1
“உக்ரைன்-ரஷ்ய அரசியல் யுத்தமானது, மாறிவரும் ஒரு உலக ஒழுங்கினை, வெளிப்படுத்துவதில் ஓர் சீரிய சமிக்ஞையை தரவே செய்கின்றது” என்பது இன்றைய பரவலான அபிப்ராயமாக இருக்கின்றது. நலிவடைந்து போயுள்ள தன் பொருளாதாரத்தினை, முட்டுக்கொடுத்து, முன்தள்ளி, அதனை ‘இன்றைய’ சீன அல்லது ரஷ்ய பொருளியல் பூதங்களோடு, (இயல்பான சந்தை பொருளாதார) விதிகளுக்கு ஏற்ப, மல்லுக்கட்ட செய்ய முடியாத ஒரு நிலையில், ஒரு கொவிட் பெருந்தொற்று அல்லது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பொருளாதார தடை அல்லது இவை இரண்டினூடும் கிடைக்கப்பெற்ற, உலகின் உற்பத்தி அல்லது வினியோக பாதைகளை தடம்புரள செய்து, அதற்கூடாக ஒரு இயல்பான போட்டி நிலையை திட்டமிட்டு இல்லாதொழித்து, அதற்கூடே தன் கோடீஸ்வரர்களை காப்பாற்றி கொள்ளலாம் என்ற திட்டமும் பெரிதளவில் கை கொடுக்காமல் போன நிலையில், ஓர் உக்ரைனிய-ரஷ்ய யுத்தம், புதிதாய் ஓர் பெர்லின் சுவரை மீள கட்டமைத்து கொள்ள, வசதியையும் வாய்ப்பையும் தருவதாகவே உள்ளது என்பதன் அடிப்படையிலேயே, இப்பத்தியில், (பதிவுகளில்) நாம் இதுவரை எழுத துணிந்திருந்தோம்.
இதில் ஓரளவு உண்மை கசியவே செய்திருக்கலாம். ஆனால், இப்போது, ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும், சில விடயங்களை, நாம் நிதானமாய் மீட்டு பார்க்குமிடத்து, இப்படி ‘பெர்லின் சுவர்’ எழுப்பப்பட்டு வருவதுடன் மாத்திரமே, விடயங்கள் மட்டுப்படுத்தப்பட்டு போவதாக இல்லை என்ற உண்மையும் இன்று மேல்நோக்கி கிளம்புவதாகவே இருக்கின்றது. அதாவது, பிரச்சினைகளின் அடி வேர் இன்னமும் ஆழமாக கிளைத்து பாய்வதாகவே உள்ளது. இது, உக்ரைன் யுத்தத்தை பொறுத்தும் சரி-அல்லது அல்லலுறும் அமெரிக்காவை பொறுத்தும் சரி-பிரச்சினையின் அடிவேர்கள் கிளைத்து பாய்வதாகவே இருக்கின்றன.