எனது படைப்பு அனுபவம்! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
- 18.7.21 'மெய்நிகர்' - திருப்பூர் கனவு இலக்கியப் பேரவை நிகழ்வுக்கான பதிவு -
எழுத்தாராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர் எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். ஆனால் எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும், படிப்பறிவும், அனுபவங்களும், சந்திக்கும் மனிதர்களும், மோதிக்கொள்ளும் கருத்தாடல் நிகழ்வுகளும் எழுத்தாளர் ஒருவரை உருவாக்க உதவும் என்பது எனது படைப்பு அனுபவத்தில் தெரிந்து கொண்ட விடயங்களில் சிலவாகும்.
எனது இளவயதில் எங்கள் வீட்டில் எனது தகப்பனார் திரு குழந்தைவேல் நூற்றுக்கணக்கில் பல தரப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார். சிறுவயதில்,எங்களுக்குத் தெரிந்த தேவார திருவாசக புத்தகங்களில் எனது 'புத்தகப்படிப்பு' ஆரம்பித்தது.கால கட்டத்தில அப்பா வாங்கி வரும் கல்கி கலைமகளுடனும் வாசிப்பு தொடர்ந்தது. அந்த அனுபவங்கள்,பல விதமான எழுத்துக்களைப்; படிக்கும் உணர்வையும் எழுத்தை ரசிக்கும், பூசிக்கும் உணர்வையும் எனது இளவயதில் எனக்குத் தந்தது என்ற நினைக்கிறேன்..அந்த அனுபவங்களால்,எனது அடிமனதில் எழுத்தாளராக வரவேண்டும் ஒரு உந்துதல் பிறந்திருக்கும் என்றால் அது மிகையாகாது.
அப்பாவின் புத்தகங்களில் அவ்வப்போது மனதைத் தட்டிய விடயங்களுக்கான விளக்கத்தைப் பிற்காலத்தில் பல துறைகளில் நுழைந்த எனது வாசிப்பு புரிந்து கொள்ள உதவின. அவை பொதுவான அறிவு தேடல் சார்ந்தவை மட்டுமல்ல. சமூகத்தில் ஆண் பெண்களின் நிலைப்பாடுகள்,மதம்,சாதி,இனம்,பற்றிய சிக்கலான கருத்துக்கள் என்பனவும் அடங்கும்.
இதுவரை பதினெட்டுத் தமிழ்ப் புத்தகங்களையும் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் முக்கியமாகப் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுத, இன்னும் எழுதிக் கொண்டிருப்பதற்கு எனது இலக்கியப் படைப்பு வரலாறு நீட்சி செய்கிறது. எனது படைப்பு வரலாறு பல திருப்பங்களைக் கண்டதாகும. எனது படைப்பனுபவம், எனது சிறுவயதில் ஒரு கட்டுரைப் போட்டியில் கிடைத்த பரிசுடன் ஆரம்பித்திருக்கலாம் என்ற நினைக்கிறேன். அந்தக் கட்டுரைப் போட்டிக்கு முன் ஏதோ ஒரு தமிழ்ப் பத்திரிகையில் சிறுவர் பகுதியில் ஒரு சிறுகவிதை எழுதியது ஞாபகமிருக்கிறது.