முன்னுரை
உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது. கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால சமூகத்தினை இனக்குழு, நாடோடி, நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது. நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப அமைப்பு உருவானது. இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிருவாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது. இதுவே தாய் வழிச்சமூகமாகும். நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தான் தாய்வழிச் சமூகம் நிகழ்ந்தது. இச்சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்ப அரசியல், பொருளாதாரம், உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக இம்மானுடச்சமூகம் திகழ்கிறது. நிலவுடைமைச் சமூகத்திலிருந்து பெண் அடிமைப்படுத்தப்பட்ட நிலையினையும், சிலப்பதிகாரத்தில் பெண் விற்கப்படுதலையும் பற்றி ஆராய்ந்தறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தாய்வழிச் சமூகமும், தந்தை வழிச் சமூகமும்
தாய்வழிச் சமூக அமைப்பில், பெண்ணுக்கு முதன்மை இடம் கொடுக்கப்படுகிறது. மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் உயிர் நாடியாகப் பெண் திகழ்வதோடு, சமுதாயத்தின் முக்கிய ஆக்கப் பணிகளிலெல்லாம் பெண் முதன்மை இடம் பெற்றிருந்தாள் என அறிய முடிகின்றது. பெண் ஆணைச் சார்ந்து இருப்பதில்லை. சந்ததித் தோற்றம் தாயை முன்வைத்து அறியப்படுகிறது. பெண் வேட்டையாடியபோது குழந்தைகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தாள். தந்தை என்பவர் இல்லை. இந்நிலையிலேயே தாய்வழிச் சமூகம் நிகழ்ந்திருந்தது. தந்தை வழிச் சமூக நிலை குறித்துச் சமூகவியல் அறிஞர்கள், பெண்ணியலாளர்கள். ''பெண்ணின் துணை நிலைக்கும் தனிச்சொத்துரிமைக்கும் இடையிலான உறவின் மூலம் தான் தந்தைவழிச் சமூகம் நிலைப்படுகிறது எனக் கூறுகின்றனர். தந்தை வழிச் சமூகமானது ஆண் ஆதிக்கத்தை உள்ளடக்கிக் கொண்டு பெண், இளையோன், குழந்தை, அடிமை, குடும்பப் பணிப்பெண் ஆகியோர் மீது ஆட்சி செய்து அவர்களை அடக்குகிறது எனக் (ரூபின் - 1975, ஏங்கல்ஸ் - 1877)'' கூறுகின்றனர். இந்நிலையில் தாய்வழிச் சமூகத்தில் பெண் சுதந்திரமாக வாழ்ந்திருந்ததையும், தந்தைவழிச் சமூகத்தில் தான் பெண் அடிமையாக்கப்படுவதும் தெளிவாகின்றது.
குடும்பம், பாலின அடிப்படையில் பெண்ணடிமை நிலை
மரபார்ந்த ஆணாதிக்கம், பொருளாதார உற்பத்தியில் பெண்ணின் உழைப்பை அங்கீகரிக்கின்ற போதிலும், அதிகமாக வீட்டுப்பணியில் ஈடுபடுவதையே சமூக நியதியாக்கியிருக்கிறது. எனவே பெண்களின் உழைப்பு ஆணாதிக்கச் சமுதாயத்தைச் சார்ந்தது. ஆண் ஒக்கலே என்பார் குடும்பத்தில் பெண் வீட்டுப் பணி செய்தல் என்பது இயற்கையானது, உலகளாவியது, தேவையானது என்று கூறுகிறார். அதை விளக்க அவர் மூன்று கருத்துக்களை முன் வைக்கிறார். உயிரியல் அடிப்படையில் ஆண் வேட்டையாடச் செல்லுதல், பெண் வீட்டில் பணிபுரிதல், மானுடவியலடிப்படையில் ஆண் மிகவும் பலம் வாய்ந்தவன். கருத்தரிக்கும் போதும், குழந்தையைப் பாதுகாக்கும் போதும் பெண் பலம் குறைந்தவளாக இருக்கிறாள். பெண் வீட்டில் பணி செய்வதற்கும், ஆண் வெளியில் வேலை செய்வதற்கும், பாலினத் தொன்மம் காரணம் எனக் கூறுகிறார். இது சமூக அமைப்பை மறுஉற்பத்தி செய்கிறது. எல்லாச் சமூகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமூகவியலடிப்படையில் பணி வேறுபாடு பாலினம் சார்ந்தது. குடும்பத்திற்குத் தேவையானது.
