கனடாவில் மார்க்கம் விவசாயக் கண்காட்சி – 2024 - குரு அரவிந்தன் -
அண்மையில் ரொறன்ரோவில் மார்க்கம் விளையாட்டரங்கில் கண்காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. கனடாவில் கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பமாகி இருக்கின்றது. அத்துடன் குளிரும் வந்துவிட்டது. மரங்கள் எல்லாம் நிறம் மாறி இலைகளை உதிர்க்கத் தொடங்கி விட்டன. இலை உதிர்க்குமுன் பச்சை, மஞ்சள், சிகப்பு, ஒரேன்ச் என்று பலவிதமாக மரங்களின் இலைகள் மாறி இருப்பதைப் பார்ப்பது மிக அழகாக இருக்கும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு மாறுபட்ட காட்சியாகத் தெரியும். இங்கே உள்ள ஊசியிலை மரங்கள் பனிக்காலத்தில் இலை உதிர்ப்பதில்லை, அவை மாற்றமின்றி அப்படியே இருக்கும்.
வெளியரங்குகளில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் இனி பனிக்காலம் முடியும் வரை அனேகமாக நடைபெற மாட்டாது. மீண்டும் ஏப்ரல் மாதத்தில்தான் வெளியரங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறுவர்களுக்கான உள்ளக அரங்குகள் பல இருந்தன. விவசாயத்தை முதன்மைப் படுத்தி, அது சார்ந்த காட்சிப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள இளைய தலைமுறையினர் விவசாயம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், அவர்களுக்கு ஏற்றது போல காட்சிகள் அமைந்திருந்தன. இங்கு உற்பத்தியாகும் காய்கறிகளையும், மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களையும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்திருந்தனர். குறிப்பாக மேப்பிள் மரத்திலிருந்து பெறும் மேப்பிள் பாணியைப் பலரும் வரிசையில் நின்று வாங்கினார்கள். நன்றி சொல்லும் நாள், கலோவீன் தினம் போன்றவை வருவதால் பூசணிக்காயும் விற்பனையாகியது.