1. சமத்துவம் : ஒரு சினிமாவின் தலைப்பு
கோவிலுக்குச் சென்றாலும்கூட
கடவுளையா தம்மையா _ யாரை அதிகம் பார்க்கிறார்கள்
சாமான்யர்கள் என்று
மூக்கின் அருகில் கூப்பிய கரங்களின் மறைவிருந்து
அரைக்கண்ணால் அவ்வப்போது பார்க்கும்
பிரபலங்கள் _
பிரபலங்களான பின்பு ஒருநாளும்
தர்மதரிசனத்திற்கான வரிசையில்
அதி ஏழைகளோடும் மித ஏழைகளோடும் சேர்ந்து
சில பல மணிநேரங்கள் காத்திருந்து கடவுளைக் காண
மனமொப்பாப் பெருந்தகைகள் _
அரண்மனைபோலொரு வீட்டைக்
கட்டிமுடித்த கையோடு
சித்தாள்கள் கொத்தனார்களை முன்னறையைத் தாண்டி
வர அனுமதிக்காத பிரமுகர்கள் _
தப்பாமல் ஒப்பனையுடனேயே தெரியும்
பெரியமனிதர்கள் _
என்றெல்லோரும் முழங்குகிறார்கள்
எங்கெல்லாமோ சமத்துவமில்லையென….
பட்டு சுற்றப்பட்ட தன் முதுகில் அழுக்கு தட்டுப்பட
வாய்ப்பேயில்லை என்று
திட்டவட்டமாய்ப் பறையறிவித்துக்கொள்வார்க்கும்,
தன் முதுகைக் காணமுடியாது தன்னால்
என்று தத்துவம் பேசுவார்க்கும்
எதிரில் உண்டு எப்போதும்
விதவிதமான நீள அகலங்களில்
நிலைக்கண்ணாடிகள்.
2. கீழ்க்கண்ணால் பார்ப்பது புகைப்படங்களா?
புகைப்படத்தில் உள்ளவர்களா?
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை
எதனால் சிலர் எல்லாப் புகைப்படங்களிலும்
கீழ்க்கண்ணால் பார்க்கிறார்கள்
கிறக்கத்திலாழ்ந்திருப்பதாய்
பிறரைக் கிறக்கத்திலாழ்த்த விரும்புவதாய்
புகைப்படக்கருவிக்குள் அதற்கென்று ஏதேனும்
தனிச்சிறப்பான தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கிறதா?
அறிவுசாலிகள் கைக்கொள்ளவேண்டிய பாவம் அதுதானோ?
சத்தியமாய் இயல்பானதா? அல்லது, ஒத்திகை பார்க்கப்பட்டதா?
பாவமும் பாவனையும் ஏன் சமயங்களில் ஒரே பொருளிலும்
சமயங்களில் வெவ்வேறு பொருளிலும் வருகின்றன?.
(B)பாவம் (P)பாவமாக பாவனை என்னவாகும்?
ஏனோ எதனாலுக்கு பதிலியாகுமா ஆகாதா?
போகாத ஊருக்கு வழிதேடக்கூடாதா?
ஒருமுறை தாண்டிக்கடந்தபின் மீண்டும்
முதல் சதுரத்திற்குக் கால்கள் வந்துசேர்வது
எப்படி?
இப்படி _
யடுக்கடுக்காய் எத்தனையோ புரியாமலிருக்கும்போது
கணக்காய் ஒன்று மட்டும் புரியவில்லையென்று
எதனால் சொன்னேன் என்பதும் புரியவில்லை!
3. உண்மைவிளம்பிகளின் பொய்கள்
ஒப்பனைகளை வெறுப்பதாகத்
தப்பாமல் தங்கள் நேர்காணல்களிலெல்லாம்
பறையறிவிப்பவர்களின்
ஆகப்பெரும் ஒப்பனை அதுவேயென்ற
உண்மை
உறைக்குமோ எப்போதேனும்
அவர்தம் குறையறிவின்
கறைமனதில்?