பாலினம் என்பது உயிரியல் அடிப்படையானது. ஆண், பெண் அமைப்பைக் குறிக்கின்றது. இவ்வேறுபாட்டில் பெண் ஆணுக்குத் துணைவியாக்கப்படுகிறாள். ஓர் ஆண் பெண்ணை விரும்புவது வரவேற்கப்படுகிறது. தாய்மை புனிதமாகக் கருதப்படுகிறது. பெண் உற்பத்திக் களமாக எண்ணப்படுவதில்லை. பெண், ஆணைச் சார்ந்து வாழ்கிறாள். இவை யாவும் ஆண் பெண் பாலின வேறுபாடாக ஆணாதிக்க அமைப்பு கருதுகிறது. பாலியல் வேறுபாட்டில் ஆண், பெண் ஏற்கும் பணியை இயற்கையில் வேறுபாடுடையதாகவும், கற்பிக்கப்படுகிறது.
குடும்பத்தில் பெண் ஏற்கும் இயற்கையான பணிவேறுபாடு குழந்தை பெறுவதையும், வளர்ப்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இதற்கு ஆண், பெண் மற்றும் குழந்தைகள் மீதும் செலுத்தும் அதிகாரம் காரணம். அதனால் பெண்ணின் உழைப்பையும் உற்பத்தியையும் ஆண் தன் ஆளுகையின் கீழ்க்கொண்டு வந்து பெண்ணைத் துணைநிலை நிறுத்துகிறான்.
முதலாளித்துவ அமைப்பில் பெண் அடிமையாக்கப்பட்ட நிலை
நிலவுடைமைச் சமூகம் வளர்ச்சி பெற்ற பின்பு, குடும்பம், பொருளாதாரம், அரசு நிறுவன அமைப்பு வரலாற்று அடிப்படையிலான ஆணாதிக்கப் போக்கினைப் பற்றி ஏங்கல்ஸ் குறிப்பிடுவது வரலாற்றுக்கு முந்திய புராதனமான சமூகங்களில் பெண்ணுக்குச் செயலூக்கமான பங்கிருந்தது. அது பின்னர் வேளாண்மைச் சமூக மாற்றத்தால் புதிதாக உருவான குடும்பம், நிலவுடைமை, அரசு ஆகியவற்றால் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலைமையே பெண்ணுக்கான முழு வாழ்வாக அமையலாயிற்று என்று ஏங்கல்ஸ் கூறுகிறார்.
பெண் எல்லா இடங்களிலும் அனைத்துச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்டாள். நவீன முதலாளித்துவத்தில் மேலும் ஒடுக்கப்பட்டாள். பெண்கள் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களாய் நியமனம் செய்யப்பட்டு, சுரண்டப்பட்டார்கள், பலர் வீட்டு வேலை செய்பவர்களாய் மாறினர். பணம்,மதிப்பீடுகளை முடிவு செய்கிற போது பெண் வெளியே சென்று பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது. நாள் முழுவதும் செய்யப்படுகிற வீட்டு வேலைகளுக்குச் சம்பளமில்லாததால், அவள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போனது. முதலாளித்துவச் சமுதாயம் தேவை. இனவேறுபாடு போன்றே பாலின வேறுபாடும் முதலாளித்துவச் சமூகத்திற்கு முக்கியமாய் அமைந்து, பெண்கள் குறைந்த கூலிக்கு வரும் உழைப்பாளிகளாக்கப்பட்டு அவர்களைப் பயன்படுத்தி லாபம் பெறுவது முதலாளித்துவப் போக்காகிவிட்டது.
மார்க்சு, ஏங்கல்சு ஆகியோர் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தில் பெண்ணைப்பற்றி, பெண்ணின் சமூகத் தகுதி நிலையைப் பற்றி விளக்கும்போது, உயிர் உற்பத்தி செய்வதிலும், சமூகத்தில் உற்பத்தி சக்திகளை உருவாக்குவதிலும், சுதந்திரமாகவும் சமஉரிமை பெற்றும் வாழ்ந்து வந்த பெண்கள் மேற்கூறிய முதலாளித்துவத்தின் போக்கினாலும் தனிச் சொத்துரிமையாலும், துணை நிலையினராகவும், சார்பு மாந்தராகவும் மாறிப் போயினர். இம்மாற்றம் வரலாற்று நிகழ்ச்சியில் தவிர்க்கவியலாத மாற்றமாகியது என விளக்குகின்றனர்.
