(இறுதிப்பகுதி) ரஷ்ய ,உக்ரைன் யுத்தச் சிந்தனைகள்! - ஜோதிகுமார் -
(11)
ரஷ்யா-உக்ரைன் போரை ஒரு சமாதான நிலைக்கு கொண்டு வருவதில் பிரான்சின் மெக்ரோன் முதல் அமெரிக்க பைடன் வரை முயற்சி எடுத்ததாய் கூறப்பட்டாலும் அம்முயற்சிகளின் மொத்த பெறுபேறு அல்லது மொத்த உள்நோக்கம் எவ்வகைப்பட்டது - இது போரை மேலும் தூண்டிவிட திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளா அல்லது உண்மை சமாதான விருப்பம் கொண்ட பேச்சு வார்த்தைகளா என்பதெல்லாம் கேள்வி குறிகளாகின்றன. இருந்தும் இப்பின்னணியில் துருக்கியும் இஸ்ரேலும் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனலாம். காரணம், மேற்படி இரு நாடுகளின் நிலைமைகளும், இப்போரால் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்கு தள்ளப்பட்டு, சற்றே சங்கடத்துக்குள் அமிழ்த்தப்பட்டவைதான் என்பதில் சந்தேகமில்லை.
உக்ரைன் - ரஷ்ய போர், இஸ்ரேலின் இருப்பையும் அதே போல் துருக்கியின் இருப்பையும், ரஷ்ய மூர்க்கத்தனத்திற்கூடு அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கும் அதேவேளை, மறுபுறத்தே, ரஷ்யாவுக்கு எதிராக செயல்படுமாறு மேற்கு அவற்றிற்கு தரும் அழுத்தங்களையும் அவை எதிர்கொள்ள நேர்கின்றது. அதாவது துருக்கி எவ்வாறு தனது போர்போஸ் கால்வாயை ரஷ்ய கப்பல்களின் உள்நுழைகைக்கு தடை விதிக்கும்படியான பல்வேறு கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுகின்றதோ, அதே போன்று இஸ்ரேலின் நிலைமையும் தர்மசங்கடத்துக்குள்ளாகின்றது எனலாம்.
Montrex ஒப்பந்தத்தின் கீழ் துருக்கி பல்வேறு விதமான சலுகைகளை பெறும் அதே நேரம் அது அநேக கடப்பாடுகளையும் சுமக்க நேரிடுகிறது – (இது தனியாக வாதிக்கத்தக்க ஒன்று). போர்போஸ் கடல்வழியை (கால்வாயை) துருக்கி அடைத்து விட்டால் அது சர்வதேச சட்டத்தை மீறிய செயலாக கருதப்பட்டு, ரஷ்யாவின் தாக்குதலுக்கு உட்படுவது நிச்சயம் என்ற நிலைமையில், தன் பாதுகாப்பை மையப்படுத்திக் கொண்டு துருக்கி, சுவர் மேல் பூனையாக நின்று ஆடும் நடனம் உலக அரங்கில் வினோதமானது.