4. இலக்கியப் பல்லக்குகளும் பல்லக்குத் தூக்கிகளும்
‘நான் காலையில் காபி குடிப்பதில்லை
அது ஆதிக்கசாதியின் அதிகாரம்’ என்று
அதி காரமாய் பேசுபவருக்காய்
நாற்காலியின் மீதேறி
நிலைதவறிவிழுந்துவிடும்படி நின்று
சரவெடியாய்க் கைதட்டுபவர்
ஏனோ கேட்பதில்லை
பின், என்ன குடிப்பது வழக்கம் என்று.
(கேட்டால் கிடைக்கலாம் பதில்
‘ENSURE’ என்று.
ஒரு பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை
பெருமுதலாளி யென்று அவர்
மேடை தவறாமல் சாடும்போதெல்லாம்
ஓடியோடிச் சென்று கைகொடுப்பவரும்
கேட்பதேயில்லை
அவர் காலகாலமாய்ப் பயன்படுத்துவது
பற்பசையா அல்லது
ஆலங்குச்சியா என்று.
நான்கு நிமிடங்களுக்கு முன்
இறந்துவிட்ட ஒருவருக்காக
ரத்தக்கண்ணீர் வடித்தவர்
ஐந்தாவது நிமிடத்தில்
ஐஸ்கிரீமை ஒயிலாய்ச் சுவைத்தபடி
சிரிக்கும்
தன் படத்தைப் பதிவேற்றுகிறாரே –
அது ஏன்
என்று எதுவுமே கேட்காமல்
அவருடைய எல்லாப் பதிவுகளுக்கும்
’லைக்’ –டிக் செய்பவர்களின்
கைத்தாங்கலில் நகர்ந்தவாறிருக்கு
முன்னவர் மிக நளினமாய் அமர்ந்திருக்கும்
முத்துப்பல்லக்கு.
5. படைத்தால் மட்டும் போதுமா?
எந்த மேடையில் எந்தெந்தப் பெயர்களைப் பட்டியலிடவேண்டும்
என்று தெரிந்துவைத்திருக்கும் எளிய சூட்சுமம்கூடக் கைவரப்பெறாதவர்
எத்தனை சிறந்த எழுத்தாளராயிருந்தா லென்ன?
என்ன இருந்தாலும் அந்த மேடையில் அவர்
இந்தப் பெயரைச் சொன்னது அபத்தம்.
இந்த மேடையில் அந்தப் பெயர்களைச் சொன்னது அபச்சாரம்
ஏதோ அழைத்தார்களே என்று
எந்தவிதமான ’ஹோம்வர்க்’கும் செய்யாமல் போய்
பேசத்தொடங்கினால் எப்படி?
நான்கைந்து மேடைகளில் அவரைப் பேச அழைத்தவர்கள்
நல்லது என்று தான் மனமார நம்புவதைப் பேசுபவர் நமக்கெதற்கு
என்று ஒருமனதாக முடிவெடுத்தனர்.
பிறகு எத்தனையோ இலக்கியக்கூட்டங்கள் நடந்தேறின.
அந்தப் படைப்பாளி அழைக்கப்படவேயில்லை.
அப்பா, ஏன் இப்போதெல்லாம் கூட்டத்திற்கு அழைப்பதில்லை உங்களை?
போனால் அழகான பூங்கொத்து கொண்டுவருவீர்களே என்றாள் மகள்.
பின்னே, பொற்கிழியா கிடைக்கும் என்று
வழக்கம்போல்அலுத்துக்கொண்டாள் மனைவி.
6. ஊருக்கு இளைத்தவர்கள்
அவ்வப்போது சிலர் விலகிச் செல்வர்;
சிலர் விலக்கப்படுவர்;
சிலர் புதிதாகச் சேருவார்கள்;
சிலர் சேர்க்கப்படுவார்கள்.
