- தாயகம் (கனடா) சஞ்சிகையில் முதலில் வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் பிரசுரமானது. ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. -
கடந்த ஒரு மணிநேரமாக இவன் நடந்துகொண்டிருக்கின்றான். யார் இவன் என்கின்றீர்களா? வேறு யாருமில்லை. இவன்தான். இவன் இவனேதான். அவன் அவனேதான் என்று சொல்வதில்லையா? அது போல்தான். இவனும்இவனேதான். இவனிற்குக் கொஞ்சநாட்களாகவே ஒரு சந்தேகம். என்னவென்று கேட்கின்றீர்களா? வேறொன்றுமில்லை. வழக்கமாக நம்நாட்டு வேதாந்திகளிற்கு வரும் சந்தேகங்களில் முக்கியமானதொன்றுதான். 'நான் யார்.நானென்றால் நான் யார்? இது தான் இவனது சந்தேகம். அதற்கு முன்னால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அது என்ன? அதுதான் இவன் நடந்து கொண்டிருக்கின்ற பாதை, 'நான் கடந்து வந்த பாதை' என்றிருக் கின்றதே அது போல் தான் இவன் கடந்து கொண்டிருக்கின்ற இந்தப் பாதையும். இவன் சிறுவனாகயிருந்தபோது இந்தப் பாதையைப் பற்றி இவன் படித்திருக்கின்றான். இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது. இவனிற்குப்புவியியல் கற்பித்த ஆசிரியையின் ஞாபகம் கூட இருக்கின்றது. இவ்வளவுஞாபகசக்திமிக்க இவனிற்கு இவனைப் பற்றி மட்டும் அப்படியெப்படி சந்தேகம் வரலாம் என்கின்றீர்களா? பொறுங்கள்! சற்றே பொறுங்கள். அதற்கு முன் இவன் கடந்து செல்கின்ற பாதையைப் பற்றிச்சிறிது பார்ப்போம்.
'யங்'ஸ்ட்ரீட். உலகப் புகழ் பெற்ற "யங் வீதி. அடடா. அவன் வேறு யாருமில்லை. இவன் வேறு யாருமில்லை. கனடா மனிதனே தான் என்கின்றீர்களா? சந்தேகமில்லை. இவன் கனடா மனிதனேதான். அதோ தெரிகின்றதே. உலகின் உயர்ந்த கோபுர வகை கட்டடம். அதுதான் சி.என்.கோபுரம். அது போதும் இவன் கனடாமனிதன்தான் என்பதற்கு. ஆனால் அதிலும் ஒரு சிக்கல். கனடா வீதியொன்றில் நடப்பவன் கனடா மனிதன்தான் என்று வைத்துக் கொண்டால் நிச்சயம் இவன் கனடா மனிதன்தான். ஆனால் அப்படியும் சொல்வதற்கில்லை. கனடா புகழ் பெற்ற செல்வந்தநாடு. சர்வ வல்லமை பொருந்திய அதி வீரபராக்கிரம அமெரிக்காவின் அண்டைநாடு. அதிலும் ரொரண்டோ பல்வேறு உலக அதிசயங்களை உள்ளடக்கிய மாபெரும் நகரங்களில் முக்கியமானதொன்று. உல்லாசப் பிரயாணிகளிற்கா குறைச்சல். இவர்களைத் தவிர அடைக்கலம் நாடி வரும் அகதிகள். ஆபிரிக்கர்கள். ஆப்கானியர்கள். ஆசியர்கள். இந்தியர்கள். இந்தியர்கள் வேறு ஆசியர்கள் வேறு. முழி பிதுங்காதீர்கள். ஆசியர்களென்று இங்கு பொதுவாக சீன உபகண்டநாடுகளைச் சேர்ந்தவர்களைத்தான் குறிப்பிடுகின்றார்கள். அது தான். வேறொன்றுமில்லை. அப்படி யென்றால் இவன் யார்? யார் இவன்? இவனுடன் தான் சிறிது நடந்து சென்று பார்ப்போமே. ஒரு வேளைபுரிந்து விடலாம். இவனைப் பார்த்தால் தாடி வளர்த்து சடைபின்னிச் சாமியாரைப்போலல்லவா இருக்கின்றது. நதிமூலம் அது இது என்பது போல் ரிஷிமூலம் தெரிவதில்லை என்கின்றார்களே. ஒரு வேளை இவன் மூலமும் இந்த வகையானதுதானா?நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். சற்றும் பொறுமையாகத் தான் இவனைப் பின்தொடர்ந்து பார்ப்போமே. 'மீன் டைம்.' அடடா, எனக்கும் இங்கு வந்த இந்த ஆறு மாதத்தில் தாய் மொழியே மறந்து விடும் போலிருக்கின்றதே. அதாவது இவனைப்பின்தொடர்ந்து கொண்டு இவனைப் பற்றி அறிய முயன்று கொண்டிருக்கின்ற அதே சமயம் இவனது உடை, தோல்நிறம் என்பவற்றைச் சிறிது ஆராய்ந்துதான் பார்ப்போமா. உடை. கந்தல்தான் கனடாவில் கந்தலா. கந்தல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதுவும் கனடாவில். சொன்னால் நம்ப மறுப்பார்கள். நமக்கேன் வம்பு. சரி இவனது தோலின் நிறம். நிச்சயமாக வெள்ளையில்லை. அழுக்கு உடல் முழுக்கப் பரவியிருப்பதால் தாடி மண்டிக்கிடப்பதால் சொல்வதற்கில்லை. தளர்ந்து விடாதீர்கள். நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கத்தான் செய்கின்றது.
