"கார்காலம் பூத்தது
தலைவனும் இல்லகத்தே...
நுதல் மகிழ்வில்
ஓரை மனதில்...
தாரை கண்ணகம் அல்ல
தேரும் மாரில் தகும்...
முளிதயிர் பிசைந்து சிவந்தது
கையோடு மனதும் மணந்தது..
உச்சி முகரும் உள்ளி
மன்றல் ஆவின் ஓதையே சொல்லி...
செம்புலம் சிவந்தது
முல்லை அகன்றது...
ஓடா தேரின் ஆடா மணி நா..
பருக்கை நிறைத்த
அன்பின் அம் கை...
காடோ! நாடோ!
அனாதி ஊடல்
கூடிக் கழிகிறது
இருத்தல் நிமித்தமாய்...
எல்லோரும்
இல் இருத்தலால்
வாழ்வில் மீண்டும்
சங்கம் ...
காலமொன்று
வந்திருக்கின்றது
களிப்பின்
சிறுபொழுதாய்
கொரோனா எனும்
பெரும் பொழுதாய்..."
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.