என்றபோதும் _
உண்மையாகவே ஊருக்கு இளைத்தவர்கள்
என்று
எப்போதுமே சிலர் உண்டு.
இந்தப் பிரிவில்
இளைத்தவர்கள் என்ற பெயரில்
கொழுத்தவர்கள் சிலரும்
இடம்பிடித்துக்கொள்வார்கள்.
பின்
உண்மையான இளைத்தவர்களை
கொழுத்தவர்களாக்கிக் காட்டுவதற்காக
சளைக்காமல் களைக்காமல்
உத்திகளை வகுப்பார்கள்.
சித்தரிப்பார்கள் சில
இறந்தகாலங்களை.
எனில்,
உண்மையான ஊருக்கு இளைத்தவர்கள்
எகத்தாளத்திற்கும் எட்டியுதைத்தலுக்கும் வாகான
இளைத்தவர்களாகவே _
ஒருகாலத்தில் ’ஜோல்னாப்பை’யர்களாகக் காண்பிக்கப்பட்ட படைப்பாளிகள்
இன்றும் ஜோல்னாப்பையர்களாகவே இருப்பதுபோல்.
7. படைப்பாளியின் புது அடையாளம்
சிறுவயதில்
உறவினர்கள் குழுமும் நாட்களிலெல்லாம்
ஒருவர் தனக்குத் தெரிந்த பிரமுகரின்
பெயரைச் சொல்லி
பெருமையோடு மற்றவர்களைப் பார்ப்பார்.
இன்னொருவர் தனக்குத் தெரிந்த
இன்னொரு பிரபலத்தோடு
தான் நின்றுகொண்டிருக்கும்
(முந்தைய நாள் இரவே கவனமாகத்
தேடியெடுத்துவைத்திருந்த)
புகைப்படத்தை சுற்றுக்கு விடுவார்.
பெரிய நீதிபதியின் பெயரைச்
சொல்வார்கள்;
மருத்துவ நிபுணரின் பெயரைச்
சொல்வார்கள்;
ஆட்சியாளர், மாவட்ட ஆட்சியாளர் என
அவர்களிடம் ஒரு பட்டியலே உண்டு.
இடத்திற்குத் தக்கவாறு ஒரு பெயரை
எடுத்துவிடுவார்கள்.
அன்னாரைத் தெரிந்திருப்பதே
தன் தனி அடையாளமாய்
இன்னாரை அறிந்திருப்பதே
தனக்கான படைபலமாய்.
அவர்களுடைய பேச்சில்
பிரமுகராகவோ
பிரபலமானவராகவோ
படைப்பாளிகளைப் பார்க்க
முடிந்ததேயில்லை.
இன்று பார்க்கமுடிகிறது _
நிறையவே
அரசியல்வாதிகளின் அருகில்
திரையுலகினரின் அருகில்
பெருமைபொங்க ‘போஸ்’ கொடுத்தபடி
படைப்பாளி நின்றுகொண்டிருக்கும்
நிழற்படங்களை.
8. உயிர்க்கிளி இருக்கும் மறைவிடம்
அவர்கள் ஆளுக்கொரு பட்டியல் வைத்திருக்கிறார்கள்.
பல நேரங்களில் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்
தத்தம் பட்டியலை.
ஒரு பட்டியல் பகடைக்காயாக முடியூம்.
பெரிய துருப்புச்சீட்டாக மாற முடியும்.
பிரம்பாக பிச்சுவாக் கத்தியாக
பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுகுண்டாக -
இன்னும் பலவாக முடியும்….
சில நேரங்களில் சிலரை மட்டும் கறாராகத்
தேர்ந்தெடுத்துக்கொண்டு
தங்கள் பட்டியல்களை ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்கிறார்கள்.
அந்த சிலர் வெகுசிலரேயானாலும்
அவர்களில் ஒருசிலர்
காலப்போக்கில் கடும்பகையாளியாகிவிடும்போது
சில பட்டியல் ரகசியங்கள் அம்பலமேறுகின்றன.
