ஆய்வுகட்டுரை வாசிப்போமா?மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை சடங்குகளும் வழிபாடுகளும் இரண்டறக் கலந்தவையாக இருக்கின்றன. இயற்கையைச் சரிவர உணராத தொன்மைச் சமுதாயத்தில் வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் தனித்ததொரு இடமிருந்ததை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. சடங்குகள் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை சமுதாயத்தைக்கட்டமைக்கும் உறுப்பினர்களின் கடமைகளை அவர்தம் நிலைப்பாட்டை உணர்த்துவனவாகவும் உள்ளன. ஆடை, அணிகள் குறித்து விவாதம் ஏற்படும் இன்றைய சூழலில் மனிதனை அடையாளப்படுத்தும் ஆடை அணிகலன் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆணுக்குக் கழல் அணியப்பட்ட நிலையில் பெண்ணுக்குச் சிலம்பு ஏன்?  திருமணத்திற்கு முன் காலில் அணியப்பட்ட  சிலம்பு வதுவைச்சடங்குக்கு முன் கழியப்படுவது ஏன்? என்ற வினாக்களுக்கு விடைகாணும் முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.சிலம்பு குறித்த பதிவுகளை நோக்க அகநானூற்றுப்பாடல்கள் மூலமாக அமைகின்றன.

சிலம்பு ஒரு குறியீடு

கயமனாரின் செவிலித்தாய் தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்ட தன் மகளைக் குறித்து, ‘ஏதிலாளனது நெஞ்சு தனக்கேயுரித்தாகப் பெற்ற எனது சிறிய மூதறிவுடையவளது சிலம்புபொருந்திய சிறிய அடிகள் மேகங்கள் பொருந்திய பெரியமலைகள் குறுக்கிட்டு நிற்கும் சுரநெறியில் செல்லுதற்கு வல்லுநவோ’ என்றுகூறி வருந்துகிறாள்1. வண்ணப்புறக்கந்தரத்தனாரின் பாடலிலும் செவிலி, ‘மானின் கூட்டம் வற்றிய மரச்செடியினைச் சுவைத்துப் பார்க்கும் காட்டில் வலிமைமிக்க பெருந்தகையாய தலைவன் இவளைப் பலபடியாகப் பாரட்டி உலர்ந்த நிழலிலே தங்கி இவளை உடன்கொண்டு கழிதலை அறியின் இவள் தந்தையது தங்கும் உணவுமிகுந்துள்ள காவல் பொருந்தியப் பெரியமனையில் செல்லும் இடம்தொறும் இடந்தொறும் உடம்பின் நிழலைப் போலச் சென்று கோதையையுடைய ஆயத்தாரொடு விளையாடும் விளையாட்டினை மேற்கொண்டு தொகுதிவாய்ந்த பரலினையுடைய சிலம்பு ஒலிக்க அவள் விளையாடும் இடந்தொறும் அகலாதிருப்பேன் அது கழிந்ததே என வருந்துகிறாள்2.

மற்றொரு பாடலில் பொற்றொடி ஒலிக்கக் கைகளை வீசியும் சிவந்த அடியில் சிலம்புகள் விளங்கவும் சென்ற தலைவியைக் காண முடிகிறது3. பரணர் தம் பாடலில் ‘பாதியிரவில் மழையில் மறைந்து மணம்கமழும் கூந்தலுடன் வில்லினைப் போலும் வகையமைந்த நன்மை பொருந்திய குடச்சூலாகிய அழகிய சிலம்பினை ஒலியாது அடக்கி அச்சத்துடன் வந்து ஊர்முழுதும் துயிலும் யாமத்தில் நம்மைத் தழுவி மீள்வோள் நிறைந்த கற்பினால் உயர்ந்த பெருமையுற்ற அழகிய மாமை நிறமுடைய பெண்ணோ அல்லள்; சுனையில் உறையும் சூரரமகளே அவள்’ என்று கூறும் தலைவனைப் பதிவுசெய்கிறார்4. உடன்போக்கு மேற்கொண்ட மகளைப் பற்றிய செவிலியின் கூற்றாக அமையும் கயமனாரின் பாடலும், ‘தாய் அறிதலை அஞ்சி ஆராய்ந்துகொண்ட சிலம்பினை நீக்கி மூங்கில் உயர்ந்த பக்கமலையைத் தன் தலைவனுடன் கடந்துசென்ற மகள்’ என்றே கூறுகிறது5.