தொல்காப்பிய காலச்சமூகத்தில் பெண்ணடிமை
பண்டைய கால மன்னர் சமுதாயக் கட்டமைப்பினை வெளிப்படுத்திய இலக்கண நூலான தொல்காப்பியம் அகம், புறம் சார்ந்த செயல்பாடுகளையும் எடுத்தியம்புகிறது. அன்றைய காலத்தில் அதிகாரத்தில் இருந்தோர்கள், பெண்களுக்கெனப் பல கட்டுபாடுகளை சமூக பண்பாடுகளாய் விதித்து, பெண்களுக்கு எதிரான பல்வேறு வகையான ஒடுக்குமுறைகளையும், அரங்கேற்றியிருப்பதைத் தொல்காப்பிய இலக்கண வழியும் அறிய முடிகிறது.
பெண்ணிற்குரிய தகுதிகளாக,
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப (காவு-96)
இந்நூற்பாவின் வழி பெண்களுக்கு அச்சம், நாணம், மடம் ஆகிய மூன்றும் அடிப்படைத் தகுதிகளாக இலக்கணம் வகுத்துள்ளது.
ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னயினுங் கடிவரை இன்றே (களவு-90)
இந்நூற்பாவில் ஒத்த தகுதியையுடைய தலைவனும், தலைவியும் எதிர்ப்பட்டு காதல் கொள்வர். இதில் தலைவனின் தகுதியைவிட தலைவியின் தகுதி மிகுதல் கூடாது என மேற்கூறிய நூற்பா குறிப்பிடுகின்றது. இதன்மூலம் ஆண்களின் தகுதியை விட பெண்களின் தகுதிகள் குறைத்து தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுவதன் மூலம் ''பெண்ணடிமைத்தனத்தின்'' மூடத்தனத்தினை நன்கு அறிய முடிகிறது.
காதலின் குறிப்பு, இடம் ஆகியவற்றால் வேட்கைப் புலப்படபெண் நிற்பது இயல்பு என்றும், நாணம், மடம் பெண்மைக்குரியதால், பெண்ணானவள் காதல் நிகழும்போது துவக்கத்தில் பேசக்கூடாது என்பதனை,
காமத் திணையிற் கண்நின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மையை ஆகலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வயின் ஆன (களவு - 106)
என்ற நூற்பா வெளிப்படுத்துவதன் மூலம் அச்சம், மடம், நாணம் என்ற கோட்பாட்டினில் பெண்ணினத்திற்கு எதிரான ஒடுக்கு முறையை - நிர்பந்தத்தை உருவாக்கிய சமுதாய நிலையை அறிய முடிகிறது.
சொல்லெதிர் சொல்லல் அருமைத் தாகலின்
அல்ல கூற்றுமொழி அவள்வயி னான (களவு-108)
தலைவன் சொல்லிற்கு எதிர்சொல் பேசுதல் அருமையானது எனக் கூறி, பின்னர் பேசாது நிற்பதே தலைவியிடம் நிகழும் நிகழ்வாகும் என்பதன் மூலம், தவறு செய்த தலைவனைப் பேசுதல் அருமையானது தான் ஆனால் பேசக்கூடாது என மறைமுகமாய்க் கட்டளையிடப்படுவதைக் காணமுடிகிறது.
