ஆய்வு: சிலம்பில் மன்னர்களின் பழக்கவழக்கங்கள்! - முனைவர் மூ.சிந்து -
முன்னுரை
தனிமனிதனிடம் இயல்பாக அமையப்பெற்ற செயல் பழக்கமாகும். “பழக்கம்” என்பது பலநாளாகக் கற்கும் செயலாகும். இதைத் தொடர் வழக்கமாகக் கொள்ளும் நிலையாகும். பழக்கம் என்பது தனி மனிதனது நடவடிக்கை என்றும், வழக்கம் சமூகம் சார்ந்தாகவும் அமைகிறது. தனிமனிதனும், சமுதாயமும் ஒருங்கிணைந்து அவற்றால் வெளிப்படுவது பழக்கவழக்கமாகும்.இவை இயற்கையாகவும், செயற்கையாகவும் தோன்றக்கூடியது. மனிதனின் மனதில் தோன்றும் எழுச்சி, உணர்ச்சி,விருப்பு, வெறுப்போடு தொடர்புடையதாக அமையும்.
பழக்கம் – தனிமனிதனைச் சார்ந்த தொடக்க நிலை
வழக்கம் – சழுதாயம் சார்ந்த தொடர்நிலை
சிலப்பதிகாரம் மக்கள்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப் படுகின்றது. இந்நூலில் மூன்று நாட்டு மன்னர்களும், மக்களும் சிறப்பு பெறுகின்றனர். அரசனின் கோல் ஆட்சி யின் கீழ் வரும் மக்களாகச் சிலப்பதிகார மக்கள் இருந்தமையை உணரமுடிகிறது. அத்தகைய சிறப்புமிக்க மன்னர்களின் பழக்கவழக்கங்களை ஆராய்வதாக அமைகிறது. சிலம்பில் மன்னர்களின் பழக்கவழக்கங்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
முடிசூடல்
வரைவுரைத்தல் (நன்மொழிகூறல்)
வாழ்த்துரைத்தல்
திறைசெலுத்துதல்
முரசறைதல்
பறையறைதல்
சிறைவீடு
முடிசூடல்
அரசர்களின் வாழ்வில் முக்கிய நிகழ்வாக முடிசூடல் நிகழ்வு அமைந்திருந்தது. இந்நிகழ்வு வயது காரணமாகவோ, இறப்பிற்குப்பிறகு, புதியவருக்கோ தன் மகனுக்கோ முடிசூட்டி தன் பதவியை ஒப்படைப்பதாகும். சிலம்பில் அரசனது ஆட்சிக்குப் பிறகு அவரது இளவல்கள் பதவியை ஏற்று நடப்பது சுட்டப்படுகிறது.