- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -முன்னுரை
பழந்தமிழ் இலக்கியமாகத் திகழும் சங்க இலக்கியம், மனித சமூகம் உய்வதற்குரிய கருத்துக்களை உயரிய அறக்கோட்பாடுகளாக வகுத்துரைக்கின்றது. சமூக மேம்பாட்டின் பல்வேறு சிறப்புக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. காதலும் வீரமும் அவற்றுள் பெருமையுடையனவாய்ச் சொல்லப்பட்டுள்ளன. இவ்விரண்டும் பண்டைத்தமிழ் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகளாக விளங்கியுள்ளன. இவ்விரு கூறுகளையும் எடுத்துரைத்துத் தமிழ்மொழியின் பெருமையினையும் உயர்வினையும் உலகறியச் செய்தவர்கள் சங்ககாலப் புலவர்கள் ஆவர். அப்புலவர்கள், தனிமனித வாழ்விலும், சமூகவாழ்விலும், சமூகத்துடன் தொடர்புடைய அரசவாழ்விலும் பெறத்தக்க மனித உரிமைகளைத் தங்கள் பாடல்களில் புலப்படுத்தியுள்ள திறத்தினைக் குறித்து இக்கட்டுரையில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 

சங்ககாலப் புலவர்கள்
மனித உரிமைகள் என்ற கருத்துருவாக்கம் மனித சமூகம் குழுவாக வாழ ஆரம்பித்த நாளிலிருந்தே எழத் தொடங்கியுள்ளது. சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் சமூகத்தில் உயர்வான நிலையில் வைத்துப் போற்றப்பட்டமைக்குக் காரணம் அவர்கள் மனித உரிமைகளைப் பற்றிய அறிவினைப் பெற்றிருந்தமையினால்தான். அரசியலிலும், சமூக உயர்விலும் தங்கள் பங்களிப்பினைச் சிறப்புற எடுத்துரைத்து வந்துள்ளனர். சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களின் தேவைகளை எடுத்துரைத்ததோடு, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் தவறவில்லை. தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைகள் அறக்கோட்பாடுகளாக வகுத்துரைக்கப்பட்டுள்ளன. இதில் புலவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்துள்ளது. அவர்கள் தங்களது வறுமையைப் போக்கிக்கொள்ள மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளாமல் மன்னர்கள் மனித உரிமை மீறல்களைச் செய்யும் போது அவர்களைத் திருத்தவும், அறிவுறுத்தவும் செய்துள்ளனர்.

சங்கப் புலவர்களின் இயல்புகள்
பண்டைக்காலப் புலவர்கள் மக்கட்சமுதாயத்தின் பிரதிநிதிகளாகவும், மன்னனுக்கும் குடிமக்களுக்கும் இடையே ஒரு பாலமாகவும் திகழ்ந்துள்ளனர். பழந்தமிழ் வேந்தர்களுடைய சிறப்புகளுள் ஒன்று புலவர்களுடன் அவர்கள் கொண்டிருந்த நட்பு ஆகும். மனித உரிமைகளைப் பற்றிய செய்திகளை மன்னர்களுக்கு அறிவுறுத்துவதற்கு நட்பு ஒரு களமாக அமைந்திருந்தது. நட்புக்கொண்ட மன்னனிடம் தங்கள் உரிமைகளை இடித்துரைத்து எடுத்துரைக்கும் உரிமை சங்கப் புலவர்களுக்கு இருந்துள்ளது. வேந்தரைப் பாடிப் பரிசில் வேண்டுவதே தொழிலாகக் கொள்ளாமல் அவர்கள் தவறு செய்தவிடத்து அஞ்சாது கண்டித்து அறநெறிப்படுத்தும் இயல்பினராகவும் புலவர் பெருமக்கள் திகழ்ந்தனர். பழந்தமிழ்ப் புலவர்கள் வேந்தர்பால் அன்பு கொள்ளலும் நட்பு பூணலும, குறைகண்டவிடத்து அதனை மென்மையாகக் கடிதலும் நிறைகொண்டவிடத்து மேம்படப் பாராட்டலும் சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றது.