உயிரினும் சிறந்தன்று நானே நாணிணும்
செயிர்தீர் காட்சிக் கற்புசிறந் தன்றெனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக் கிழவன் உள்வழிப் படினும்
தாவில் நன்மொழி கிளவி கிளப்பினும்
ஆவகை பிறவும் தோன்றுமென் பொருளே (களவு-111)
உயிரை விடச் சிறந்தது நாணம். நாணத்தை விடச் சிறந்தது கற்பு என்ற முன்னோர் கூற்றோடு தவறு செய்த தலைவனைத் தலைவி வருத்தமுற பேசாது ''கற்பு' எனும் ஒன்றுமில்லா நிலைக்குப் பொருள் கூறி, உயிரையும் விட சிறந்ததாக உடையது கற்பு என உருவாக்கி, அது முன்னோர் மொழியெனவும் தவறு செய்த கணவனை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது எனவும், அப்படிப் பேசினால் அது கற்பிற்கு இலக்கணமாய் இருக்காது என்றும் 'கற்பு' என்ற வெற்று இலக்கணத்தைப் பண்டைய ஆணாதிக்கச் சமுதாயம் பெண்களின் மீது திணித்து பெருங் கொடுமையைச் சுமத்தியதை அறிய முடிகிறது.
சங்க இலக்கியத்தில் பெண் அடிமை
சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் நிலப்பகுதிகளிலும் உணவு உற்பத்தி செய்து வாழ்ந்த மருதநிலப் பகுதிகளிலும் அடிமைமுறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதனைக் கூறும் பொழுது ''கொண்டி மகளிர்''- என்று இவர்களைப் பட்டினப்பாலையாசிரியர் குறிப்பிடுகிறார். கொண்டி- என்பதற்கு கொள்ளை என்று பொருள் கொண்டு, பிறர்நாட்டில் கொள்ளையிட்டுக் கொணர்ந்த பெண்டிர் எனறு ''கொண்டி மகளிர்'' - என்ற என்னும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர். இன்றையத் தமிழகமும், கேரளத்தின் பெரும்பகுதியும் மூவேந்தர்களாலும், பல குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டது என்பதை நினைவில் கொண்டால் பிறர் நாடு என்பது பெரும்பாலும் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியினையே குறிக்கும் என்பதனை உணரலாம். எனவே போரில் தோற்ற தமிழ் மன்னர்களின் மனைவியரும் அந்நாட்டு மகளிரும் அடிமைகளாகப் பகைவர் நாட்டில் பணிபுரிந்துள்ளனர் என்பது தெளிவு. முல்லைக்கலியில் (108:27-33) இடம்பெறும் ஒரு பாடல் மகளிரின் பணிகளைக் குறிப்பிடுகிறது. தன் நெஞ்சை இருப்பிடமாகக் கொண்டு தன்னை அடிமையாக்கித் தலைவன் ஒருவன் தலைவியிடம் கூறுகிறான். அவன் கூறியதைக் கேட்ட தலைவி அதற்கு மறுமொழியாக,
இளமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால் என் நெஞ்சம்
களமாகக் கொண்டு ஆண்டாய்; ஒர் கள்வியை அல்லையோ ?
நின்நெஞ்சம் களமாகக் கொண்டுயாம் ஆள, எமக்கு எவன் எளிதாகும்
புனத்துளான் என்னைக்குப் புகாஉய்த்துக் கொடுப்பதோ ?
இனத்துள்ளான் எந்தைக்குக் கலத்தொடு செய்வதோ?
தினைக் காலூன் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ?
உன் நெஞ்சை எனக்கு இருப்பிடமாகக் கொண்டு உன்னை அடிமையாக்குதல் எளிதான செயலாகுமா?
உன் நெஞ்சானது தினைப்புனத்தில் இருக்கும் என் தமையனுக்கு உணவு கொண்டு சென்று கொடுக்குமா? பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டிருக்கும் என் தந்தைக்குக் கறவைக் கலன் கொண்டு செல்லுமா? அறுத்த திணைத்தாளிடையே என் தாய் மேயவிட்டிருக்கும் கன்றை மேய்க்குமா? என்று வினவுகிறாள்.
மேய்ச்சல் நில வாழ்க்கையில் தனிச்சொத்துரிமை உருவாகிறது என்ற சமூகவியல் உண்மையின் அடிப்படையில் மேற்கூறிய வரிகளை நோக்கினால் தனிச் சொத்துரிமையின் துணைப்படைப்பாக அடிமை முறை உருவாகியுள்ளதை நாம் உணரலாம்.