இதோ இப்பொழுது புகழ்பெற்ற 'ஈட்டன் சென்ட'ரைக் கடந்து யங்வீதியில் வடக்காக 'டன்டாஸ் வீதியைக் கடந்து நடந்து கொண்டி ருக்கின்றான். 'ஈட்டன் சென்டர் இருக்கின்றதே. கனடாவின் வீட்டை விட்டு ஓடி வரும் இளசுகளின் ஆரம்ப அடைக்கல மாளிகை இதுதான். இங்கிருந்து தான் இவர்களில் பெரும்பாலோனோர் உலகின் மிகப் பழமை வாய்ந்த தொழில் செய்வதற்கு அடியெடுத்து வைக்கின்றார்கள். ஆனால் இவனிற்கு இது பற்றியெல்லாம் கவலைப்பட நேரமெங்கேயிருக்கின்றது. விரைவாக வடக்கு நோக்கிநடந்து கொண்டிருக்கின்றான். 'சன்சிபாரை'க் கடந்து விட்டான். 'சன்சிபார்' என்ற ஆபிரிக்க நாடொன்றின் ஞாபகம் வந்து விட்டதா? ஆனால் அது வேறு; இது வேறு. இது வேறு வகையானதொரு 'சன்சிபார் நிர்வாண அழகிகளின் ஆடல்களிற்குப் புகழ்பெற்ற களியாட்ட மாளிகை. இது போன்ற பல களியாட்ட மாளிகைகளை இந்தப் புகழ்பெற்ற "யங் வீதியில் நீங்கள் காணலாம். ஆனால் இவன்தான் சாமியாரைப் போல் தெரிகின்றானே. சாமிக்கு இந்த 'காமிக்கிற விஷயங்களிலெல்லாம் தான் கவலையில்லையே (வேறொன்றுமில்லை. சிறு வயதிலிருந்து அண்ணாத்துரை, கருணாநிதி போன்ற அடுக்கு மொழி , எதுகை மோனை விற்பன்னர்களின் நூல்களைப் படித்ததால் ஏற்பட்ட பழக்கம்தான் இந்த 'சாமி காமியெல்லாம். சாமி வடக்கு நோக்கிநடந்து கொண்டேயிருக்கின்றார். ஒரு வேளை வடக்கிருக்கப் போகின்றாரோ? சாமி அதாவது இவன் இப்பொழுது வெலஸ்லி வீதியைக் கடந்து விட்டான்(ர்). இந்த 'கொலிஜ்' வீதிக்கும் 'வெலஸ்லி'வீதிக்கும் இடைப்பட்ட யங் வீதிக்கு மேற்காகயிருக்கின்ற பகுதியிருக்கின்றதே இது ஒரு வித்தியாசமான பகுதி. பகலில் தெரியும் இதன் தோற்றத்திற்கும் இரவில் தெரியும் இதன் தோற்றத்திற்கும் 180பாகை வித்தியாசமுண்டு. இறுக்கமாக ஒட்டிய டெனிம் ஜீன்ஸ் அணிந்து ஆணழகர்களை இங்கு நீங்கள் அப்பொழுது காணலாம். இரவு ராணிகள், இரவு ராஜாக்கள் இப்படி பல்வேறு வகையான இராச்சியங்களை உள்ளடக்கியமாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர்தான் இந்த "யங் வீதி எல்லாம் இரவில் தான். பகலில் இந்தப் பூனையும் பால் குடிக்குமா ரகம்தான்.