மனித உரிமைகள்
உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருமே சம உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். என்றாலும் நடைமுறையில் எந்தக் காலத்திலும், எந்த நாட்டிலும், எந்தச் சமூகத்திலும், சம வாய்ப்புக்களும், சம உரிமைகளும் அளிக்கப் பெறுவதில்லை. இத்தகு சமமற்ற நிலை மாற்றம் பெறவேண்டும் என்பதனை முதன்மையான நோக்கமாகக் கொண்டு சமூகவியலாளர்கள் செயலாற்றி வந்துள்ளனர். சங்க காலத்தில் புலவர்கள் சமூக அளவில் மிகப்பெரும் திறமுடையோராக விளங்கினர். புலவர்கள் சமநிலைப் பட்ட சமுதாயத்தையே விரும்பினர். உலகில் வாழும் மாந்தர் அனைவரும் பிறப்பால் சமநிலைப் பட்டவர்களே, பொதுமைப்பட்டவர்களே என்பதே அவர்களது கொள்கையாக இருந்தது. இன்றைக்கும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க படைப்பாளர்கள் மனித உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். தமிழில் மனித உரிமைகளுக்காகப் போராடிய சங்கப் புலவர்களி;ல் திருவள்ளுவர் தலைசிறந்து விளங்குகின்றார். கபிலர், ஓளவையார் முதலான புலவர்கள் சங்க காலத்தில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த புலவர்களாகத் திகழ்கின்றனர்.

புலவர்கள் பெற்றிருந்த மனித உரிமை
“நாடாளும் தலைவர்கள் இலக்கியம் இயற்றும் புலவர்களையே விழுமியோராகப் போற்றிவந்தனர். அரசனை ‘அவன்’ என்றும் புலவரை ‘அவர்’ என்றும் சுட்டியுள்ளதில் உள்ள நாகரிக மதிப்பு, அரசியலில் தலையிட்டு அறிவுரை கூறியும் அறவுரை நல்கியும் அரசரின் போக்கைத் திருத்தும் உரிமை புலவர்க்கு இருந்தது. அரசர் குறுநில மன்னர் ஆகியோரின் குடும்ப வாழ்விலும் புலவர் தலையிட்டு ஆவன செய்யும் ஆர்வம் கொண்டிருந்தனர்” என்னும் ம.ரா.போ. குருசாமியின் கூற்றால், நாடாளும் மன்னனிடம் சங்ககாலப் புலவர்களுக்கு மதிப்பும் மனித உரிமைக்குரிய செல்வாக்கும் இருந்துள்ளது என்பது புலனாகின்றது.

மனித உரிமைகளைப் போற்றுதல்
தகுதியும் திறமையும் உடையவர்களைத் தேர்ந்து அவர்களுக்கு முதன்மை தருதல் மனித உரிமைகளைப் போற்றும் பண்புகளில் ஒன்றாகும். சங்கப் புலவர்கள் இத்தகு மனித உரிமைகளைப் போற்றும் மன்னர்களையே வாழ்த்திப் போற்றியுள்ளனர்.

தகடூர்எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் போற்றும் அரிசில்கிழார், அவன் அறிவுடையோர் எண்ணினாலும், அறிவற்றோர் எண்ணினாலும் பிறர்க்கு நீ உவமையாய் அமைவாய் அன்றி, உனக்கு உவமையாய்ப் பிறர் இல்லை என்று கூறுவதனை,

“உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது, நினக்கு
பிறர் உவமம் ஆகா ஒருபெரு வேந்தே”         (பதி. 73:1-3)

என்னும் பாடல்வழி உணர்த்துகிறார்.

பொறுமை காக்கச் செய்தல்
மனித உரிமை மீறல்கள் பொறுமையின்மையின் காரணமாகவும், சகிப்புத் தன்மை அற்றுப் போவதன் காரணமாகவும் நிகழ்கின்றன. இதனால் பொறுமையுடன் பிறரது நிலையினைக் கேட்டறிந்தும் அவர்களது நிலையினை உணர்ந்த பின்னருமே எச்செயலையும் செய்தல் வேண்டும். செயலூக்கம் மிக்கவர்கள் பொறுமையின் சிகரமாகத் திகழ்கின்றனர் என்பதனை அறியலாம். ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்ற பழமொழி இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும். மனித உரிமைகளின் முக்கியப் பண்புகளில் பொறுமையும் ஒரு கூறாக அமைந்திருக்கின்றது. இதனை,

“அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்”         (கலி. 133:10-12)

எனும் கலித்தொகையின் பாடலடிகள் புலப்படுத்துவதனைக் காணலாம். அறியாமை உடையவரது சொல்லால் வரும் துன்பத்தைப் பொறுத்தலும், அன்புடையோரின் துன்புறுத்தலைவிட அன்பற்ற பகை முகத்தோரின் துன்புறுத்தலைப் பொறுத்தலுமே சிறந்த பொறையுடையமையும் மனித உரிமைகளைக் காத்தலுமாகும் என அறியலாம்.

