குழந்தைக் கவிஞர் அம்பி இன்று சிட்னியில் இயற்கை எய்தினார்! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -
ஈழத்து சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் கவிஞர் அம்பியின் காத்திரமான படைப்புகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரின் மறைவின் பின்னரும், அவருடைய படைப்புக்கள் குழந்தைகளின் நாக்கினில் தவழும். தமிழ் கூறும் நல்லுலகால் ஈழத்தின் தேசிய விநாயகம் என்றும் குழந்தை கவிஞன் என போற்றப்படும் கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகன் அவர்கள் தனது 94 வயதில் இன்று (28/4/24)இயற்கை எய்தினார்.
யாழ் பரியோவான் மாணவன் கவிஞர் அம்பி :
சிறுவர் இலக்கிய படைப்புக்களை தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் மண்ணிலும் படைத்த ஈழத்தைச் சேர்ந்த அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்கள் சிறுவர் இலக்கிய வரலாற்றில் காத்திரமான பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.
எளிமையும் தமிழின் அழகும் ஒருங்கே கூடியமையும் அவர் பாடல்கள் பல குழந்தைகளின் நாவில் இன்றும் தவழ்கின்றன. தமிழ் மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்தவர் கவிஞர் அம்பி.
இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் அம்பி இலங்கையில் வடக்கே நாவற்குழி சொந்த ஊராகும். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரி. யோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றி உள்ளார்.