அது சரி அந்த இவனிற்கு என்ன நடந்துவிட்டது. அடடா நல்ல வேளை ஒன்றுமே நடக்கவில்லை. அதோ போய்க் கொண்டிருக்கின்றானே. இன்னமும், வடக்காக. விரைந்துதான் நடப்போமா.
பல்வேறு திசைகளிலுமாகப் பல்வேறு மனிதர்கள்.
சீனர்கள்,
யவனர்கள்,
ரோமர்கள் அதாவது இத்தாலியர்கள்,
ஆங்கிலேயர்கள்,
அராபியர்கள்,
இஸ்ரேலியர்கள்,
ஆபிரிக்கர்கள்,
வட அமெரிக்கர்கள்,
போர்த்த்கேயர்கள்,
ஜெர்மானியர்கள்,..
சிலர் தெற்காக நடக்கிறார்கள்.
சிலர் மேற்காக.
சிலர் கிழக்காக.
சிலர் வடக்காக.
இன்னும் சிலரோ குறுக்காக.
எதிரே தடித்த, அடர்ந்த மீசையுடன் ஒரு ஆங்கிலேயன். நடுத்தர வயதினன். அலட்சியமும் அகங்காரமும் படர்ந்த முகத்தினன். தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தான். இவன்' வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இவனும் கவனிக்கவில்லை. அவனும் கவனிக்கவில்லை. சிறு மோதல். எரிச்சலுடன் ஆத்திரத்துடன் இவனைத் திரும்பிப் பார்க்கின்றான் தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தவன்.
வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தவனின் தோற்றம் அவனிற்கு அருவருப்பைத் தருகின்றது போலும். வார்த்தைகள் உதிருகின்றன.
'. டேர்ட்டி இன்டியன்' இவன் எதையுமே கவனிக்கவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றான்.
யார் இவன். ? இலேசாகப் புரிகின்றதா? இந்தியனாகயிருப்பானோ?
பலவகையான இந்தியர்கள் இருக்கின்றார்கள். இவன் அவர்களில் எந்த வகை?
சிவப்பா. மேற்கா. கிழக்கா. யார் இவன்?
எதிரே இன்னுமொருவன் வருகின்றான்.
தலை மொட்டையடித்து இராணுவ உடையணிந்த சிப்பாயைப் போல் , யார் இவன்?
தோற்தலையர்களில் ஒருவனோ.
இவனும் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பவன். வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பவனைக் கண்டதும் இவன் இதழ்களில் ஏளனம் கடந்ததொரு. புன்னகையாகத்தானிருக்க வேண்டும்.
புன்னகையைத் தொடர்ந்து வார்த்தைகள்.
'பாக்கி.'
வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பவன் இவை எதனையுமே கவனிக்கவில்லை தொடர்ந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டுதானிருக்கின்றான்.
யார் இவன்?
'பாக்கி' என்றழைக்கப்படுகின்றானே. பாகிஸ்தானைச் சேர்ந்தவனாகயிருப்பானோ? இந்தியனா?
பாகிஸ்தானைச் சேர்ந்தவனா? அல்லது. யார் இவன்?
இவன் ஒரு மனிதன்.
நிச்சயமாகத் தெரிகின்றது.
ஒரு தலை, இரு கண்கள், இரு கைகள், இரு கால்கள்.
நிச்சயமாக மனிதன்தான்.
மனிதன் என்று சொல்வதால் பெண்விடுதலைப் பிரியர்களே சண்டைக்கு வந்துவிடாதீர்கள். மனிதர்களில் ஒருவர் என்று சொல்லும்படி வற்புறுத்திவிடாதீர்கள். சந்தேகமில்லாமல் இவன் ஒரு மனிதன் தான் அதில் மட்டும் சந்தேகமில்லை. அது சரி அப்படியென்றால் இவன் அந்த வகையான மனிதன். ? அட அவனிற்குத்தான் அவனைப் பற்றிச் சந்தேகமென்றால் உங்களிற்கும் வந்து விட்டதா? நதி மூலம் ரிஷிமூலம் தான் தெரியவில்லையென்று பார்த்தால், இந்த மண்ணில் மனித மூலம் கூடத் தெரியவில்லை.
- தாயகம் ! 15.4.1994 , பதிவுகள்.காம் -