எனவே சிலம்பைத் தலைவி திருமணத்திற்கு முன் அணிந்திருந்தாள் என்பதையே மேற்கண்ட பாடற்கருத்துகள் உணர்த்துகின்றன. சிலம்பின் பயனை நாம் உற்று நோக்குவோமாயின் அது தலைவியின் இயக்கத்தை உணர்த்தும் குறியாக அமைவதை உணரலாம். மேற்குறிப்பிட்ட உடன்போக்கு மேற்கொண்ட தலைவியின் செவிலி கூற்றாயமைந்த பாடலில் செவிலி, ’தலைவி உடன்போக்கு மேற்கொள்வாளென்று அறிந்திருப்பின் அவளது தந்தையின் செல்வம் மிகுந்த மனையில் அவள் ஆயத்தாருடன் சிலம்பு ஒலிக்கவிளையாடும் இடந்தொறும் அகலாதிருந்திருப்பேனே, அது கழிந்ததே’ என வருந்துகிறாள். செவிலியின் கூற்றில் சிலம்பொலியைக் கொண்டு தலைவியின் இயக்கத்தைக் கண்காணித்திருப்பேனே என்ற வருத்தமே மேலோங்கியிருக்கிறது. தலைவியின் இயக்கத்தைக் கண்காணித்து அறிந்து கொள்ளவே தலைவிக்குச் சிலம்பு அணிவித்திருக்கவேண்டும். இந்நிலையினைக் களவுவாழ்க்கை வழக்கிலிருந்த ஒரிசா திராவிடப்பழங்குடி மக்களிடையேயிருந்த ஒரு பழக்கத்துடன் பொருத்திப் பார்க்க முடியும். கந்தர் வேட்டைச் சமுதாய மக்கள் மஞ்சள் கிழங்கு பயிரிடத் தொடங்கியதன் பின்பு உடைமையைச் சேர்க்கத் தொடங்கினர். இதனால் அவர்களிடையே தகுதிவேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் மஞ்சள் விளைவிக்கும் குடும்பங்கள் தமது பெண்களைச் சமதகுதியுடையவர்களுக்கு மணம் செய்துகொடுக்க விரும்பினர். எனவே பெண் தான் விரும்பியவனுடன் சென்றுவிடாமலிருக்கக் காலில் இரும்பு வளையத்தைக் கட்டி இரவு நேரங்களில் வட்டமாகக் கும்மியடித்துக் காப்பாற்றி ஒத்த குடும்பத்தினருக்கு மணம் முடித்தனரென்று பக்தவத்சலபாரதி குறிப்பிடுகிறார்6.

தலைவனைச் சந்திக்க வரும் தலைவியும் கூடத் தன் இயக்கத்தைத் தெற்றென விளக்கும் சிலம்பின் ஒலியை அடக்கியே வருகிறாள். அவ்வாறு வரும் தலைவியைக் குறித்துத் தலைவன், ‘ஊர்முழுவதும் உறங்கும் யாமத்தில் நம்மைத் தழுவி மீள்வோள் நிறைந்த கற்பினால் உயர்ந்த பெருமையுற்ற பெண் அல்லள்; சுனையில் உறையும் சூரர மகளே’ என்று கூறுகிறான்7. இங்கே தலைவியின் செயல் சுனையில் இருக்கும் சூரரமகளின் இயல்புக்கு இணையாக்கப்படுகிறது. ஆகக் களவு வாழ்வுக்கு மறுப்பிருந்த சூழலில் பெண்ணின் இயக்கத்தைக் கண்காணிக்கும் குறியாக அவளின் கன்னிமையை உணர்த்தும் அடையாளமாக  அதாவது திருமணமாகாதவள் என்ற நிலையை உணர்த்தும் அடையாளமாக சிலம்பு அணிதல் விளங்குகிறது. திருமணமாகாத நிலையிலும்கூடத் தலைவியைக் குறிக்க கற்பு என்ற சொல்லாட்சியைத் தலைவன் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. ஆக சிலம்பு கன்னிமையின் குறியீடாவதை நாம் உணர முடிகிறது. இத்தகைய சிலம்பு தலைவியிடமிருந்து நீக்கப்படும் சூழல் அவளது வதுவைக் காலமேயாகும்.

சிலம்பு கழி நோன்பு
திருமணமாகிய வதுவைச்சடங்குக்கு முன் காலில்  அணியப்பட்ட தலைவியின் சிலம்பு நீக்கப்படுகிறது. இதை இலக்கியங்கள் சிலம்பு கழி நோன்பு என்று குறிப்பிடுகின்றன. இச்சிலம்புகழி நோன்பானது தலைவியின் வாழ்வை நிலைமாற்றும் சடங்காக அமைகின்றது. அதாவது அன்னை தந்தையுடனான வாழ்விலிருந்து தலைவியின் வாழ்வைத் தலைவனுடன் பிணைக்கும் நிலைமாற்றுச் சடங்காகிறது. தமர்சூழத் திருமணம் செய்யாத தலைவி உடன்போக்கு மேற்கொள்ளும் நிலையில் தலைவனின் இல்லத்திலேயே அல்லது அவள் சென்று சேருமிடத்திலேயே சிலம்புகழி நோன்பைச் செய்கிறாள். இதைக் குறித்து வருத்தம் தெரிவிக்கும் வகையில் பல அகநானூற்றுப் பாடல்கள் அமைகின்றன.