சிலம்பில் மாதவியை விலைக்கு விற்றல்
பெண்களைக் காலந்தோறும் அடிமையாக்கியதோடு மட்டுமல்லாமல், பெண்ணைப் பொருளாகப் பார்க்கக்கூடிய சமூகமாக ஆணாதிக்கச் சமூகம் இருந்தது. இதனை அறிந்த மார்க்சு பெண்ணை இன உற்பத்திக் கருவியாகவும், பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகம் இது என்று கடுமையாக ஆணாதிக்கச் சமூகத்தைச் சாடுவார்.
பெண்ணைப் பொருளாகப் பார்க்கக்கூடிய நிலை சிலப்பதிகாரக் காப்பியத்தில் காணலாம்.
சிலப்பதிகார அரங்கேற்று காதையில் மாதவி என்பவள் தனது நடனக் கலையை சான்றோர்கள் கூடியிருக்கும் அவையில் அரங்கேற்றினாள்.
இலைப்பூங்கோதை, இயல்பினின் வழாஅமை
தலைக்கோல் எய்தித் தலை அரங்குஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒரு முறையாகப் பெற்றனள் (சிலம்பு 160-164)
புகார் நாட்டின் நடைமுறையான இயல்பினின்றும் வழுவாமல் அரசனின் பச்சை மாலையையும், தலைக்கோலி என்ற பெயரையும் மாதவி பெற்றனள். தலையரங்கிலே ஏறி ஆடிக்காட்டி நாடகக் கணிகையர்க்குத் தலைவரிசை என நூல்கள் விதித்த முறைமையின்படி ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப் பொன்னை ஒருநாள் முறையாகப் பெறுவள் என்ற தகைமையையும் அவள் பெற்றனள்.
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த
வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை
மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு (சிலம்பு 165-167)
மாதவியின் நாட்டியக் கலையினைப் பாராட்டி அவருக்கு அளிக்கப்பட்ட மாலையினை யார் ஆயிரத்து எட்டுப் பொற்காசுகள் கொடுத்து வாங்குகிறார்களோ அவர்களுக்கு மாதவி மனைவியாவாள்.இது எப்படி இருக்கிறது என்றால் இன்றைய சூழலில் திருவிழாக்கள் நடைபெறும் நேரத்தில் ஒரு பொருள் வாங்கினால் மற்றொரு பொருள் இலவசம் என்பது போல் இருக்கிறது.பெண்ணைப் பெண்ணாகப் பார்க்காமல், பெண்ணை அடிமையாக்கி ஒரு பொருளாகப் பார்க்கக் கூடிய சமூகமாகச் சிலப்பதிகார காலச் சமூகம் இருந்திருக்கிறது.
முடிவுரை
நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தாய் வழிச் சமூகம் நிகழ்ந்திருந்தது. நிலவுடைமைச் சமூகம் நன்கு வளர்ச்சி பெற்றக் காலத்தில் தந்தை வழிச் சமூகம் உருவாகிய பிறகு தான் முதன் முதலில் பெண் கவரப்பட்டு அடிமைப்படுத்தப்படுகிறாள். பெண் உடலமைப்பு, பாலினம் அடிப்படையிலும், குடும்பம், சமூக, அரசியல், பொருளாதாரம், நிறுவனங்களில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்படுதலும், பெண்ணை இன உற்பத்திக் கருவியாகவும் பொருளாகவும், பார்ப்பதாலும் நிலவுடைமைச் சமூகம் முதல் இன்று வரை பெண்கள் அடிமைபடுத்தப்பட்டு உள்ளனர். ஆணாதிக்கத்தின் கடுமையான அடக்கு முறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் பெண்கள் போராடி வருகின்றனர். இதன் காரணமாகப் பெண்ணியப் புரட்சியாளர்கள் தோன்றினர். ஆதலால் பெண்ணியத்திற்கான விடுதலை இன்று இருபது விழுக்காடு எட்டியுள்ளது.
பார்வை நூல்கள்
1. அரங்க. மல்லிகா - தமிழ் இலக்கியமும், பெண்ணியமும்.
2. அடியார்க்கு நல்லார் உரை - சிலப்பதிகார மூலமும், உரையும்.
3. காரல் மார்க்சு - மூலதனம்.
4. கணேசையர் பதிப்பு (பதி), 2007, - தொல்காப்பியம் பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினியருரையும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
5. ஆர். சிவசுப்பிரமணியன் - தமிழகத்தின் அடிமைமுறை
அனுப்பியவர்: சத்யராஜ்; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.