பட்டியலில் அடிக்கப்பட்ட பெயர்கள்
திருத்தப்பட்ட பெயர்கள்
முதலிடத்திலிருந்து முப்பதாவது இடத்திற்கும்
முன்னூறாவது இடத்திலிருந்து தொன்னூறாவது இடத்துக்கும்
நகர்ந்துவிட்ட பெயர்கள்
சில இடங்களில் மாய மசியால் எழுதப்பட்டதாய்
மனம் போன போகில் காணாமல்போய்விடும் பெயர்கள்
சில தருணங்களில் மந்திரக்கோலால் வரவழைக்கப்பட்டதாய்
பட்டியலில் சட்டென்று வந்து ’பச்சக்’ என்று
ஒட்டிக்கொள்ளும் பெயர்கள்
செல்லப்பெயர்கள்
புனைப்பெயர்கள்
இடுகுறிப்பெயர்கள்
ஆகுபெயர்கள்
இடவாகுபெயர்கள்
அடைமொழிகள்
வசைச்சொற்கள்…..
காலம் செல்லச்செல்ல ஒருவர் கையிலுள்ள பட்டியலே
அவர்கள் அடையாளமாகிவிடுகிறது.
ஒருவேளை பட்டியல் தொலைந்துவிட்டால்
அதன் ரகசிய இடத்திலிருந்து களவாடப்பட்டுவிட்டால்
எடுக்கப்படும் கைக்குரியவர் தன் தோற்றத்திற்குரியவராகிவிடுவாரோ
என்ற பெரும்பீதியும்
இறந்தபின்பும் அமரராக இருக்கும் தம்மைக்
கற்பனையில் கண்டு இறும்பூதடையும்
பேராவலுமாய்
பெருகும் குருதியும்
பொறுக்கமுடியாத வலியும்
ஒரு பொருட்டில்லையென்று
உள்வெளியெங்கும்
கூர்கல்லாலும் கத்திமுனையாலும்
செதுக்கிக்கொள்ளத் தொடங்குகிறார்கள்
தத்தமது பட்டியல்களை.
9. நிலை(ப்)பாடு
அதிகபட்சமாக அறுபதுபேர் கூடியிருக்கும் அரங்கில் அவர்
ஆயிரம்பேர் இருப்பதான மயக்கத்தில்
இருகால்களால் உருண்டவாறிருக்கிறார்.
பொருட்படுத்திக் குனிந்து அரிய முத்து என்று கையிலெடுத்து
விறுவிறுவென அரங்கெங்கும் பொடிநடையாய் நடந்து
அவரிவரெவரெவரிடமோ தன்னை அறிமுகப்படுத்தி
தன் அருமைபெருமைகளையெல்லாம்
சிறு சிறு ஹைக்கூ கவிதைகளாகவோ
அல்லது இறுதியற்ற நீள்கவிதையாகவோ
விரித்துரைப்பார் என்ற அவரது நம்பிக்கை
பொய்யாக
சுருட்டியெறியப்பட்ட காகிதக்கிழிசல்களாய்
சிறு பெரு பாதங்களால் இரக்கமற்று எத்தப்பட்டும்
திரும்பத்திரும்ப அரங்கரங்காய்ப் போய்க்கொண்டிருந்தவருக்கு
அறுபதென்பது அறுபதாயிரமாய்ப் புரியத்தொடங்கியபோது
அவருக்கு வயது அறுபத்தொன்பதுக்கு மேலாகியிருந்தது.
10. வருத்தமாயிருக்கிறது அவரைப் பார்க்க….
கவிதைக்கான மனப்பிறழ்வின் முழுவிழிப்பை
யொருபோதுமடைய மாட்டாதவர்கள்தான்
புகழுக்கான பிரமைபிடித்தவர்களாகி
விடுகிறார்கள் என்று
அவரிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.