மகட்போக்கிய செவிலித்தாயின் கூற்றாயமையும்  குடவாயிற் கீரத்த னாரின் பாடலில் செவிலி, ‘மயில்போலும் சாயலையுடைய என்மகள் தன்னையொத்த தோழிமாரும் என்னையொத்த தாய்மாரும் கண்டு மகிழ செல்வம் மிக்க பெரிய மனையில் மேலோர் வதுவை செய்துவிக்க நல்ல சிறப்புற்ற மணவிழாவில் அவளுக்கு மயிர்ச்சாந்தினைப் பூசி பல சிறப்புகளையும் செய்துவிக்க மணந்து செல்லாளாய் அஞ்சாமையுடைய இளையள் அறியப்படாத தேயத்திலே சிலம்பு கழித்து வதுவை செய்திருத்தல் இன்னாமையுடையது’ என்கிறாள்8.

குடவாயிற்கீரத்தனாரின் மற்றொருபாடலும், ‘பாண்டியனது மதுரையையொத்த தனது அரிய காவல் பொருந்திய பெரிய மனையில் சிலம்புகழி நோன்பு செய்யப்பெறாளாய் நெடுந்தூரம் சென்று சீறூரில் தங்கியிருப்பாளோ என வருந்தும் தாயைக் காட்சிப்படுத்துகிறது9.எனவே சிலம்புகழிதல் நோன்பானது தலைவியின் வாழ்வை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது. சிலம்புகழிதல் என்ற செயல் தலைவியின் முழுமையான பொறுப்பையும் தலைவனுக்கு மாற்றுதல் என்பதை உணர்த்துவதாக அமைகிறது. சிலம்பு கழித்தபின் நிகழும்  வதுவைச்சடங்கு தலைவியை முழுமையாகத் தலைவனுக்குரியவளாக்குகிறது. குடும்ப அமைப்பினுள் நுழையும் பெண்ணுக்குப் பலவிதமான நோன்புகளும் சடங்குகளும் உரித்தாகிப் போவதைப் பல பாடல்கள் உணர்த்துகின்றன.

தொகுப்புரை:
பெண் அணியும் சிலம்பு என்ற அணிகலன் அவளது இயக்கத்தைக் கண்காணிக்க உதவியதையும் கன்னிமையைக் குறிக்கும் குறியீடாக விளங்கியதையும் பாடல்கள் புலப்படுத்துகின்றன. சிலம்புகழி நோன்பு தலைவியைப் பெற்றோரிடமிருந்து தலைவனுக்கு நிலைமாற்றுவதாகவும் குடும்பம் என்ற தளத்தில் நிலை நிறுத்துவதாகவும் அமைகின்றது.

 

1.அகநானூறு பா.எ.17.
2.மேலது பா.எ.49.
3.மேலது பா.எ.117.
4.மேலது பா.எ.198.
5.மேலது பா.321
6.தமிழர் மானிடவியல் - பக்தவத்சல பாரதி ப.177.
7.அகநானூறு பா.எ.86.
8.மேலது பா.எ.136.
9.மேலது பா.எ.397.

பார்வை நூல்கள் :
1.நா.மு.வேங்கடசாமி நாட்டார் (1962) (உ.ஆ) – அகநானூறு களிற்றியானை நிரை ரா.வேங்கடாசலம் பிள்ளை திருநெல்வேலிசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்,  திருநெல்வேலி–6.
2.நா.மு.வேங்கடசாமி நாட்டார் (2007) (உ.ஆ) -  அகநானூறு மணிமிடை பவளம்
ரா.வேங்கடாசலம் பிள்ளை திருநெல்வேலிசைவசித்தாந்த  நூற்பதிப்புக்கழகம், சென்னை – 18.
3.நா.மு.வேங்கடசாமி நாட்டார் (2008)( உ.ஆ) - அகநானூறு நித்திலக்கோவை ரா.வேங்கடாசலம் பிள்ளை திருநெல்வேலிசைவசித்தாந்த
நூற்பதிப்புக்கழகம், சென்னை – 18.
4.பக்தவத்சல பாரதி (2008) தமிழர் மானிடவியல் அடையாளம் வெளியீடு, திருச்சி.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R