காய்தல், உவத்தல் இல்லாது விளங்குதல்
மனித உரிமைப் பண்புகள் பெரும்பாலும் சுய விருப்பு வெறுப்புகளின் காரணமாகவே நடைபெறுவதனைக் காணலாம். மிகப் பேராற்றல் உள்ளவர்கள் பெருமை வந்தவிடத்து ஆணவம் கொண்டு செருக்கடைவதும், துன்பம் நேர்கையில் வருத்தமுறுவதும் இல்லை. அவர்கள் நடுநிலைமையோடு தங்கள் உள்ளத்தை வைத்திருப்பர்.

“..........................வயின் வயின்
உடன்று மேல்வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்தப் பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழக்
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே”         (புறம். 27:8-13)

என்னும் புறப்பாடல் காய்தல் உவத்தல் அற்ற மனநிலையினை எடுத்துரைக்கின்றது. மன்னர்க்கு வேண்டிய முதன்மைப் பண்புகளில் இதுவும் ஒன்றாகக் கூறப்படுகின்றது. ஆற்றல் அற்றவர்களே தமது ஆற்றலைப் பெருக்கிப் பேசித் தற்பெருமை கொள்வார்கள். பேராற்றலும், பேரறிவும் கொண்ட உலகியல் அறிவு மிக்கவர்கள் எல்லா நிகழ்வுகளையும் விலகி நின்று பார்த்து உண்மை அறிவர். அவர்கள் வியப்பதோ, இழிவு செய்வதோ, மகிழ்வதோ செய்யாது அமைதியுடன் இருப்பர். இது மன்னரின் நற்குணங்களில் ஒன்றாகும். இத்தகு நற்குணமுடைய மன்னர்களையே சங்கப் புலவர்கள் பாடிச்சிறப்பித்தனர்.

செங்கோல் செலுத்தும் திறன் போற்றல்
சமுதாயத்தில் நல்லாட்சி நிலவ, செங்கோன்மை காரணமாக அமைகின்றது. இத்தகு நல்லாட்சியினைப் பற்றிப் பேசும் அதிகாரம் செங்கோன்மை ஆகும். எக்காரணம் கொண்டும் அறநெறியிலிருந்து வளைந்து விடாமல் ஆட்சி செலுத்துகின்ற தன்மையே செங்கோன்மை ஆகும்.

“ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே முறை.”         (குறள். 541)

சான்றோர் புகழும் திறன் மிக்க தலைவர்களாக நாட்டையாளும் மன்னர்கள் விளங்க வேண்டும் என்றால் அவர்கள் நல்லாட்சியினைத் திறம்பட நடத்தும் திறன் பெற்றவர்களாக விளங்குதல்வேண்டும். இதுவே, செங்கோல் செலுத்தும் திறனாக அமைந்திருக்கின்றது.  மழை பொழியாது போயினும், நாட்டில் வளம் குன்றினும், இயற்கை அல்லாத செயல்கள் நிகழினும் ஆள்வோனைக் கொடுங்கோலன் என்று உலகம் பழிக்கும் என்ற கருத்தினை,

“அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டுபொழுதில் பெயல் பெற்றோரே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
...............................................................
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக்கண் அகல் ஞாலம்”     (புறம். 35:14-29)

என்னும் புறப்பாடல் எடுத்துரைக்கின்றது. இயற்கையை அழிப்பதால் நாடு வளம் குன்றும். இதற்கு ஆள்வோனும் பொறுப்பு என்னும் கருத்து இப்பாடலில் எடுத்துரைக்கப்படுகின்றது. மன்னனின் குளிர்ந்த வெண்கொற்றக்குடை அருளாட்சியின் குறியீடு ஆகும். மனித உரிமைகளைக் காத்து நடத்தலே செங்கோல் வழாஅது நடத்தல் ஆகும்.

புலவர்களின் உரிமைகள்
ஆள்வோர் நல்லாட்சி புரிய கற்ற சான்றோர்களின் துணையைப் பெரிதும் போற்று மதித்தல் வேண்டும். இதன் சிறப்புக் கருதியே அதியமான் நெடுங்காலம் வாழும் தரும் அரியபொருளான நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஓளவைக்குத் தந்தான்.

“நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக-பெரும நீயே, தொல் நிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீம்கனி குறியாது
ஆதல்நின் அகத்து அடக்கி
சாதல்நீங்க எமக்கு ஈந்தனையே”         (புறம். 91:4-9)

பயணக்களைப்பில் முரசு கட்டிலில் அறியாது துயின்ற மோசிகீரனாரை, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அவர் மீது வாள்வீசாது, கவரி வீசிச் சிறப்புச் செய்தான்.
“அதூஉம் சாலும் நல்தமிழ் முழுது அறிதல்”         (புறம். 50:10)

என்று தமிழ்ப்புலவரைக் காத்தல் தமிழை முழுவதுமாக அறிந்ததற்கு ஒப்பாகும் என்கிறார் அப்புலவர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தான் போரில் தோற்றல் மாங்குடி மருதன் முதலான புலவர்கள் நாட்டையும் என்னையும் பாடாதொழியட்டும என்பதனை,
“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என்நிலவரை”         (புறம். 72:13-16)

என்று கூறுவதன் மூலம் சங்ககால மன்னர்கள் புலவர்களையும் சான்றோர்களையும் இன்றியமையாதவர்களாகப் பெற்றிருந்தனர் என்பது புலப்படுகின்றது.

மக்கட்பண்பு போற்றுதல்
இலக்கியங்கள் மக்கட்பண்பு மேலோங்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. “பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்” என்றார் திருவள்ளுவர்.

“உண்டால் அம்ம இவ்வுலகம்-இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே, முனிவு இலர்
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்குஎன முயலா நோன்தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே”     (புறம். 182)

என்கிறார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. இதனால் பண்புடையவர்களால் தான் இவ்வுலகம் நிலைபெற்று இருக்கின்றது என்ற கருத்து பெறப்படுகின்றது.  இந்த உலகம் நிலைபெற்று இருப்பதற்குக் காரணம் கூறவந்த கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எதனைத் தனக்கெனத் தனித்து வைத்துக் கொள்ளாமல் எல்லோர்க்கும் பகிர்ந்தளித்து வாழ்வதனாலே உலகம் நிலைபெற்று இயங்குகின்றது என்று கூறி, கிடைத்தது எதுவாயினும் அதனைப் பகிர்ந்துண்டு வாழப் பழக்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தவும் செய்கின்றான். 

பகிர்ந்துண்டு வாழும் பண்பினை மன்னர்க்கு மட்டும் அல்லாது வாழும் மனித சமூகம் அனைத்திற்கும் பொதுவான பண்பாக விளங்கிட வேண்டும் என்பது சங்கப் புலவர்களின் கருத்தாக்கமாக விளங்கியுள்ளது.

பொதுநோக்கும் வரிசையும் அறியவேண்டுதல்
மன்னர்கள் புலவர்களைப் புரக்கும்போது வரிசையறிந்து முறைப்படுத்தி நடத்துதல் வேண்டும் என்று புலவர்கள் மன்னரிடம் தங்கள் உரிமைகளைக் குறித்து எடுத்துரைத்துள்ளனர். அவ்வாறு வரிசையறியாத மன்னரிடத்து அறிவுரை கூறியும், தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளுமாறும் வேண்டி உள்ளனர்.

“வேறுபாடின்றி அனைவரையும் ஒன்றுபோல் கருதும் ஒருமைநோக்கு இன்று வேண்டப்படுவதாக அமையினும், அதனைப் பொதுநோக்காகக் கொண்டு விலக்கக்கூறும் சிந்தனையைப் பழந்தமிழ் இலக்கியத்தில் காணமுடிகின்றது” என்பார் அன்னிதாமசு. (ப. 14)  

மலையமான் திருமுடிக்காரிக்கு அறிவுறுத்துவதாக அமைந்த கபிலரது பாடலின்வழி சங்கப் புலவர்கள் பெற்றிருந்த மனித உரிமைகளை அறியலாம்.

“ஒருதிசை ஒருவனை உள்ளி நால்திசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே ; பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அது நற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே.” (ப. 121)

என்னும் புறப்பாடலில், வரிசையறிதலின் சிறப்பு எடுத்துரைக்கப்படுகின்றது. மன்னர்களில் சிலர் தரம் அறிந்து செயல்படும் திறம் உடையவர்களாக இருந்துள்ளனர். சிறுபாணாற்றுப்படையில் ஓய்மானாட்டு நல்லியக்கோடனைச் சிறப்பித்துப் பாடும் போது,


“வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்
பன்மீ னடுவட் பான்மதி போல
இன்னகை யாயமோ டிருந்தோன்…”     (சிறுபாணா. 227-230)   

என்று வரிசையறியும் ஆற்றல் உடையவனாகக் கூறுகின்றது. “பரிசிலருடைய தரம் அறிந்து அவர் பெறுமுறைமையே கொடுத்தல்” என்று இதற்கு நச்சினார்க்கினியர் உரைவிளக்கம் தருவார்.

“பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே”      (புறம். 6:16-17)

என்று வரும் புறநானூற்றுப் பாடலிலும் இச்செய்தி புலப்படுத்தப்படுவதனைக் காணலாம். மன்னன், புலவரிடம் மட்டுமன்றிப் பகைவர்களிடத்தும் மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதனை,

“யானே பரிசிலன் மன்னு மந்தணன், நீயே
வரிசையில் வணக்கும் வாண் மேம்படுநன்”    (புறம். 200:13-14)     

என்னும் பாடலில் அறியலாம். இதனால், புலவரின் பாடலும் மன்னனது வரிசைக்குத் தக அமைந்திருப்பதனை,

“..................................நின்
ஆடுகொள் வரிசைக்கொப்ப
பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்ப”     (புறம். 58:13-14)

என்னும் பாடலினின்று உணரலாம். அதியமான் நெடுமானஞ்சி பரிசில் நீட்டித்தபோது ஔவையார் பாடியதாக அமைந்த பாடலில்,

“வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்
உள்ளியது முடிக்கு முரனுடை யுள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு....”     (புறம். 206:2-5)   

என்று புலவரிடம் வரிசையறிதல் வேண்டும் என்பது புலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வரிசையறிதல் என்பது புலவர்கள் பெற்றிருந்த மனித உரிமைகளை எடுத்துரைப்பதாய் அமைந்திருக்கக் காணலாம்.

மனித உரிமைகளின் வழி பகையைத் தடுத்தல்
வேந்தரின் வீரத்தையும் அவர்தம் போர் வெற்றியையும் புகழ்ந்து பாடும் பழந்தமிழ்ப் புலவர்கள் போரைத்தடுத்து நிறுத்தி அமைதி ஏற்படுத்தியுள்ளனர். போரின் கொடுமையையும், அறத்தின் அடிப்படையில் விளக்கும் மறப் பண்பையும் விளக்கிப் போரைத் தடுத்துள்ளனர்.

சோழன்குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சேரமான் இயமவரம்பன் நெடுஞ்சேரலாதனுடன் பகைகொண்டு, சேரனின் கருவூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். சோழனை எதிர்க்குமளவிற்குத் தன்னிடம் படைவலிமை இல்லையென்பதை அறிந்த சேரன், கோட்டைக்குள்ளேயே அடங்கியிருந்தான், சோழர்படை கருவூர்க்கோட்டையைச் சுற்றியுள்ள காவற்காட்டை அழித்தொழிந்தது. தன் காவல் மரம் வெட்டப்படும் ஓசை கேட்டும் வெளிவராது காலம் நீட்டித்தலால் இருபெரும் படைகளும், மக்களும் துன்புறுவதைக் கண்டார் ஆலந்தூர்கிழார், கிள்ளிவளவனிடம் சென்று, வேந்தனின் மறப்பண்பைக் கிளர்த்திப் போரைத் தவிர்க்க விழைந்தனர் புலவர். நின்படை கோட்டையில் பலகால் முற்றுகையிட்டிருந்தும், அவன் காவல் மரங்களை வெட்டி வீழ்த்திய ஓசைகேட்டும் வெளிவராது இருக்கும் சேரன் வீரனல்லன். வீரர் தம்மை நிகர்த்த வீரரோடே போரிடுவர். பெருவீரனாய நீ வீரனல்லாத சேரனுடன் போரிடுவது பெருமை தருவதன்று என்னும் பொருளமைய,

“கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
ஆங்கினி திருந்த வேந்தனோடு ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க
மலைத்தனை என்பது நாணுத்தகவு உடைத்தே.”         (புறம். 47:1-6)

என்னும் பாடலைப் பாடிச் சோழனுக்கு வீரத்தின் தன்மையை உணர்த்திப் போரைத் தடுத்து நிறுத்தக் கருதிய புலவரின் பணி குறிப்பிடத்தக்கதாய் அமைந்துள்ளது.

சங்கப் புலவர்கள் போரில் வெற்றிகொண்ட மன்னரைப் பாடிப் புகழ்ந்துள்ளதோடு மட்டுமல்லாது, தாங்கள் பெற்றிருந்த உரிமைகளை மன்னர்களுக்கு எடுத்துரைத்து அதனைப் பல இடங்களிலும் நிலைநாட்டியுள்ளனர். மனிதனை மனிதனாக நடத்த வேண்டும் என்ற கருத்திலும் மனித உரிமைகளை மன்னர்கள் மீறும் போதும் அவர்கள் மன்னர்களுக்கு அறிவுறுத்தவும் தவறவில்லை என்பது இவ்வாய்வால் புலனாகின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*கட்டுரையாளர் - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப் பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு, இந்தியா -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R