வாழ ஒரே வழி. நம் உள்ளத்தில் ‘மெய்விளக்கு காண்பதே’ எனலாம் இதனை மானிடத்திற்கு எடுத்துக்காட்டியப் பெருமை தெய்வப்புலவர் திருவள்ளுவரையே சாரும். அதனை வெளிப்படுத்தியப் பெருமை உரையாசிரியர்களையே சாரும்.
முடிபுகள்
தெய்வப்புலவரின் வாக்கில் மெய்யியல் கருத்துக்கள் புதைந்துள்ளதை அறியமுடிகிறது. மெய்யொளி கருத்தின் மூலமே, வள்ளுவ மகான் பரந்துபட்ட உலகினைக் கவர்ந்து ஈடுஇணையில்லா பேரறிஞர் என்பதை மண்ணுலகில் நிரூபிக்கிறார்.
அஞ்ச வேண்டியதற்கே அஞ்ச வேண்டும் எல்லாவற்றிலும் அஞ்சக்கூடாது. அவ்விடத்தில் மெய்யொளியால் பகுத்து, உணர்ந்து செயல்படவேண்டும். என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. மனித வாழ்வில் இருள் நீங்கி இன்பமுற மருள் நீக்கப்பட வேண்டும் என்பது அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இருளைப் போக்க நெஞ்சறி மெய்விளக்கை அணைக்காமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டப்படுகிறது. ஒவ்வொரு மனித மனமும் மாசுநீங்கி, மலர்ச்சி காணவேண்டும் என வள்ளுவர் ஏங்குவதைக் காணமுடிகிறது. உரையாசிரியர்கள் எடுத்தாளும் குறளில் பாடவேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே பல்வேறு பதிப்புகளை யாப்பு, புணர்ச்சிப்படி ஆய்ந்து உரியசொல் பாடமாக்கப்பட வேண்டும். அகிலத்திலுள்ள உரையாசிரியர்கள் திருக்குறளைப் பல்வகை மொழியிலும் பொருள் மாறாமல் மொழிபெயர்த்து, மொழிபெயர்ப்பை அதிகரித்திட வேண்டும். குறளில் மெய்யொளி கருத்து விரிவாக ஆராயப்பட வேண்டும். வள்ளுவர் கண்ட சுரங்கத்தில் பல்வகைப் புதிய பாடுபொருளான கனிமத்தை வெட்டி எடுத்து, மேன்மேலும் வெளிப்படுத்தி, அணி செய்து, பேரண்டத்தில் மென்மேலும் உலாவந்திட செம்மொழித் தமிழுக்கே உரிய திருக்குறளை வானுயரப் போற்றி மகிழ்வோம்.
துணைநூற்கள்
திருக்குறள் மூலமும் மணக்குடவர் உரையும், கோ.வடிவெலுசெட்டியார்(பதிப்பு) அம்ப விலாச பதிப்பக சாலை, சென்னை. ஆண்டு-1925.
திருக்குறள் பரிமேலழகர் உரை, கந்தசாமி முதலியார்(பதிப்பு) முத்தியாலு நாயகரது வாணீநிகேதன அச்சுக்கூடம், ஆற்காடு. ஆண்டு-1923.
திருக்குறள் வ.உ.சிதம்பரனார் உரை, இரா.குமரவேலன்(பதிப்பு) பாரிநிலையம், சென்னை. ஆண்டு-2008.
திருக்குறள் மணக்குடவர் உரை, ச.மெய்யப்பன்(பதிப்பு) மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை,சென்னை. ஆண்டு-2003.
திருக்குறள் தேசிய நூல், புலவர் த.சுந்தரராசன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். ஆண்டு-2007.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர் - - முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வளமையர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சாலைப்போக்குவரத்து நிறுவன வளாகம், தரமணி, சென்னை – 600113. -