மெய்நிகரில் மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வு !! இம்மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பம் ! - முருகபூபதி -
அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாகியிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது. தமது தாயகத்தில் கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் ஈடுபட்டவர்கள் புகலிடம் நாடி இங்கு வந்த பின்னரும் உள்ளார்ந்த ஆற்றல்கள் வற்றிப்போகாமல் இயங்கியமையால் தமிழ் கலை , இலக்கிய படைப்புலகத்தில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குகிறது.
அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கியம், இதழியல், வானொலி , தொலைக்காட்சி முதலானவற்றை மதிப்பீட்டிற்குட்படுத்தும்போதுதான் புலம்பெயர் இலக்கியம் இங்கும் உலகளவிலும் எவ்வாறு பேசுபொருளானது என்பதையும் அறியமுடியும். இந்தியாவிலிருந்து ஒரு காலத்தில் இலங்கைக்கும் ஃபிஜி மற்றும் ஆபிரிக்காவிற்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றிருந்தாலும், இலங்கையிலிருந்து தொழில் நிமித்தமும் கல்வியின் பொருட்டும் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், 1983 இல் இலங்கையில் இனவாத வன்செயல் வெடித்ததன் காரணமாக தமிழர்களில் நிகழ்ந்த பாரிய புலப்பெயர்வின் பின்னர்தான் அவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கிய வாதிகளின் இயக்கத்தினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பேசுபொருளானது.